
பிளெண்டர்கள் மற்றும் ஜூஸர்களைப் பயன்படுத்திவிட்டு சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், கரைகள் படிந்து கெட்ட நாற்றம் வெளியேறும். அவற்றை சுத்தம் செய்வதற்கு நம்மில் பலர் படாத பாடுபடுவோம். ஆனால், இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். வீட்டில் கிடைக்கும் எளிதான பொருட்களைப் பயன்படுத்தியே அவற்றை சுத்தம் செய்யலாம். பொதுவாக, பிளண்டரை சுத்தம் செய்ய சிறப்பு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த ரசாயனங்கள் சில சமயங்களில் பிளெண்டரின் பாகங்களை சேதப்படுத்தி விடலாம். மேலும், இவை அதில் அரைக்கப்படும் உணவிற்கு கேடு விளைவிக்கும்.
பிளெண்டரை சுத்தம் செய்ய பயன்படும் பொருட்கள்:
வெள்ளை வினிகர் ஒரு சிறந்த இயற்கையான கிருமி நாசினியாகும். இது பிளெண்டரில் ஒட்டி இருக்கும் அழுக்குகளை எளிதாக நீக்கும். ஒரு கப் வெள்ளை வினிகரை ப்ளெண்டரில் ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து 30 வினாடிகள் அப்படியே ஓட விட வேண்டும். பின்னர் ப்ளெண்டரை சூடான நீரில் கழுவி நன்கு உலர்த்தவும்.
வெள்ளை வினிகர் போலவே பேக்கிங் சோடாவும் ஒரு சிறந்த அழுக்கு நீக்கி. இது பிளெண்டர் மற்றும் மிக்ஸி ஜாரில் உள்ள அழுக்குகளை எளிதாக நீக்கிவிடும். ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பிளெண்டரில் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 30 வினாடிகள் ஓடவிட்டால், ப்ளெண்டர் பளபளவென சுத்தமாகிவிடும்.
எலுமிச்சை ஒரு இயற்கையான சுத்திகரிப்பான். இது பிளெண்டரில் இருந்து துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்ச்சியான நறுமணத்தைத் தரும். ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதன் சாற்றை பிளெண்டரில் ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து ஓடவிட்டபின் கழுவினால், அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.
உப்பு பிளெண்டரில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தையும் கொன்றுவிடும். மேலே பயன்படுத்திய பொருட்களைப் போலவே உப்பையும் ப்ளெண்டரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஓடவிட்டால், பிளெண்டர் சுத்தமாகும்.
இந்த நான்கு பொருட்களைப் பயன்படுத்தி பிளெண்டரை கழுவும்போது இயற்கையான முறையிலும் பாதுகாப்பாகவும் நீங்கள் சுத்தம் செய்ய முடியும். வீட்டில் பயன்படுத்தும் பிளெண்டர்களை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அழுக்கான பிளண்டரில் பாக்டீரியாக்கள் அதிகமாக வளரும். இவை நம் உடலில் நுழைந்து பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தும். அழுக்கான பிளெண்டரில் தயாரிக்கப்படும் உணவின் சுவை மற்றும் தரம் மோசமாக இருக்கும் என்பதால், பிளெண்டரை முறையாக சுத்தம் செய்வது அவசியம்.