

மோல் கிரிக்கெட் (Mole Cricket) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புள்ள பூச்சிகள் 'கிரையோடல்பிடோ' என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. புள்ள பூச்சி அல்லது தண்ணி பூச்சி என்று அழைக்கப்படும் இந்த பூச்சி இனம் பரிதாபகரமானது. ஏனெனில் இது யாருக்கும் தீங்கு விளைவிக்காது. தன்னை வேறு ஒரு உயிரினம் தாக்க வரும்போது இதனுடைய எதிர்ப்பு குறைவாக இருப்பதோடு, தனக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளாது என்பதால் புள்ள பூச்சி பரிதாபகரமாக பார்க்கப்படுகிறது.
ஆனாலும் இந்த புள்ள பூச்சியை தொந்தரவு செய்தால் கடிக்கக் கூடிய தன்மை கொண்டது. இதனால் கடித்த இடத்தில் அதிகமான வலி ஏற்பட்டாலும் வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அதெல்லாம் விடுங்கப்பா! எனக்கு தேவை புள்ள பூச்சியை அடிச்சா குழந்தை பிறக்குமா? பிறக்காதா அதுக்கான காரணத்தை பார்ப்போமா! விவசாயிகளின் நண்பனாக மோல் கிரிக்கெட் பூச்சி இருப்பதால் இதனை காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நம் முன்னோர்கள் புள்ள பூச்சியை அடித்தால் குழந்தை பிறக்காது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.
புள்ள பூச்சியை திருப்பி போட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் இதனால் திரும்ப முடியாது. மேலும் இது காலை ஆட்டுவதைப் பார்த்தால் ஒரு குழந்தை காலை ஆட்டுவது போல இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
புள்ள பூச்சிகள் மண்ணுக்கடியில் கூடு கட்டி வாழ்வதால் இந்த பூச்சி இனம் மண்புழுக்கள் மற்றும் எறும்புகளைப் போல உழவர்களுக்கு மண்ணை கிளறி விவசாயம் செழிக்க உதவி புரிவதால் உழவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது.மண்ணைத் தோண்டுவதற்காக கத்தி போன்ற வலுவான முன்னங்கால்கள் இந்த புள்ள பூச்சிக்கு உண்டு.
இதனால் தான் நம்முடைய பெரியவர்கள் புள்ள பூச்சியை அடிக்க வேண்டாம் என்ற 'Myth'யை உருவாக்கி இருக்கிறார்கள். கருணை அடிப்படையில் இதனை காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் சாதாரணமாக கூறினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதால் புள்ள பூச்சியை அடித்தால் குழந்தை பிறக்காது எனக் கூறியிருக்கிறார்கள்.
என்ன வேணா இருக்கட்டும்ங்க! ஒரு உயிரை கொல்வது அடுத்த உயிருக்கு வேலை இல்லைங்க. உழவர்களின் நண்பனாய் இருக்கிற புள்ள பூச்சியை இனிமே அடிக்காதீங்க!