மழைக்காலத்தில் பலரும் வேறு வழி இல்லாமல் ஈரமான ஆடைகளை அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். மழையில் நனைந்துவிட்டால் உடனடியாக துணிகளை மாற்ற வேண்டும். ஈரமான ஆடைகளை தொடர்ந்து அணிந்து இருந்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது வெயில் காலம் முடிந்து மழைக்காலம் துவங்கி உள்ளது. எனவே, நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. வேலைக்குச் செல்லும்போது அல்லது வெளியில் செல்லும்போது மழை பெய்தால் நனைய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
என்னதான் ரெயின்கோட் அல்லது குடையை பயன்படுத்தினாலும் துணிகள் நனைந்துவிடும். மீண்டும் வீட்டிற்கு வரும் வரை அவற்றை மாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த சமயத்தில் நீண்ட நேரம் ஈரமான ஆடைகளை அணிந்து இருக்கும்போது நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் போதுமான வெளிச்சம் இல்லாததால் துணிகளும் அவ்வளவு சீக்கிரம் காய்வது இல்லை. எனவே, மழைக்காலத்தில் கூடுதல் துணிகளை கைவசம் வைத்துக்கொள்வது நல்லது. ஈரமான ஆடைகளை நீண்ட நேரம் அணிவதால் சருமம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அது மட்டுமின்றி, ஈரமான உள்ளாடைகளை நீண்ட நேரம் அணிந்து இருக்கும்போது தொற்று பிரச்னை அபாயத்தையும் அதிகரிக்கிறது.
ஈரமான ஆடைகளை அணிவதால் ஏற்படும் பிரச்னைகள்: பொதுவாக, மழைக்காலத்தில் அதிக நோய்கள் பரவும். மழையில் நனைந்த பின்னர் நீண்ட நேரம் ஈரமான ஆடைகளை அணிந்திருக்கும்போது தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆடைகள் ஈரமாக இருக்கும்போது உடலின் இயற்கையான வெப்பநிலையும் வெளியேறுகிறது. இதனால் இந்த பருவத்தில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் பிரச்னைகள் ஏற்படும். இவை அனைத்தும் பரவக்கூடிய நோய்கள் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஈரமான உள்ளாடைகளை நீண்ட நேரம் அணிந்து இருந்தால் பிறப்புறுப்பில் தொற்று நோய்கள் ஏற்படும். இதன் காரணமாக அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஈரப்பதமான பகுதியில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். எனவே, அங்கு சொறி அல்லது பருக்கள் தோன்றும். பின்னாளில் இவை பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. எனவே, மழையில் நனைந்தால் உடனே உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு மழையில் நனைய மிகவும் பிடிக்கும். அவர்களின் ஆசைக்கு நனையவிட்டால் பின்பு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் நீண்ட நேரம் ஈரமான உடையில் இருக்கும் போது நிமோனியா ஆபத்து அதிகரிக்கிறது.