மிக்ஸி நீண்ட நாள் நீடிக்க வேண்டுமா? மின்சாரம் முதல் சுத்தம்வரை தெரிந்திருக்க வேண்டிய பராமரிப்பு டிப்ஸ்!

மிக்ஸி மோட்டார் கெடாமல் நீடிக்க, லோ வோல்டேஜ் தவிர்த்து சரியான அளவு பொருட்கள் மட்டும் நிரப்பி, இடைவெளியுடன் அரைத்து, பிளேடு-ஜார் ரப்பர் இணைப்பை அடிக்கடி பரிசோதிக்க வேண்டிய அவசியமான வழிமுறைகள்
mixer-grinder-maintenance
mixer-grinder-maintenance
Updated on

மிக்ஸி இல்லாத வீடே கிடையாது எனலாம். மிக்ஸி இருந்து விட்டால் மட்டும் போதுமா முறையாக பராமரிக்க இதையெல்லாம் செய்யலாம். 

மின்சாரம் லோ வோல்டேஜ்  ஆக இருந்தால் மிக்ஸியை உபயோகிக்க கூடாது மோட்டார் கெட்டுவிடும்.

மிக்ஸியில் மூன்றில் இரண்டு பங்குதான் சாமான் நிரப்பவேண்டும் அதிகம் போட்டால் விரைவில் பழுதாகிவிடும்.

மிக்ஸியை தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடச் செய்யக்கூடாது. அரைக்கப்படும் உணவு பொருள் அதிக அளவு திடமானதாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதலில் மிக்ஸி பாத்திரத்தினுள் அரைக்கப்பட வேண்டிய தானியங்களை சேர்த்து விட்டுதான் மிக்ஸியை ஓட செய்து அரைக்க வேண்டும், பிறகு அரைக்க வேண்டிய தானியங்களை சேர்க்கக் கூடாது.

திடமான பொருட்களை அரைக்கும்பொழுது முதலில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக்கொண்டு பிறகுதான் அரைக்கப்பட வேண்டிய தானியங்களையோ உணவுப் பொருட்களையோ பாத்திரத்தினுள் போட வேண்டும்.

உணவு தானியங்களை மிக்ஸியில் சேர்த்தவுடன் மேல் பகுதியை மூடிவிட வேண்டும் இல்லையானால் மிக்ஸி பிளேடு திடீரென்று சுழலும்போது அரைவை தானியங்கள் வெளியில் தெறித்து பாழாகி விட வாய்ப்பு இருக்கிறது.

திடமான உணவுப் பொருட்களை அரைக்கின்ற பொழுது பிளேடில் சிக்கிக்கொண்டு பிளேடு சுழற்சியை தடை செய்யும் அது போன்ற சமயங்களில் மிக்சியின் ஓட்டத்தை தடை செய்துவிட்டு கைகளால் அந்தப் பொருட்களை சரி செய்ய வேண்டும். எவர்சில்வர் ஸ்பூன் கரண்டி கொண்டு செய்தால் பிளேடின் முனை மழுங்கிவிடும்.

மிக்ஸி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது மேல் மூடியை அழுத்தமாக இடது கையால் அழுத்திக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் மிக்ஸியின் மேல் மூடி கழன்று ஜாரினுள்  உள்ள பொருட்கள் வெளியே சிதற வாய்ப்பு ஏற்படும்.

மிதமான பொருட்களை மிக்ஸி பாத்திரத்தின் பாதி அளவுதான் நிரப்ப வேண்டும் திரவமான உணவு பொருட்கள் இருந்தால் முக்கால் பகுதி நிரப்பலாம்.

உணவுப் பொருட்களை அரைத்து முடித்தவுடன் மிக்ஸி பாத்திரத்தின் முக்கால் பகுதி வரை தண்ணீரை நிரப்பி ஓடவிட்டு கழு வேண்டும். பிறகு இளம் சூடான தண்ணீருடன் சோப்பு சேர்த்து மிக்ஸியை சில வினாடிகள் ஓட செய்து கழுவிட வேண்டும்.

தூய்மையான துணியினால்  பிளேடு பாத்திரம் வாஷர் இவற்றை துடைத்து வைத்துவிட வேண்டும் இதுபோல் செய்தால் துர்நாற்றம் வருவதை தவிர்க்கமுடியும்.

சூடான பொருட்களை மிக்ஸியில் அரைக்க கூடாது. அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதை கவனித்து இடைவெளிவிட்டு அரைக்கவேண்டும்.

அரைக்கும்போது பிளேடுகள் லூசாக உள்ளதா என்பதை கவனித்து டைட் செய்து கொள்ளவேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் அதை சரி செய்துவிட்டு பிறகுதான் அரைக்கும் பொருளைச் சேர்த்து அரைக்க வேண்டும்.

ஜாரின் அடிப்பகுதி ரிப்பேர் ஆகி மிக்சியின் அடிப்பகுதியில் தண்ணீர் கசிந்து இருந்தால் உடனே ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லை என்றால் மோட்டாரில் இறங்கி மிக்சி பழுதாகிவிடும்.

மிக்ஸியின்  ஜாரின் அடி பாகத்தில் ரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பகுதியில் சரியாகப் பொருத்தப்பட வேண்டும். இல்லை என்றால் மிக்ஸி பழுதாகிவிடும்.

இப்பொழுது நிறைய கம்பெனி மிக்சியில் பிளேடு ஜாருடன்  சேர்ந்தே உள்ளே பொருத்தப்பட்டுள்ளது. அதனால் கழுவி எடுக்கும் பொழுது ஜாரில் உள்ள பிளேடை நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.

அரைக்கும்பொழுது அதை திறந்து பார்ப்பதோ தண்ணீர் ஊற்றுவதோ கூடாது. மிக்ஸியை நிறுத்தி விட்டுதான் இதைச் செய்யவேண்டும்.

இட்லிக்கு மிக்சியில் அரைக்கும்போது முதல் நாளே ஊறவைத்து அரைத்தால் மிக சீக்கிரமாக அரைத்து விடலாம். இல்லை என்றால் ஐஸ்வாட்டரை சேர்த்து அரைக்கலாம். ஐஸ் வாட்டர் இல்லையென்றால் குளிர்ந்த நீரில் அரைத்தாலும் மிக சீக்கிரமாக அரைத்து விடும். மிக்ஸியும் சூடாகாது.

இன்வெர்ட்டர் இருந்தால் நீண்ட நேரம் மிக்ஸியில் அரைக்க கூடாது அரைத்தால் மோட்டார் பழுதாகி போய்விடலாம்.

மிக்ஸியில் பொருட்களை அரைத்து முடித்த பிறகு சுத்தமாக ஒரு வெள்ளை துணியை வைத்து சோப்பு நீரால்நன்றாக துடைத்து பிறகு காய்ந்த துணியால் நன்றாக துடைத்து வைத்துக்கொண்டால் மிக்ஸி புதுசு போல் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com