செலவே இல்லாத வார இறுதி நாட்கள் சாத்தியமா?

Weekend days
NO cost
Published on

தினமும் வேலைக்குச் சென்று களைத்தவர்கள், வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்கவே விரும்புவர். பொதுவாக நகரங்களில் பெரும்பாலான மக்கள் வார இறுதி நாட்களில் கடற்கரைக்குச் செல்வது, படம் பார்க்கச் செல்வது, பூங்காவிற்கு செல்வது என மகிழ்ச்சியாக கழிப்பார்கள். அதுமட்டுமின்றி எங்கெல்லாம் செல்கிறார்களோ அதையெல்லாம் சமூக வலைதளங்களில் புகைப்படம் எடுத்து போடுவார்கள். இதனைப் பார்க்கும் சிலருக்கு நாமும் அதேபோல் வார இறுதி நாட்களை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். இருப்பினும் செலவே இல்லாமல் வார இறுதி நாட்களை கொண்டாட முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். இதற்கு சரியான திட்டமிடல் அவசியம்.

வார இறுதி நாட்கள் வந்துவிட்டாலே சிலர் உணவு மற்றும் பொழுதுபோக்கிற்காகத் தான் அதிகளவில் செலவு செய்வார்கள். தினமும் வீட்டு சாப்பாட்டையே சாப்பிடுவதா என்ற எண்ணம் தான் ஆன்லைனில் ஆர்டர் செய்யவும், உணவகத்திற்கு சென்று சாப்பிடவும் நம்மை இழுக்கும். ஆனால் இந்த செலவுகள் நம்முடைய பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நாள் தானே என்று அலட்சியப்படுத்தினால், பிறகு அடிக்கடி இதே மாதிரி செய்யத் தோன்றும்.

பொதுவாக கொண்டாட்டம் என்பது அவரவர் மனநிலை சார்ந்து அமைவது தான். செலவில்லாத கொண்டாட்டத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என முதலில் சிந்திக்க வேண்டும். வார நாட்களில் வீண் செலவுகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி, வார இறுதி நாட்களில் செலவைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செலவு செய்யக் கூடாது என்று தீர்மானித்து விட்டால், கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

ஓடிடி செலவுகள் மற்றும் தேவையற்ற பயணச் செலவுகள் உள்பட வேறு எந்த செலவையும் செய்ய முற்படக் கூடாது. இப்படி கட்டுப்பாட்டுடன் இருப்பதில் கொண்டாட்டம் எங்கே இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் வார இறுதி நாட்களை வீட்டிலேயே கழிப்பதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்றைய நவீன யுகத்தில் அனைவரும் செல்போனைப் பார்த்துக் கொண்டு தலைகுனிந்தபடியே இருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில் நேரடியாக மனம் விட்டு பேசுங்கள்.

வார இறுதி வந்துவிட்டால் அந்த நாளில் என்ன செய்யப் போகிறோம் என சிந்திக்காமல், எப்படி அமைதியான மனநிலையில் கடப்பது என சிந்தியுங்கள். வாகனங்களை சுத்தம் செய்வது, சமையலில் உதவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது என குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிட்டால் அதுவும் கொண்டாட்டம் தான்.

இதையும் படியுங்கள்:
சிறப்பான நிதி திட்டமிடலை மேற்கொள்வது எப்படி?
Weekend days

பிடித்தமான பாடல்களைக் கேட்பதும், புத்தகங்களைப் படிப்பதும் கூட மனதிற்கு கொண்டாட்டத்தைக் கொடுக்கும். வீட்டுத் தோட்டத்தில் நேரத்தை செலவிடுவதன் மூலம், பசுமையான இயற்கைச் சூழலை அனுபவிக்கலாம். வீட்டிலேயே மகிழ்ச்சியான முறையில் பொழுதைக் கழிக்க பல வழிகள் இருப்பதை நாம் உணர வேண்டும்.

இணையத்தில் அனைத்துத் தகவல்களும் கிடைப்பதால், உபயோகமான முறையில் எதையாவது கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். நம்முடைய பொன்னான நேரத்தை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே செலவு செய்யாமல், அதனை உபயோகமாகப் பயன்படுத்திக் கொண்டால் செலவும் குறையும்; மன நிம்மதியும் கிடைக்கும்.

வெளியில் சென்று தான் வார இறுதி நாட்களைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே இருந்து கொண்டும் மகிழ்ச்சியாக செலவே இல்லாமல் கொண்டாடலாம்.

இதையும் படியுங்கள்:
குடும்பப் பணப் பஞ்சாயத்து: கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கும் சூட்சுமங்கள்!
Weekend days

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com