

இன்னும் சில தினங்களில் கோடை விடுமுறை முடியப்போகிறது. சுற்றுலா, தூக்கம், உறவினர்களின் வீடு என ஜாலியாக பொழுதைக் கழித்தாகிவிட்டது. வழக்கம்போல ஜீன் முதல் வாரத்தில் பள்ளிக்குச் செல்லத் தொடங்கவேண்டும. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது சற்று டென்ஷனான நேரம்தான். ஆனால் நமது கடமைகளை நாம் செய்துதானே ஆகவேண்டும்? பள்ளிக்குச் சென்று படித்தால்தானே வாழ்க்கையில் முன்னேற முடியும். எதையும் மகிழ்ச்சியான மனநிலையில் அணுகப் பழகிக்கொண்டால் எல்லாம் சுலபமாக முடியும்.
மே மாதம் கடைசி வாரத்தில் குழந்தைகளை கடைக்கு அழைத்துச் சென்று புதிய சீருடைகளை வாங்குதல், நோட்டு புத்தகங்களை வாங்குதல், நோட்டு புத்தகங்களுக்கு அட்டை போட பேப்பர்களை வாங்குதல், புது பேனா, பென்சில், புது புத்தகப் பை இவற்றை வாங்குதல் முதலான செயல்களில் ஈடுபடவேண்டும். இவற்றை வாங்கும் போது பெற்றோர் தனியே சென்று வாங்காமல் தங்கள் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பெற்றோர் தமது படிப்பிற்காக எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் எனவும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் எனவும் அவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் பிள்ளைகளும் உடன் வந்து வாங்கும்போது ஒரு கடையில் எப்படி பொருட்களை வாங்க வேண்டும் என்பதையும் தெரிந்த கொள்ளுவார்கள்.
தங்கள் படிப்பிற்கான பொருட்களை தாங்களே வாங்கும்போது விரையில் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்ற மனநிலையும் அவர்களின் மனதில் ஏற்படும். மெல்ல மெல்ல விடுமுறை மனநிலை மாறி பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற மனநிலை உருவாகும்.
உங்கள் பிள்ளைகள் படித்த புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை அக்கம்பக்கத்தில் உள்ள ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு தேவையானவர்களுக்கு உதவவேண்டும் என்ற மனப்பான்மை உருவாகும்.
மாலை நேரங்களில் உங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் சென்று செய்தித்தாள்கள் மற்றும் அவர்களுக்கான புத்தகங்களை குறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது வாசிக்கச் செய்யுங்கள். இது பள்ளிக்குச் செல்லும் முன்னால் ஒரு ஆயத்தப்பணியாக இருக்கும்.
உங்கள் பிள்ளைகளின் நோட்டு புத்தகங்களுக்கான அட்டைகளை நீங்களே தனியே போடாமல் உங்கள் பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு அவற்றைச் செய்யுங்கள். இதைப் பார்க்கும் உங்கள் பிள்ளைகள் தாங்களும் அவற்றை சுலபமாக கற்றுக்கொள்ளுவார்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாவிட்டால் இந்த விடுமுறையில் சைக்கிளை ஓட்டக் கற்றுக்கொடுங்கள். ஒன்பதாம் வகுப்பிற்குச் செல்லும்போது பள்ளிக்குச் செல்ல சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
பள்ளி திறந்ததும் பழைய சீருடைகளைப் போட்டு அனுப்பிவிட்டு பின்னர் புதிய சீருடைகளை தைத்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். ஏனென்றால் எல்லோரும் ஒரேசமயத்தில் சீருடைகளைத் தைக்கக் கொடுத்தால் அவற்றை தைத்து வாங்குவதில் சிரம்மும் வீண் அலைச்சலும் ஏற்படும்.
எனவே கோடை விடுமுறையிலேயே புதிய சீருடைகளைத் தைத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். பள்ளி திறக்கும் முதல் நாளன்று புதிய சீருடைகளைப் போட்டு அனுப்புங்கள். இதனால் உங்கள் பிள்ளைகளின் மனதில் ஒருவித உற்சாகம் பிறக்கும். அவர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்லுவார்கள்.