
ஒரு விடுமுறைக்காகவோ, வேலை நிமித்தமாகவோ ஹோட்டல் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் சுவரிலோ, மேசை மீதோ கடிகாரங்கள் இருக்காது. ஏன் இப்போதெல்லாம் ஹோட்டல்களில் கடிகாரங்கள் வைப்பதில்லை என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்கான காரணங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
1. பெரும்பாலான மக்கள் தங்கள் பயணங்களில் நிம்மதியாக ஓய்வெடுக்க அல்லது அன்றாட பரபரப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்க விரும்புவார்கள். கடிகாரம் என்பது நேரத்தை நினைவுபடுத்தி, கடமைகளையும், காலக்கெடுவையும் குறிக்கும் ஒரு பொருளாகும். ஹோட்டல் அறையில் ஒரு கடிகாரம் இருந்தால், அது பயணிகளுக்கு தாங்கள் அவசரமாகச் செய்ய வேண்டிய வேலைகள், அல்லது பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றை நினைவூட்டி, நிம்மதியை கெடுக்கலாம்.
2. கடிகாரங்களை முறையாகப் பராமரிப்பது ஒரு சவாலான காரியம். உதாரணமாக, ஒரு கடிகாரத்திற்கு பேட்டரி தீர்ந்துவிட்டால், அது சரியாக இயங்காது. அதை அவ்வப்போது மாற்ற வேண்டும். இது ஹோட்டல் ஊழியர்களுக்கு ஒரு கூடுதல் வேலையாக இருக்கும். ஆயிரக்கணக்கான அறைகள் கொண்ட பெரிய ஹோட்டல்களில், ஒவ்வொரு கடிகாரத்தின் பேட்டரியையும் மாற்றுவது என்பது மிகப்பெரிய பணி. மேலும், கடிகாரங்கள் சரியாக இயங்கவில்லை என்றால், அது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசமான அனுபவத்தைத் தரலாம்.
3. தொழில்நுட்ப வளர்ச்சி இந்த கடிகாரங்களின் தேவையை குறைத்துவிட்டது. இப்போது பெரும்பாலானோர் தங்கள் ஸ்மார்ட்போன்களையே கடிகாரமாகப் பயன்படுத்துகிறார்கள். அலாரம் வைக்கவும், நேரத்தைச் சரிபார்க்கவும் தனி கடிகாரம் தேவையில்லை. ஒரு பயணி தன் போனை எடுத்துப் பார்த்தாலே நேரம் தெரிந்துவிடும்போது, அறையில் தனியாக ஒரு கடிகாரத்தை வைப்பதற்கான அவசியம் இல்லை.
4. கடிகாரங்கள் பழைய ஃபேஷனாகிவிட்டதாகக் கருதப்படுகிறது. நவீன ஹோட்டல் அறைகளில், எளிமையான மற்றும் சுத்தமான வடிவமைப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடிகாரம் இல்லாதது, அறையை மேலும் விசாலமாகக் காட்டும் ஒரு உத்தியாகவும் இருக்கலாம்.
5. சில ஹோட்டல்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் தங்குமிடத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். நேரத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக உணர்வதே ஒரு சிறந்த பயண அனுபவம். இந்த மனநிலையையும், விடுமுறையின் உற்சாகத்தையும் மேம்படுத்துவதற்காகவே கடிகாரங்களைத் தவிர்ப்பார்கள்.
ஹோட்டல் அறைகளில் கடிகாரங்கள் இல்லாதது ஒரு தற்செயலான விஷயம் அல்ல. மேலே குறிப்பிட்டவற்றில் ஏதோ ஒன்றுதான் அதற்கு காரணமாக இருக்கும். இனிமேல், ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இல்லாததைக் கண்டு ஆச்சரியப்படத் தேவையில்லை.