
அலாரம் இல்லாத அந்தக் காலங்களில் மக்கள் எப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு எழுந்து தங்கள் வேலைகளைப் பார்த்தார்கள் தெரியுமா? இயற்கை கடிகாரங்கள், இயற்கையின் செயல்களைக் கொண்டு நேரத்தை கணிக்கும் முறைகளைக் குறிக்கும். இவை சூரிய ஒளி, நிலவின் இயக்கங்களைப் பயன்படுத்தி நேரத்தை குறிக்கும்.
குயில்கள் கூவுவது, காகம் கரைவது, சேவல் கூவுவது, தூக்கணாங்குருவி போன்றவை எழுப்பும் குரலை வைத்தே கூட மக்கள் அக்காலங்களில் விழித்துக் கொண்டார்கள். அதிகாலை நான்கு மணிக்கு கரிச்சான் குயில் தனது குரலை எழுப்பி கூவும். சேவல் பெரும் குரல் எடுத்து நம்மை எழுப்பி விடும். காகம் குழுவாய் கரையத் தொடங்கினால் விடிந்துவிட்டது என்று சரசரவென எழுந்து வேலைகளை ஆரம்பிப்பவர்கள் அதிகம்.
அலாரம் என்பது இரவு பொழுது முடிந்து விட்டதை அறிவிக்கும் ஒன்றாகும். கிராமங்களில் அதிகாலையில் குயில் சத்தம் கேட்டு எழுந்திருப்பவர்களும், காகம் கரைவதைக் கேட்டு எழுந்து கொள்பவர்களும் உண்டு. கோழிகளின் கூவல், பறவைகளின் சத்தம், இயற்கையான பருவகால மாற்றங்கள் மற்றும் பிற விலங்குகளின் அன்றாட செயல்பாடுகள் நேரத்தை தோராயமாக மதிப்பிட உதவின. இவை மக்களின் பணிகளை ஒழுங்கமைக்க உதவியாக இருந்தன.
இக்காலம் போல அதிநவீன கருவிகள் இல்லாததால் ஆரம்பகால மனிதர்கள் அண்டத்தை கவனிப்பதன் மூலம் நேரத்தை கணக்கிட்டனர். மக்கள் நேரத்தை கணிக்க சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் விலங்குகளின் நடத்தைகள் போன்ற இயற்கை நிகழ்வுகளைப் பயன்படுத்தினர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திரனின் வெவ்வேறு நிலைகள் அன்றைய நேரத்தை உணர்த்தின. சூரியனின் நிலை மற்றும் நிழல்களின் நீளம் போன்றவை நேரத்தை கணக்கிடப் பயன்பட்டன. சூரிய கடிகாரங்கள் (Sundials) இந்த கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அங்கு ஒரு குச்சி (gnomon) நிழலை போட்டு நேரத்தைக் காட்டும்.
இரவில் அல்லது மேகமூட்டமாக இருக்கும் சமயங்களில் சூரிய கடிகாரங்கள் வேலை செய்யாது. அதனால் நீர் கடிகாரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஒரு கொள்கலனில் இருந்து தண்ணீர் நிலையான விகிதத்தில் வெளியேறும் ஒரு கடிகாரம் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டது. ‘கிளெப்சிட்ராஸ்’ என்று அழைக்கப்படும் சில நீர் கடிகாரங்கள் அலங்காரமான கலைப்படைப்புகளாக இருந்தன.
உயிரினங்களில் உள்ள உயிரியல் கடிகாரங்கள், மரபணு மூலக்கூறுகள் மற்றும் புரதங்களால் ஆனவை. அவை சுற்றுச்சூழல் சமிக்ஞைகள் இல்லாதபோதும் சீராக செயல்பட்டு உயிரியல் செயல்முறைகளை ஒழுங்கமைக்க உதவுகின்றன. விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை சூரியனின் நிலையை அல்லது ஒரு வேலையை முடித்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைத்துக் கொண்டனர். கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இந்த இயற்கை நிகழ்வுகள் மக்களின் வாழ்க்கையை ஒழுங்கமைத்து அன்றாடப் பணிகளை சீராக திட்டமிட உதவின.