பழநி முருகப்பெருமானின் கையில் இருக்கும் தண்டத்தில் கிளி அமர்ந்திருப்பதைக் காணலாம். முருகன் கை தண்டத்தில் கிளி அமர்ந்திருக்கும் காரணத்தை இதுவரை பலரும் யோசித்திருக்க மாட்டார்கள். அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பழநி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகனின் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் தண்டத்தில் கிளி ஒன்று அமர்ந்திருப்பதற்கு பின்னே சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது.
ஒரு சமயம் முருக பக்தரான அருணகிரிநாதர் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அருணகிரிநாதரை பழி வாங்க நினைத்தார். அதற்காக சூழ்ச்சி செய்து திருவண்ணாமலை மன்னராக இருந்த பிரபுடதேவராயர் மூலமாக அருணகிரிநாதரை தேவலோகம் அனுப்பி பாரிஜாத மலரை பறித்துவரச் சொல்லி கட்டளையிடச் செய்தான் சம்பந்தாண்டான்.
மன்னரின் கட்டளைப்படி அருணகிரிநாதர் தன்னுடைய உயிரை ஒரு கிளியினுள் செலுத்திவிட்டு, தன்னுடைய உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு கிளியின் ரூபத்தில் தேவலோகம் பறந்து செல்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணியை சம்பந்தாண்டான் அருணகிரிநாதரின் உடலை தகனம் செய்துவிடுகிறான்.
பாரிஜாத மலரை பறித்துக்கொண்டு பூலோகம் வந்த அருணகிரிநாதர் தனது உடல் காணாமல் போனதை எண்ணி திகைக்கிறார். இதைக்கண்ட முருகப்பெருமான் அருணகிரிநாதருக்குக் காட்சி தந்து, 'சாதாரண உடல் போனால் என்ன? உன்னை என் பக்கத்திலேயே வைத்துக்கொள்கிறேன்’ எனக் கூறி தன்னுடைய தண்டத்தில் அந்தக் கிளியை அமர்த்தித்கொண்டார். இதன் பின்னரே பழநி முருகனின் தண்டத்தில் அருணகிரிநாதர் கிளியாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மகான் ஆவார். தமிழ் படைப்புகளில் முக்கியமான இலக்கணமாகத் திகழும் திருப்புகழை இயற்றியவர் அருணகிரிநாதர். திருப்புகழில்16,000 இசைப்பாடல்களும், 1088 சந்த வேறுபாடுகளும் உள்ளன. இவர் முருகன் மீது அளவு கடந்த பக்தியைக் கொண்டவர். இவருக்காக ஒரு சமயம் முருகப்பெருமானே திருவண்ணாமலை திருக்கோயில் கம்பத்தில் மயிலோடு காட்சித் தந்திருக்கிறார்.
இதனால் இத்தல முருகப்பெருமானை ‘கம்பத்து இளையனார்’ என்றும் அழைப்பார்கள். ஒரு சமயம் அருணகிரிநாதர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள கோயில் கோபுரத்தின் உச்சிக்கு சென்றபோது அவரைத் தடுத்து முருகப்பெருமான் தனது வேலால் ‘சரவணபவ’ என்ற ஆறெழுத்து மந்திரத்தை அவர் நாவில் பொறித்து மனித குல மேன்மைக்காக பக்தி பாடல்களை இயற்றச் சொல்லி, ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற பாடலின் முதல் வரியை எடுத்துக்கொடுத்துவிட்டு மறைந்தார் என்பது வரலாறு.