

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் வாழையடி வாழையாக அது வலுப்பெற்று நிலைக்கும் என்றும் நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர். ஆனால் தற்போதைய சூழலில் திருமணமும் விவாகரத்தும் விரைவிலேயே முடிவு செய்யப்பட்டு, விரைவிலேயே முடிந்தும் போய்விடுகின்றன. இதைத் தடுத்து நிறுத்த, நரம்பியல் விஞ்ஞானத்துடன் தொடர்புடையை சில மைக்ரோ செயல்பாடுகள் எவ்விதம் உதவிபுரிகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.
கண்ணாடிபோல் பிரதிபலிக்கும் நரம்பணுக்கள் (Mirror neuron response): சில நேரங்களில் நம் உடன் இருப்பவர் கொட்டாவிவிட்டால் நமக்கும் கொட்டாவி வரும். உறங்கும்போது ஒருவர் மூச்சை இழுத்து வெளியிடும் ஸ்டைல் மற்றவரிடமும் தொற்றிக்கொள்ளும். இவையெல்லாம் தற்செயல் நிகழ்வுகள் எனக்கூற முடியாது. உங்களின் மிர்ரர் நியூரான்கள் மூளையுடன் இணைந்து செயலாற்றும் விதம் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
காதல் வயப்பட்ட இருவருக்கிடையே தனி மனித உறவு நேரும்போது, அவர்களில் ஒருவரின் மூளையானது உடனிருப்பவரின் மூளையோடு அதிகமாக ஒருங்கிணைவதாக விஞ்ஞானம் கூறுகிறது. உதாரணமாக, சாப்பிடும்போது ஒருவர் மேஜையில் உள்ள உப்பு ஜாடியை மற்றவருக்கு அருகில் நகர்த்தி வைக்கும்போது எதேச்சையாக இருவரின் கைகளும் உரசிக்கொள்ளும். அப்போது ஏற்படும் உணர்வானது மூளையின் நரம்பு மண்டலம் வரை சென்றடையும்.
உறவு மேம்பட நீண்ட உரையாடலோ, நினைவில் நிற்கக் கூடிய நிகழ்வுகளோ தேவையில்லை. ஒவ்வொரு முறையும் உங்கள் துணை, உங்களுக்குப் பிடித்த சுவையில் ஒரு கப் காபி கலந்து புன்முறுவலுடன் உங்கள் கையில் தரும்போதும் இருவரின் நரம்பணுக்களும் இணைகின்றன. இவ்வாறான செயல்கள் தொடர்ந்து நிகழும்போது ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்புடனும் இணக்கமுடனும் செயலாற்ற மூளைக்கு பயிற்சி கிடைக்கிறது. துணையின் ஆடையை சரி பண்ணி விடுதல், முடியை கோதி விடுதல், கூட்டத்தில் செல்லும்போது முதுகை அணைத்தபடி பாதுகாப்புடன் செல்வது போன்ற நுண்ணிய செயல்கள் தொடர்ந்து நடைபெறும்போது, இருவரிடையேயான இணைப்பு இறுக உதவும்
ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. உங்கள் உடல் நலமில்லாதபோது, உங்கள் பார்ட்னர் சூடாக ஒரு கப் சூப் கொண்டு தரும்போது, அது உங்கள் சிறு வயதில் உங்கள் அன்னை காட்டிய கவனிப்பை நினைவுபடுத்தும். இம்மாதிரியான கவனிப்பு துணையிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும்போது உங்கள் மனமும் உடலும் ரிலாக்ஸ் ஆகி உறவு வலுப்பெற உதவும்.
தினசரி இரவில் செய்யவேண்டிய வேலைகளை, அதாவது முன் கதவு, பின் கதவுகளைப் பூட்டுதல், கேஸ் சிலிண்டர் வால்வை மூடுவது, விளக்கை அணைத்தல் போன்ற சிறு சிறு வேலைகளை பார்ட்னர் செய்து முடித்து போர்வையால் உங்களை போர்த்தியும் விடுவது, மெடிட்டேஷன் தரமுடியாத அமைதியையும் நிம்மதியையும் உங்களுக்குத் தரும். ஆண் பெண் இருவரில் ஒருவர் செய்யும் நற் செயலை மற்றவர் பாராட்டுவதும் அவர்கள் இருவருக்கும் இடையிலான தனி மனித உறவு மற்றும் மூளையின் ஒத்திசைவு மேம்படவும், நிலைத்திருக்கவும் உதவும்.
ஒருவர் நினைவுபடுத்தாமலே மற்றவர் டின்னர் தயாரிப்பது, மருந்துச் சீட்டை எடுத்துப்போய் மருந்துகளை வாங்கி வருதல், லேப் டாப்பை சார்ஜ் பண்ணிவைப்பது போன்ற செயல்கள் அனைத்துமே மீண்டும் மீண்டும் செய்து முடிக்கும்போது அவை மூளையால் கவனிக்கப்படவும் மதிக்கப்படவும் செய்து, மூளையில் ஆழமாக பதிந்துவிடுகிறது.
தினசரி வாழ்வில் தம்பதியர் ஒருவரை ஒருவர் அக்கறையுடன் கவனித்து அணுசரணையுடன் நூற்றுக்கணக்கான சிறு சிறு வீட்டு வேலைகளை செய்து முடிப்பது, இருவரின் நாடி நரம்புகளின் வழியே மூளையை சென்றடைந்து இருவருக்குமிடையேயான இணைப்பு இறுகவும் அன்பு பெருகவும் பெரிதும் உதவிபுரியும்.