மழைக்காலத்தின்போது காலணிகளை அணிவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் தினசரி அணியும் காலணிகளை உலர்வாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஈரமான காலணிகளை அப்படியே அணியக்கூடாது. வெளியில் போய் வந்த பிறகு காலணிக்குள் இருக்கும் நீரை வடிய விட்டு உலர வைக்க வேண்டும்.
காலணியின் ஈரப்பதத்தை உலர வைக்கத் தவறினால் பாதத்திலும், விரல்களின் இடுக்குகளிலும் பூஞ்சை தொற்று, சேற்றுப் புண்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஈரமான காலணிகளிலிருந்து துர்நாற்றம் வராமலிருக்க சிலிக்கா ஜெல், கற்பூரம், நாப்தலீன் உருண்டைகள் போன்றவற்றை போட்டு வைக்கலாம். இவை ஈரப்பதத்தை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், காலணிகளிலிருந்து வரும் துர்நாற்றத்தை நீக்கவும் உதவும்.
மழைக்காலத்தில் பாதங்களுக்கு சரியான அளவில் பொருந்தும் வகையில் காலணிகளை வாங்க வேண்டும். ஏனெனில், சாக்கடை நீர், மழை நீர் போன்றவை பாதங்களில் படிந்து கிருமி தொற்று உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்க தண்ணீர் புகாத வாட்டர் புரூப் வகை காலணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று, கால்களில் வெடிப்பு போன்றவை வராமல் பாதுகாக்கலாம்.
மழைக்காலத்தில் ஹீல்ஸ் வகை காலணிகளை தவிர்க்க வேண்டும். இவை நடக்கும்போது எதிர்பாராமல் மழை நீரில் மாட்டி கொண்டால் சிரமத்தை ஏற்படுத்தும். ஷூ உபயோகிப்பாளர்கள் மழை நீர் புகாத ஷூக்களை வாங்கி பயன்படுத்தலாம். ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பிளிப்பிளாப் வகை காலணிகள் மழைக்காலத்தில் அணிவதற்கு ஏற்றவை. அவை தண்ணீரை உறிஞ்சாமல் கால்களை உலர்வாக வைத்திருக்கும்.
ரப்பர் ஹோல்ட் செருப்புகள் மழைக்கால சாலைகளில் நடக்கும்போது நல்ல பிடிமானத்தை கொடுக்கும். பாசி, சகதி போன்றவற்றால் வழுக்கி விடாமல் தடுக்கும். பட்டையுடன் கூடிய காலணிகள் மழைக்காலத்தில் அணிவதற்கு பொருத்தமானவை. ஈரம் படும்போது கால்களின் பிடியில் இருந்து வழுக்காமல் இருப்பதற்கு இவை உதவும்.
மழைக்காலத்தில் விலை உயர்ந்த காலணிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், காலணிகளில் உள்ள கறைகள் மற்றும் தூசிகளைப் போக்க ஸ்கார்ட்ச்கார்டு ஸ்பிரேவை அடிக்கடி பயன்படுத்துவது நல்லது. தண்ணீருக்குள் போட்டுக் கழுவும் பழக்கத்தை கைவிட வேண்டும். ஸ்பிரே பயன்படுத்துவதால் வெகு நாட்களுக்கு அவை புதுசு போல் இருக்கும். மழைக்காலத்தில் தண்ணீர் நுழையாமல் தடுக்கும் ரப்பர் அல்லது சின்தெட்டிக் போலியுரேதேன் போன்ற தண்ணீர் எதிர்ப்பு காலணிகளை பயன்படுத்தலாம்.
இரண்டு ஜோடி காலணிகளை வைத்திருந்தால் ஈரமான காலணியை மாற்றி உலர்ந்த காலணிகளை அணியலாம். காலணிகள் ஈரமானதாக இருந்தால் அவற்றை நேரடியாக சூரிய வெளிச்சத்தில் அல்லது ஹீட்டரின் அருகே வைக்காமல் இயற்கையாக காய வைத்தல் நல்லது. மழைக்காலத்தில் தண்ணீரை விரட்டும் செயல்பாடு கொண்ட நல்ல குவாலிட்டி சாக்ஸ் பயன்படுத்துவது கால்களை ஈரத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
காலணிகளை சுத்தம் செய்தல்: மழைக்குப் பிறகு மண், தூசி, ஈரப்பதம் இருப்பின் தண்ணீர் மற்றும் மென்மையான பிரஷ் பயன்படுத்தி அவற்றை சுத்தம் செய்யலாம். முதலில் தூசியையும், அழுக்கையும் உலர்ந்த துணியால் அகற்றி விட்டு பின்னர் ஒரு பவுலில் சுத்தமான தண்ணீரும், மென்மை யான சோப்பும் சேர்த்துக் கலந்து பஞ்சாலோ அல்லது பழைய துணியினாலோ காலணியை அழுத்தமின்றி துடைக்கவும். அதன்பின் சுத்தமான ஈரமான துணியால் சோப்பின் எச்சங்களையும் நீக்கி விட்டு காற்றில் உலர விட வேண்டும். காலணியின் அடிப்பகுதியை தண்ணீரில் ஊற வைக்காமல் துணியால் அல்லது பழைய தூரிகையால் துடைத்து சுத்தம் செய்யலாம். இப்படி காலணிகளை பாதுகாத்தால் மழைக் காலத்திலும் நீண்ட நாட்கள் அவற்றை உபயோகிக்க முடியும்.