பூப்படைதல் என்னும் சூழ்நிலையில், பெண் குழந்தைகளுக்கு புரியாத வயது, புதிதான அனுபவம், மனதில் ஒருவித பயம், இனம் புரியாத கவலை ஆகியவை தோன்றும். அந்த நேரத்தில் ஒரு தாய், தனது மகளை அன்போடு அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு அன்பினை பரிமாறி தளர்வான மனநிலைக்குக் கொண்டுவந்து அக்குழந்தைக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும். மேலும், தனது வாழ்வில் கடந்து வந்த பாதையை புரிய வைத்து, அப்பெண் குழந்தையின் பயத்தை தெளிய வைத்து மனதில் மகிழ்ச்சியை வரவழைக்க வேண்டும்.
ஒரு பெண் குழந்தை பூப்படைந்தால் அவளுக்கு மிகவும் முக்கியமாகத் தேவைப்படுவது ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்களின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும். எலும்புகளை வலுவாக்கவும், சீரான மாதவிடாய் சுழற்ச்சிக்கும் இந்த ஹார்மோன் செயல்பாடுகள் உதவும்.
தேவையான ஊட்டச்சத்துக்கள்: உடல்பலம், மனபலம், மாதவிடாய் சுழற்சி சீராகி வாழ்க்கை மிகச் சிறப்பாக வருவதற்கு முக்கியமாக செய்து கொடுக்கக் கூடிய உணவு முதல் 15 நாட்களும் கால் கப் நல்லெண்ணெயில் ஒரு நாட்டு கோழி முட்டையை அடித்து ஊற்றி குடிக்க வைக்க வேண்டும். மேலும், முதல் நாளில் பச்சரிசி மாவில் வெல்லம், சுக்கு, தேங்காய் போட்டு விரவி உருண்டை கொடுக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் தேங்காய் பாலில் வாழைப்பழம் சேர்த்து கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக மூன்றாம் நாளில் இருந்து 15ம் நாள் வரையில் ஒரு கப் அளவு செய்து கொடுக்கக்கூடிய அமிர்தம் உளுந்தங்களி. இடுப்பு எலும்பினை வலுப் பெறச் செய்து, மாதவிடாய் சுழற்சியை சீர் செய்து இரும்பு சத்து, கால்சியம் சக்தியை அதிகம் கொடுத்து அப்பெண் குழந்தையின் உடல் உஷ்ணத்தைக் குறைத்து வயிற்று வலியை மறக்கச் செய்து புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது உளுந்தங்களி.
ஊளுந்த மாவு, சிறிது அரிசி மாவு சேர்த்து நீர் விட்டு நன்றாக கிண்டி வேக வைத்து வெல்லக் கரைசல், ஏலக்காய், முந்திரி, நெய் சேர்த்த களியின் சுவையை பூப்பெய்த பெண் அறிந்து கொண்டால் தொடர்ந்து அதனை விரும்பி சாப்பிடுவாள். அவளது எதிர்கால திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு, சுகப்பிரசவம், அனைத்திற்கும் இந்த அமிர்தம் வித்தாகும்.
உடல் அளவிலும் மன அளவிலும் பலம் சேர்ந்த மங்கையராக பல துறைகளிலும் சாகசம் செய்து சாதிப்பதற்கு உடலுக்கு பலம் அளிப்பது உளுந்தங்களி. அத்துடன் 4 பேரீச்சம் பழம் பாலில் ஊறவைத்து தேன் கலந்து தினமும் இரவு கொடுக்கவும். முருங்கை கீரை நாட்டு கோழி முட்டை சேர்த்து பொரியல் செய்து கொடுக்க, இந்த சமயத்தில் உடல் நலம் சீராக வழிவகுக்கும்.
கெட்ட கொழுப்புகள் உடலில் இருந்து வெளியேற சமையலில் அதிகமாக நல்லெண்ணெய் சேர்க்கவும். மேலும், கீரை வகைகள், காய்கறி வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் என அனைத்தும் இந்த நேரத்திற்கு பெண் குழந்தைகள் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் ஆகும்.
பெண் குழந்தைக்கு தாய் கூறும் ஊக்க வார்த்தைகள்: “குழந்தாய், நீ வைரத்தின் ஒளியாய் ஜொலிக்க வேண்டும். உன்னை சுற்றிலும் ஒளி வீசி வாழ்வில் சாதனைகள் பல பெற்று வாழ வேண்டும்” என்பதை தாய் தனது மகளுக்கு உணர்த்த வேண்டும்.
“பெண்ணே நீ எத்தனை சோதனைகள் வந்தாலும் துவளாதிருந்து வாழ்வில் வெற்றி காண வேண்டும். புகழுக்கு என்றும் மயங்காதிரு. சிந்தனை செய்வதில் தனித்துவமாய் இரு. புதுமை புகுத்துவதில் முனைப் பாய் இரு. வெற்றிக்கனி கிடைத்து மனதிற்கு என்றும் மகிழ்வாய் இரு” என்று ஒவ்வொரு தாயும் தன்னுடைய பெண் குழந்தைகளை இந்த நேரத்தில் ஊக்கப்படுத்த வேண்டும்.