
நான் ஒரு கனவு கண்டேன் என்று கூறினால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் டிக்கெட் வாங்காமல் சினிமா பார்த்தாயா? என்று கிண்டல் அடிப்பார்கள். ஆனால் சில கனவுகளை கண்டால் அப்படியே பலித்துவிடும். சில கனவுகள் எதிர்மறையாக பலன் தரும். நன்மை தரும் சில கனவுகளை பற்றி இதில் காண்போம்.
குளிர்ந்த நீர் பருக கண்டால் நலம். ஒருவர் நீர் பருக பாத்திரத்துடன் நீர் தர கண்டால் சந்தான விருத்தி உண்டாகும் என்று கூறப்படுகிறது.
ஒரு தீபம் அல்லது ஏதாவது ஒரு ஒளி மிகப் பிரகாசிக்க கண்டால் வம்சப் பிரதிஷ்டை புகழுள்ள புத்திரஜலனம் உண்டாகும். வேலை பார்க்கும் இடம், பந்தல் முதலியவற்றின் கம்பங்கள் தீப்பற்றக் கண்டால் தன் புத்திரர் பிரபலமடைவர்.
சந்திரன் மனித முகம் போல் பிரகாசித்திருக்கக் கண்டால் புத்திர உற்பத்தி, தன லாபம். பூரண சந்திரனை கண்டால் சந்தான உற்பத்தி உண்டாகும். ஒருவன் தலை முழுவதும் சந்திரன் பிரகாசிக்க கண்டால் புகழ் உண்டாகும்.
அம்மை வார்த்ததாகக் கண்டால் தான வரவு. தனக்கு கொம்புகள் முளைத்ததாக கண்டால் தனலாபம். பட்சிகளின் கூண்டும் அதில் குஞ்சுகளும் முட்டைகளும் தனக்கு அகப்படக் கண்டால் சுகம்.
எறும்புகள் சாரையிட்டு ஓடுவதாகக் கண்டால் பிரயாணம் புத்திரவிருத்தி, சுகஜீவனம், வியாபாரம் விருத்தி உண்டாகும்.
பையாயினும் முட்டையாயினும் ஒருவர் நமக்கு கொடுக்கக் கண்டால் சௌக்கியமும், புத்திரவிருத்தியும் உண்டாகும். யாராவது கூழ் சாப்பிடுவது போல் கண்டால் புத்திரவிருத்தி உண்டாகும். உற்றார் உறவினர் போன்ற பந்துக்களுடன் சேர்ந்து உணவு உண்பது போல் கண்டால் திருமணம் நடக்கும்.
பழத்தோடு கூடிய மரம் கண்டால் திரவியலாபம் புத்திரவிருத்தி உண்டாகும். காய்கறிகளைக் கண்டால் புகழ், தனலாபம், நலம் உண்டாகும். காரமுள்ள காய்களை சாப்பிடக் கண்டால் ரகசியம் வெளிப்படும்.
முத்து ரத்தினங்களைக் கண்டால் நலம். பொன் நாணயத்தை கண்டால் சுகம். பிறர் பாடுவது போல் கனவு கண்டால் காரிய சித்தி. வீணை, பிடில் முதலியன வாசிக்க கேட்டால் சுகம் நடக்கும். மணி அடிக்க கேட்டால் சுப வர்த்தமானம். பஜனை, நாடகம் ஆகியவற்றை கண்டால் சுகஜீவனம்.
கல்யாணத்திற்கு தான் உதவி செய்தது போல் கண்டால் வெற்றி சுபம் உண்டாகும். எதிரிகள் வேண்டுகோள் விடுவதாக கண்டால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதாக அர்த்தம்.
நண்பன் இறந்துவிட்டதாக கனவு கண்டால் அதிக பேர் வருத்தமடைவது உண்டு. ஆனால் அப்படி கனவு வந்தால் சந்தோஷ வார்த்தை வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இடி தன் தலைக்கு தப்பி அருகில் விழக் கண்டால் தூரதேச பிரயாணம். மழையில்லாமல் இடி, மின்னல் கண்டால் வர்த்தகம் பலிக்குமாம். சூரியன் உதயமாகி மேல் எழக்கண்டால் காரிய சித்தி. தன் வழி முழுவதும் வெயில் அடிக்க கண்டால் திரவிய லாபம். தான் காற்றாடிவிடக் கண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதலால் நன்கு உறங்குங்கள். அது நல்ல கனவு காண வழி வகுக்கும்.பிறகு கனவு காணுங்கள். அது எண்ணியது எண்ணியாங்கு செய்திட வழி வகுத்து தரும்.