

துணிகளைத் துவைப்பது பெரும்பாலானோருக்கு சலிப்பான வேலை என்றாலும், இது தவிர்க்க முடியாத ஒன்று. அதிலும் பட்டுப் புடைவைகளை வீட்டில் துவைப்பது எளிதான காரியம் இல்லை என்பதால் ட்ரை கிளீனிங் கொடுத்து விடுகிறார்கள். அதனுடைய செலவு சாதாரண குடும்பங்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. அந்த வகையில் பட்டுப் புடைவையின் நிறமும் தரமும் குறையாமல் வீட்டிலேயே எளிய முறையில் டிரை வாஷ் செய்யும் முறை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்: ஒரு வாளி தண்ணீர், ஒரு சாஷே கண்டிஷனர், ஒரு சாஷே ஷாம்பு, வாசனைக்காக கம்பர்ட் (தேவைக்கேற்ப), ஒரு சுத்தமான துணி.
செய்முறை: ஒரு வாளியில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் கண்டிஷனர் மற்றும் ஷாம்பு இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாகக் கலந்து நுரை பொங்கிய பிறகு சிறிதளவு கம்பர்ட் சேர்க்கவும். பிறகு ஒரு சுத்தமான துணியை இந்தக் கலவையில் நன்கு நனைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது பட்டுப் புடைவையில் உள்ள கறை படிந்த பகுதிகளை நனைத்த துணியால் மெதுவாகத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறை பாதுகாப்பான முறையில் பட்டுப் புடைவையின் பொலிவை கெடாமல் கரையை நீக்கும் சிறந்த முறையாகும். இதேபோல், தேவையான மற்ற இடங்களில் இதே முறையை பின்பற்றி சுத்தம் செய்து முடிக்கவும். இந்த முறையைப் பயன்படுத்தி டிசைனர் புடைவைகளையும் சுத்தம் செய்யலாம்.
காய வைக்கும்போது கவனிக்க வேண்டியவை:
புடைவையை சுத்தம் செய்த பிறகு நேரடியாக சூரிய ஒளியில் எப்போதும் காய வைக்கக் கூடாது. ஏனெனில், சூரிய ஒளி பட்டு நாரின் இயல்பான அழகை மங்கச் செய்துவிடும். ஆகவே, சுத்தம் செய்த பட்டுப் புடைவைகளையும் டிசைனர் புடைவைகளையும் நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு காயவைத்த புடைவைகளை மெதுவாக அயன் செய்தால் புடவை புதிது போல மெருகாகும்.
மேற்கூறிய முறையில் பட்டுப் புடைவைகளை சுத்தம் செய்வதன் மூலம் ட்ரை கிளீனிங் நிலையங்களில் அதிகமாக பணம் செலவு செய்வதை விட, வீட்டிலேயே எளிதாக கரையை நீக்கி, பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.