வெளிநாட்டு வாழ் தமிழர்களே! உங்கள் பெற்றோரின் பாதுகாப்பிற்கு இதுவே சிறந்த வழி!

ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருந்தாலும் பெற்றோரை/முதியோரை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இதோ!
முதியோர் பாதுகாப்பு
முதியோர் பாதுகாப்புAI Image
Updated on

வேலை, உயர்கல்வி, தொழில் எனப் பல்வேறு காரணங்களுக்காக இன்று லட்சக்கணக்கான இளைஞர்களும், நடுத்தர வயதினரும் சொந்த ஊரை விட்டு, நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழ்ந்து வருகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் தம் பெற்றோருடன் வீடியோ காலில் முகம் பார்த்துப் பேச முடிந்தாலும், ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கும் தங்களின் வயதான பெற்றோர்களைப் பற்றிய தினசரிக் கவலை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நிழல் போலத் தொடர்கிறது.

பெற்றோர் பற்றிய கவலைகளுக்கான காரணங்கள்:

விடியற்காலையிலோ அல்லது நள்ளிரவிலோ திடீரென அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டால், இதயம் ஒரு கணம் திடுக்கிடும். தொலைதூரத்தில் இருக்கும் பெற்றோருக்கு என்னவோ ஆகிவிட்டதோ என்ற பயம் சட்டென்று மனதை ஆட்கொள்ளும். முதுமையும், அது தொடர்பான நோய்களுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோர் மாத்திரைகளைச் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொண்டார்களா, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால் யார் கவனிப்பார்கள், பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டால் என்ன செய்வது இப்படியான கேள்விகள் அங்கு வாழும் ஒவ்வொரு மகனின், மகளின் மனதையும் தினமும் அரித்துக் கொண்டே இருக்கின்றன.

பணமும் வசதிகளும் இருந்தாலும், பண்டிகை நாட்களிலும், மருத்துவமனைக்குச் செல்லும்போது பெற்றோருடன் உடனிருக்க முடியாத நிலை குற்ற உணர்ச்சியைத் தருகிறது. பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில், அலுவலகப் பணி காரணமாகவோ அல்லது உடனே விமான டிக்கெட் கிடைக்காமலோ தவிக்கும் அந்த சில மணி நேரங்கள் நரகத்திற்குச் சமம் என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆகப்பெரும் குமுறலாக இருக்கிறது.

முதியோர் பாதுகாப்பு
முதியோர் பாதுகாப்புAI Image

பெற்றோர் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகள்:

1. ஸ்மார்ட் ஹோம் சென்சார்கள் மற்றும் தானியங்கி விளக்குகள்:

கேமராக்கள் தவிர, படுக்கையறை முதல் குளியலறை வரை 'மோஷன் சென்சார்களை' பொருத்தலாம். பெற்றோர் வழக்கமாக எழும் நேரத்திற்கு எழவில்லை என்றாலோ அல்லது நீண்ட நேரம் அசைவற்று இருந்தாலோ இது பிள்ளைகளின் மொபைலுக்கு எச்சரிக்கை அனுப்பும். அதேபோல, இரவில் அவர்கள் எழுந்து நடக்கும்போது தானாகவே எரியும் 'ஸ்மார்ட் நைட் லைட்ஸ்' பொருத்துவதன் மூலம், இருட்டில் தடுமாறி விழுவதைத் தவிர்க்கலாம்.

2. டிஜிட்டல் லாக்கர் மற்றும் சாவிக் கட்டுப்பாடு:

திடீரென பெற்றோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர்களால் எழுந்து வந்து கதவைத் திறக்க முடியாத சூழல் வந்தால், பூட்டை உடைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்க 'ஸ்மார்ட் டோர் லாக்' பொருத்தலாம். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளே தங்களின் மொபைல் செயலி மூலம் இந்தியாவின் வீட்டின் கதவைத் திறந்துவிட முடியும். அல்லது நம்பகமான அண்டை வீட்டாருக்கு 'டிஜிட்டல் பாஸ்கோடு' கொடுத்து உதவலாம்.

3. உள்ளூர் அவசரக்கால மருத்துவக் குழுக்களுடன் சந்தா:

இந்தியாவில் உள்ள பல முன்னணி மருத்துவமனைகளும், முதியோர் நல்வாழ்வு அமைப்புகளும் அவசரக்கால ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவச் சேவைகளுக்கான மாதாந்திர சந்தா திட்டங்களை வழங்குகின்றன. இதில் இணைந்து கொள்வதன் மூலம், ஒரு அவசர அழைப்பு வந்த உடனே, அதிநவீன ஆம்புலன்ஸ் தகுதியான மருத்துவ உதவியாளர்களுடன் வீட்டிற்கே விரைந்து வந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
NRI குடும்பங்களின் சாய்ஸ்: ஊட்டியில் சொகுசா? வால்பாறையில் அமைதியா?
முதியோர் பாதுகாப்பு

4. வங்கி மற்றும் கட்டணங்களை டிஜிட்டல் மயமாக்குதல்:

மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி, பால் மற்றும் மளிகைக் கட்டணங்கள் போன்றவற்றுக்காக வயதான பெற்றோர் வெயிலில் அலைவதைத் தவிர்க்க, அனைத்தையும் 'ஆட்டோ டெபிட்' முறையில் பிள்ளைகளே தங்களின் கணக்கிலிருந்து செலுத்திவிடலாம். அதேபோல, ஆன்லைன் மளிகைக் கடைகள் மூலம் மாதத்தின் முதல் தேதியிலேயே வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வெளிநாட்டிலிருந்தே ஆர்டர் செய்து நேரடியாக வீட்டிற்கு வரவழைக்கலாம்.

5. அன்பான பேச்சு:

பெற்றோர்களோடு தினமும் பேசுவது அவசியமானது. ஆனால், "சாப்டீங்களா?", "மாத்திரை போட்டீங்களா?" என்ற இயந்திரத்தனமான கேள்விகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளக் கூடாது. தங்களின் அன்றாட நிகழ்வுகளைப் பகிர்வது, பேரக் குழந்தைகளுடன் பேச விடுவது போன்ற செயல்கள் பெற்றோரைத் தனிமையில் இருந்து மீட்கும்.

இதையும் படியுங்கள்:
வெளிநாட்டு NRI பிள்ளைகள் இந்தியாவில் உயர்கல்வி படிக்கப் போறாங்களா? இதோ முழு வழிகாட்டி!
முதியோர் பாதுகாப்பு

பிள்ளைகளின் புன்னகையும் அன்பான பேச்சும்தான் வயதான பெற்றோரின் ஆகச்சிறந்த டானிக் என்பதைப் புலம்பெயர்ந்தவர்கள் உணர வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com