
குளிர்காலத்தில் வெந்நீர் இல்லாமல் குளிக்கவே முடியாது. இதற்கு நாம் பெரும்பாலும் வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த சாதனத்தைப் பயன்படுத்தும் போது சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
நீங்கள் வாட்டர் ஹீட்டர் பல வருடங்களாக பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது மிகவும் ஆபத்தானது. பழைய வாட்டர் ஹீட்டர் கம்பிகள் தேய்மானம் அடைந்து மின்சாரக் கசிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. கம்பிகளில் ஏதேனும் சேதம் இருந்தால் உடனடியாக அவற்றை மாற்றி விடுங்கள்.
வாட்டர் ஹீட்டரை எப்போதும் பிளாஸ்டிக் வாலியில் மட்டுமே பயன்படுத்தவும். இரும்பு வாலிகள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றை பயன்படுத்துவதால் ஷாக் அடிக்கும் அபாயம் உள்ளது.
வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும் முன் அதன் கம்பிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருப்பதை உறுதி செய்யுங்கள். இல்லையேல் கம்பிகள் அதிகமாக வெப்பமடைந்து சேதமடையும்.
வாட்டர் ஹீட்டரை ஆன் செய்து வாலியில் தண்ணீர் நிரப்ப வேண்டாம். இதன் மூலமாக எதிர்பாராத தருணங்களில் மின்சாரம் தண்ணீரில் பாய்ந்து ஆபத்தை விளைவிக்கும். ஹீட்டர் அணைந்திருக்கும் போது தண்ணீர் நிரப்ப வேண்டும்.
வாலியில் இருந்து வெந்நீரை எடுப்பதற்கு முன் வாட்டர் ஹீட்டரை ஆஃப் செய்யவும். இது முற்றிலும் பாதுகாப்பானது. அதேபோல தண்ணீர் சூடான உடனே வாட்டர் ஹீட்டர் கம்பியை வெளியே எடுத்து விடாதீர்கள். தண்ணீரில் இருந்து ஹீட்டரை அகற்றுவதற்கு முன் ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். இது கம்பியின் ஆயுளை அதிகரிக்கும்.
நீண்ட நேரம் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி தண்ணீரை சூடாக்காதீர்கள். உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சூடானவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்து விடுவது நல்லது.
நீங்கள் வாட்டர் ஹீட்டர் வாங்குவதற்கு முன் சில விஷயங்களை நிச்சயம் கவனிக்க வேண்டும். அதில் ஐஎஸ்ஐ முத்திரை இருக்கிறதா என்பதை பார்த்து வாருங்கள். 1500 முதல் 2000 வாட்ஸ் இருக்கும் வாட்டர் ஹீட்டர் வாங்குவது தண்ணீர் விரைவாக வெப்பமடைய உதவும். வாட்டர் ஹீட்டரின் அளவு தண்ணீரில் சரியாக பொருந்தும்படி பார்த்து வாங்குங்கள்.
வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவது நம்முடைய வேலையை எளிதாக்கினாலும், அவற்றை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். மேலே குறிப்பிட்ட தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஷாக் அடித்தல், தீக்காயங்கள் போன்ற அபாயங்களைத் தவிர்க்கலாம்.