
சில எண்கள் கெட்ட பலனைத் தரும் என்று நினைப்பவர்கள் உண்டு. அப்படிப் பலரும் ஒதுக்க நினைக்கும் எண்களில் ஒன்று எட்டு. எண் எட்டிற்கு அஞ்சுவதற்கு ஆக்டோஃபோபியா என்று பெயர். எட்டு எண் தவிர்க்கப்பட வேண்டியது என்று நம்புபவர்கள், அவர்கள் வீட்டு எண், வாகன எண், கைபேசி எண் ஆகியவற்றில் உள்ள எண்களின் கூட்டுத் தொகையில் எட்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பர்.
எண் கணித வல்லுநர்கள், எட்டு சனி கிரகத்தைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் துயரமும், இருள் சூழ்ந்த நிலையும் ஏற்படும் என்றும், எட்டும் அதன் காரணியான நான்கும் தவிர்க்கப்பட வேண்டிய எண்கள் என்றும் கூறுவர்.
அமாவாசை, பௌர்ணமி முடிந்த எட்டாவது நாள் அஷ்டமி திதி எனப்படும். 'அஷ்டம்' என்ற வடமொழிச் சொல் எண் எட்டைக் குறிக்கும். இந்த நாளில் சுப காரியங்கள் செய்வதைத் தவிர்ப்பார்கள். ஆனால் 8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிகாரத்துடனும், தன்னம்பிக்கையுடன் வாழ்வதுடன் சமூகத்தில் உயர் பதவியை அடைவார்கள் என்றும் எண் கணிதம் கூறுகிறது.
எட்டு அஞ்சப்பட வேண்டியது என்று நம்புபவர்கள், அதற்கு உதாரணமாக எடுத்துச் சொல்வது, எட்டுடன் தொடர்புடைய நாட்களில் நடந்த சில துயரச் சம்பவங்கள்.
சென்னையை சுனாமி தாக்கிய தேதி டிசம்பர் 26, 2004. தேதி, மாதம், வருடம் கூட்டுத் தொகை எட்டு.
இந்தோனேஷியாவை சுனாமி தாக்கிய தேதி ஜூலை 17, 2006. சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்த வருடம் 2015. கூட்டுத் தொகை எட்டு.
நவம்பர் எட்டிலிருந்து தொடர் மழையும், வெள்ளமும் ஆரம்பித்தது. சென்னையில் பல இடங்கள் வெனிஸ் ஆக மாறிய நாள் டிசம்பர் ஐந்து. 1+2+5=8.
பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது 8 ஆம் தேதி (08-10-2005). 86000 மக்கள் இறந்தனர்.
மும்பை நகரம் வெள்ளத்தில் மூழ்கிய நாள் 26ஆம் தேதி (26-07-2005).
சீனர்களுக்கு எட்டு ராசியான எண் என்று நம்பிக்கை. பீகிங்கில் கோடை ஒலிம்பிக்ஸ் ஆரம்பித்தது 8-வது மாதம், 8-வது தேதி, 2008 வருடம். இந்த மூன்றையும் கூட்டினால் வரும் தொகை எட்டு. நிகழ்ச்சி ஆரம்பமான நேரம் எட்டு மணி, எட்டு நிமிடம், எட்டு வினாடிகள்.
புத்த மதத்தின் சின்னமான தர்மச் சக்கரம் எட்டு ஆரங்கள் கொண்டது. பிறப்பு, துயரம், இறப்பு என்ற வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுபடுவதற்குத் தேவையான எட்டு பாதையை இந்த எட்டு ஆரங்கள் குறிக்கின்றன.
சொர்க்கத்திற்கு எட்டு கதவுகள் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. சொர்க்கத்தில் அல்லாஹ்வின் சிம்மாசனத்தை சுமந்து செல்லும் தேவதைகளின் எண்ணிக்கை எட்டு.
இந்து மதத்தில் எட்டிற்கு முக்கியமான இடம் உண்டு. செல்வத்திற்கும், செழிப்பிற்கும் அதிபதியான லட்சுமியை மகாலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி என்று அஷ்டலட்சுமியாக வணங்குகிறோம். எண் திசைகளையும் காவல் செய்வது அஷ்ட திக்பாலகர்கள்.
தமிழ் வேதமான திருக்குறள் இறைவனை 'எண் குணத்தான்' என்று குறிக்கிறது. சைவ, வைணவ ஆகமங்களும், வடநூல் சாத்திரங்களும் இறைவனுக்கு எட்டு குணங்கள் என்று அறிவுறுத்துகின்றன. பரம் பொருளின் எட்டு குணங்கள் – தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், பாசங்களினின்று நீங்கி நிற்றல், இயற்கை உணர்வினன் ஆதல், பேரறிவுடமை, வரம்பில்லாத ஆற்றல், வரம்பில்லாத அருள், வரம்பில்லாத இன்பவடிவினன்.
இந்து சமய அற நூல்கள் ஆத்ம குணங்கள் என்ற எட்டு நற்குணங்கள் மனிதனுக்குத் தேவை என்று பட்டியலிடுகிறது. அவை தயை, சாந்தி, பொறாமை இல்லாதிருத்தல், சுத்தமாக இருத்தல், அனாயாசம், மங்களம், அகார்ப்பண்யம் – கருமித்தனம் இல்லாதிருத்தல், அஸ்ப்ருகம் – பற்று இல்லாமை.
என்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் எண்களின் இலக்கங்கள் கூட்டுத் தொகை எட்டு அல்லது அதன் காரணி நான்கு என்று வருவதைப் பார்த்திருக்கிறேன். பிறந்த தேதியின் கூட்டுத் தொகை நான்கு. பொறியியல் கல்லூரியில் அளிக்கப்பட்ட பட்டியல் எண், அலைபேசி எண், வீட்டின் எண் மோட்டார் வாகனத்தின் பதிவு எண் ஆகிய எண்களின் கூட்டுத் தொகை எட்டு. இவையாவுமே தற்காலிகமாக நிகழ்ந்தது. திட்டமிட்டு செயலில்லை. இதனால் எனக்கு கெடுதல் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ எண் எட்டு என்னைத் துரத்துகிறது.