

மழைக்காலத்தில் சமைத்து உணவுகள் புட் பாய்சன் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனை 'தவிர்க்க சந்தையில் இருந்து வாங்கி வரும் பழங்கள், காய்கறிகளின் மேற்பரப்பில் மண், பூச்சிக்கொல்லி எச்சங்கள் அல்லது கிருமிகள் இருக்கலாம்.
எனவே, சமைப்பதற்கு அல்லது சாப்பிடுவதற்கு முன்பாக காய்கறிகளையும் பழங்களையும் சுத்தமான குடிநீரில் நன்றாகக் கழுவுவது அவசியமாகும்.
சமைத்த மீதி சாதத்தை அப்படியே மூடி வைப்பது பலரது வழக்கம். மழைக்காலத்தில் சாதத்தை வெளியில் வைக்கும்போது ஈரப்பதமான சூழலில் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகி, வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடிய நச்சுக்களை வெளிப்படுத்துகின்றன. எனவே, சமைத்த சாதத்தை இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் அல்லது குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைத்துவிடுவது ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது.
பால், தயிர், பன்னீர் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் போன்ற உணவுப் பொருட்கள் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் மிக எளிதாகத் தரம் மாறக்கூடியவை ஆகும். மழைக்காலத்தில் பயன்படுத்திய உடனேயே இவற்றை மீண்டும் பிரிட்ஜில் சேமிக்க வேண்டும்.
மழைக்காலத்தில் நறுக்கப்பட்ட நீர்ச்சத்து மிகுந்த பழங்களை வெளியில் பல மணி நேரம் வைத்தால் கிருமிகள் மிக வேகமாகப் பரவிவிடும். எனவே அப்படி செய்வதை தவிர்க்க வேண்டும். மழைக்கால ஈரப்பதத்தால் பாக்டீரியா வளர்ச்சி காரணமாக உணவு எளிதில் புளித்துப் போய்விடும். எனவே, சமைத்த பருப்பு மற்றும் குழம்பு வகை உணவைச் சிறிய பாத்திரங்களுக்கு மாற்றி, அதன் சூடு ஆறியதும் உடனடியாகப் பிரிட்ஜில் சேமிப்பதே பாதுகாப்பான வழிமுறையாகும்.
தேங்காய் சட்னி, தேங்காய்ப் பால் சேர்த்த குருமா அல்லது தேங்காய் இனிப்புகள் சமைத்த 2 அல்லது 3 மணி நேரத்திலேயே கிருமித் தொற்றால் புளித்து, கெட்ட வாடை அடிக்கத் தொடங்கிவிடும். எனவே, இவற்றைச் சமைத்தவுடன் புதியதாக (Fresh) சாப்பிட வேண்டும். பிரெட், பன், கேக் போன்ற பேக்கரி பொருட்களுக்கும் இதே நிலை தான். இதனால் இவற்றை பயன்படுத்திய பின் கிளிப் கொண்டு நன்றாக மூடி, உலர்ந்த அல்லது குளிர்ச்சியான இடங்களில் வைப்பது மிகவும் நல்லது.
மழைக்காலத்தில் குளிர்ந்த நீர் குடிப்பதையும், குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் பரவும் ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் ஈ, காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு சுத்தமற்ற குடிநீரை பருகுவதே முக்கிய காரணமாகும்.
மழைக்காலத்தில் சுவாச கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது சில உணவுப் பொருட்களால் கூட ஏற்படலாம். ஆகவே காய்கறிகளில் கத்திரிக்காய், புடலங்காய், முள்ளங்கி, பூசணிக்காய், அகத்திக்கீரை, பழங்களில் திராட்சை, கொய்யா, வாழைப்பழம் போன்றவைகளை தவிர்க்கலாம்.
மழைக்காலத்தில் எளிதாக வரும் ஜலதோஷம் தவிர்க்க சின்ன வெங்காயம் இரண்டை,5 மிளகுடன் இரவில் மென்று தின்றுவிட்டு வெதுவெதுப்பான தண்ணீர் சாப்பிட்டு வருவது நல்லது.
மழைக்காலத்தில் வரும் மற்றொரு முக்கியமான உடல் உபாதை சேற்றுப் புண். இதற்கு காரணம் எப்போதும் நீரில் அங்குமிங்கும் அலைவதுதான். சேற்றுப்புண் வந்து விட்டால் பாதங்களின் அழகு கெட்டுவிடும் இதனைத் தவிர்க்க மருதாணி அல்லது கடுக்காய் தூள் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சள் கலந்து களிம்புபோல அரைத்து சேற்றுப் புண் மீது தடவிவர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இரவில் மிளகு, மஞ்சள் தூள், சாம்பிராணி போன்றவைகளை போட்டு புகை மூட்டம் போட்டு புகையை வீடுகள் முழுவதும் மற்றும் படுக்கை அறை முழுவதும் சுழச் செய்தால் ஈரப்பதம் காரணமாக அறையில் இருக்கும் நோய்க் கிருமிகள் அழிந்துவிடும்.
மழை காலத்தில் முகத்திற்கு கிரீம்களையோ, அழகு சாதன பொருட்களையோ அதிகம் பயன்படுத்தக் கூடாது. இளம் பெண்கள் எண்ணெய் தன்மை குறைந்த வானிஷிங் கிரீம்களை முகத்தில் தேய்த்து வரலாம். வயது அதிகமான பெண்கள் வைட்டமின் -ஈ கலந்த கிரீம்களை பயன்படுத்தலாம்.
அரைத்த தக்காளி கூழ், ஆரஞ்சு சாறு போன்றவைகளை பயன்படுத்தி மழை காலத்தில் முகம் கழுவலாம். சருமத்தில் எப்போதும் தண்ணீர் ஒட்டி இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் வெகு நேரம் கழித்து குளிக்க கூடாது. குளிக்கும் ஒவ்வொரு முறையும் தலையை நன்றாக துவட்டிக்கொள்ள வேண்டும்.
மழை காலத்தில் தலைமுடியை ஈரம் இல்லாத நிலையில் வைத்திருக்க வேண்டும். தலைமுடி நன்றாக உலராவிட்டால் ', டிரையர் 'பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கலாம். மழை காலத்தில் தினந்தோறும் தலைக்கு குளித்து வர தேவையில்லை.
தினமும் தலையை கழுவ வேண்டும் என்பதும் இல்லை. மழை காலத்தில் தலைக்கு அதிகம் எண்ணெய் தேய்க்கக் கூடாது. தலையில் எண்ணெய் இல்லாமல் இருப்பது நல்லது.
கூந்தலைக் கழுவ ஷாம்பு அல்லது கடலை மாவை பயன்படுத்தி வரலாம். முடியில் வாடை வந்தால் முடி கழுவும் நீரில் 'யூடிகோலன்' சிறிது கலந்து பயன்படுத்தலாம்.
இடி மின்னல் இருக்கும்போது டிவி, கம்ப்யூட்டர், கைபேசி, போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும் இத்தகைய மின் சாதனங்களின் இணைப்பு ஒயரை அகற்றி வைக்க வேண்டும், குளியல் அறையில் ஈரமாக வாய்ப்புள்ள இடங்களில் ஸ்விட்ச்களை பொருத்தக் கூடாது. ஸ்விட்ச் போர்டு, மின் மோட்டார், தண்ணீர் பம்ப் மோட்டார், போன்றவற்றின் மீது தண்ணீர், மழை நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலம் என்றாலே உணவு நச்சு (Food Poisoning), நீரினால் பரவும் நோய்கள் மற்றும் மின் விபத்துகளைத் தவிர்ப்பது குறித்த மிக அவசியமான உடல்நல விழிப்புணர்வை வாசகர்கள் இதன் மூலம் பெறுகிறார்கள்.