அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவதை உணர்த்துவதே இந்த மத பண்டிகைகளின் தாத்பர்யமாக உள்ளது. அந்த வகையில், நவராத்திரி விழாவும் கொடிய அசுரன் மகிஷாசுரனை வதம் செய்த துர்கா தேவியை வழிபடும் பத்து நாள் பண்டிகையாக உள்ளது. நவராத்திரி பண்டிகையின் கதாநாயகி துர்கா தேவி என்றால், வில்லன் மகிஷாசுரன் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். புராண வரலாறுகள் மற்றும் செவிவழிக் கதைகள் மகிஷனை பற்றி குறிப்பிடுவதை இந்தப் பதிவில் காண்போம்.
அரக்கர்களின் ராஜா ரம்பன், பிரம்மனின் பூர்ண ஆசிர்வாதம் பெற்றவன். ஒரு சமயம் இவன் எருமை உருவம் கொண்ட மகிஷினி எனும் பெண்ணைக் காதலித்தான். ரம்பனும் ஆண் எருமையாக மாறி அவளை மணந்தான். அவன் விதி விலங்காக இருக்கும்போதே மற்றொரு எருமை தாக்கி மாண்டான். துக்கத்தில் கர்ப்பிணியாக இருந்த மகிஷினியும் நெருப்பில் குதிக்க, நெருப்பிலிருந்து ஒரு மனிதனின் உடலும் எருமை தலை உடைய மகிஷாசுரன் அவர்களது மகனாகத் தோன்றி அரக்கர் குலத்திற்கு தலைமை ஏற்றான்.
மகிஷாசுரன் தனது சக்தியை அதிகரிக்க பிரம்ம தேவனை நோக்கி பதினாயிரம் ஆண்டுகள் உணவு ஏதும் உண்ணாமல் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் செய்ய, அதில் மகிழ்ந்த பிரம்ம தேவர் அவன் முன் தோன்றி, அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து அருள்புரிந்தார். அதாவது, முப்பெரும் கடவுள்கள் உள்பட எந்த ஆண்களாலும் தன்னை அழிக்க முடியாத ஒரு அரிய வரத்தைப் பெற்றான் மகிஷாசுரன். சிரமப்பட்டு பெற்ற அந்த வரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதைத் தவிர்த்து தனது அழிவுக்கு அதைப் பயன்படுத்தினான்.
மூன்று உலக மக்களையும் அடிமைப்படுத்தி கொடுமை செய்தான். தேவர்கள், மக்கள் என்று எல்லோரையும் ஈவு இரக்கமின்றி கொன்றான். அவன் அட்டகாசத்தை தாங்க முடியாமல் மக்களும் தேவர்களும் சிவனிடம் சென்று முறையிட, அவனை அழிக்க ஈசன் தனது சக்தியை எல்லாம் சேர்த்து அன்னை பராசக்தியை உருவாக்கினர்.
துவங்கியது அன்னையின் திருவிளையாடல். ஒரு சமயம் சக்தி தேவி சிம்ம வாகனத்தில் கயிலாயத்திற்கு ஆகாயம் வழியாக செல்வதைப் பார்த்த மகிஷாசுரன், அவளது அழகில் மயங்கி, அன்னையை மணந்துகொள்ள ஆசைப்பட்டு சேதி அனுப்ப, சக்தி தேவியும் ‘போரில் எவர் தன்னை வீழ்த்துகிறாரோ அவர் என்னை மணந்து கொள்ளலாம்’ என்று மகிஷாசுரனை போருக்கு அழைத்தார்.
அன்னைக்கும் மகிஷாசுரனுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. சக்தி தேவி அவனை வீழ்த்த வீழ்த்த, அவனது இரத்தம் விழும் இடமெல்லாம் மறுபடியும் மறுபடியும் உயிர்த்தெழுந்தான். உடனே அன்னை மகாகாளியை உருவாக்கி அவன் இரத்தம் பூமியில் விழாமல் குடித்து, மேலும் பல திருவடிவங்களை எடுத்து அந்த கொடிய அரக்கனின் உருவங்களை அழித்துகொண்டே வந்தார். இறுதியில் 10ம் நாளில் மகிஷாசுரனை அழித்து இவ்வுலக மக்களைக் காப்பாற்றினார் என்கின்றன புராணங்கள்.
கர்நாடகாவின் மைசூரு மகிஷாசுரனின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் மகிஷா மண்டலம் என்றும், தமிழ் நூல்கள் எருமை நாடு என்றும் குறிப்பிடுகின்றன. அவர்களின் நம்பிக்கையின்படி இன்றைய மைசூரு பகுதியை ஆட்சி செய்த அரசன் மகிஷாசுரன். அவனுடைய ஒழுக்கமற்ற செயல்களால் வேதனைப்பட்ட மக்கள் தங்களைக் காப்பாற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்ய, துர்கை மகிஷனுடன் போரிட்டு அவனை வதம் செய்ததாகவும் வரலாறு உண்டு. இன்றும் சாமுண்டி மலை உச்சியில் இருக்கும் மகிஷாசுரன் சிலை இதற்கு சான்றாகிறது.
இந்த வெற்றியைக் கொண்டாடுவதே மைசூர் தசரா பண்டிகை. இந்தப் பண்டிகை மாநிலத் திருவிழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், மகிஷா மிகவும் அன்பான ஆட்சியாளர் என்றும், அவருடன் தொடர்புடைய மற்ற அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள் என்றும், அவரை ஹீரோவாகக் கருதுவோரும் உண்டு என்கிறார்கள்.
இந்த வரலாறுகள் தவிர, மகிஷாசுரன் முற்பிறவியில் பராசக்தியை நோக்கி தவமிருந்து அவளது வாகனமாக இருக்கும் விருப்பத்தை தெரிவிக்க, அதன் பொருட்டு நிகழ்ந்ததே அவனின் இந்தப் பிறப்பும் இறப்பும் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படி என்றாலும் அசுர குணங்கள் அழித்து, நல்ல குணங்களை வளர்த்து இறையருள் பெற வேண்டும் என்பதையே உணர்த்துகிறது மகிஷாசுரனின் பிறப்பு.