புரட்டாசி சனிக்கிழமை தளிகை: ஐந்து வகை சாதங்கள், அபரிமிதமான பலன்கள்!
தமிழ் மாதங்களில் மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கியப் பங்கு உண்டு. புரட்டாசி மாதம் பெருமாளை குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் வழிபடுபவர்கள், புரட்டாசி சனிக்கிழமை தளிகை இடுவார்கள். தளிகை என்றால் படையல் என்பதாகும். பன்னிரண்டு தமிழ் மாதங்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என நினைக்கத் தோன்றும். சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம் இந்த புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். மகாவிஷ்ணுவின் அருளைப் பெறக்கூடிய தினம் என்பதால் இந்த நாளில் விரதம் இருந்தால் மகாலட்சுமியின் அருளும் நமக்குக் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதமாக சொல்லப்பட்டாலும், சிவன் - பார்வதி தேவிக்குரிய கேதார கௌரி விரதம் மற்றும் அம்பிகையைப் போற்றும் நவராத்திரி பண்டிகை, முன்னோர்களுக்கான வழிபாடு போன்றவையும் அனுசரிக்கப்படுகிறது. சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார் எனவும் கூறப்படுகிறது. சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெருமாளை குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் வழிபடுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை இடுவார்கள். தளிகை என்றால் படையல் என்பதாகும். தளிகையில் பெருமாளுக்கு ஐந்து விதமான சாதங்கள் படைக்கப்படுகின்றன. தேங்காய் சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்ற சாதங்களும், வெங்காயம் சேர்க்காத உளுந்து வடை, சுண்டல் மற்றும் பானகம், துளசி தீர்த்தம் போன்றவையும் தளிகையில் வைக்கப்படுவது வழக்கம். மேற்கூறிய ஐந்து விதமான சாதங்களையும் பச்சரிசியில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
தளிகை போடும் முறை: வாழை இலையில் 5 விதமான சாதத்தால் திருமாலின் திருவுருவத்தை வரைந்து தீப, தூப ஆராதனை காட்டி, ‘கோவிந்தா’ என கோஷம் போட்டு வழிபடுவதாகும். தளிகை போட முடியாதவர்கள் மாவிளக்கு போட்டு வழிபடலாம். பெருமாளுக்கு தயிர் சாதம் மிகவும் பிடித்த உணவாகக் கூறப்படுகிறது. அதனால்தான் இன்றளவும் திருமலையில் ஏழுமலையானுக்கு மண் சட்டியில் தயிர் சாதம் நெய்வேத்தியமாகப் படைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தளிகை போடும் நாட்கள்: இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமைகள் வருகின்றன. முதல் சனிக்கிழமை அல்லது மூன்றாவது சனிக்கிழமையில் தளிகை இடலாம். நவராத்திரி காலத்தில் சனிக்கிழமை வருவதால் மகாலட்சுமி பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாகும். இந்த நாட்களில் துளசி பூஜை செய்வதும் மிகச் சிறப்பாகும்.
இதில் நான்கு வாரங்களும் தளிகை போட்டும் பெருமாளை வழிபடலாம். முடியாதவர்கள் எந்த சனிக்கிழமை உங்களுக்கு உகந்த நாளோ அதைத் தேர்வு செய்து, அந்த நாளில் தளிகை இட்டு வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் மாவிளக்கு மட்டும் வைத்தும் வழிபடலாம். நாம் வைக்கும் எந்த ஒரு நெய்வேத்தியத்தையும் உள் அன்போடு இறைவனுக்கு படைத்தாலே அவர் அதை ஏற்றுக்கொள்வார். இந்த புரட்டாசியில் பல நல்ல நாட்கள் தொடர்ந்து வருவதால் வழிபாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் அதற்கேற்ப பலன்களும் நம் வாழ்வில் பிரதிபலிக்கும் எனக் கூறப்படுகிறது.