
ஜப்பானில் உள்ள கிராமமாகிய ஒஜிமியில் 3000 மக்கள் வாழ்கிறார்கள். இந்த கிராமத்தில் 100 வயதிற்கு மேல் மக்கள் எல்லோருமே வாழ்வதால், அதிக நாட்கள் பூமியில் வாழக்கூடிய மக்களைப் பெற்ற கிராமம் என இது சிறப்பித்துக் கூறப்படுகிறது. வயதானாலும் இளமையுடன், சந்தோஷமாகவும் இவர்கள் இருக்கிறார்கள். அதன் ரகசியம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
Hara hachi bu: சாப்பிடும் முறையில் அவர்கள் 80 சதவீதம் வயிறு நிறையும் வரை சாப்பிடுவார்கள். சாப்பிடும்போது ஒவ்வொருவரும் ‘Itadakimasu’ என்ற பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அதாவது, ‘இந்த உணவு எனக்குக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்பது அதன் அர்த்தம். இப்படிக் கூறுவதன் மூலம் அவர்கள் உணவு, விவசாயம் மற்றும் பூமியை மதிக்கிறார்கள்.
உணவை மிகவும் மெதுவாக சாப்பிடுகிறார்கள். காலத்திற்கேற்ப வண்ணமயமான உணவுகளை இவர்கள் உண்ணுகிறார்கள். சாப்பிடுவதில் அவர்கள் அவசரப்படுவதில்லை. அதை உயிராக நினைத்து உண்ணுவார்கள். முழு உணர்வோடு அவர்கள் அதை உண்ணுவதால் செரிமானம் சீராகிறது. இதனால் அழற்சி தடுக்கப் படுகிறது. மேலும், குறைந்த கலோரிகள் கொண்ட உணவையே அவர்கள் உண்பதால் அவர்களுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
Maoi முறை: இக்கிராம மக்கள் தங்கள் சிறு வயது தோழர்கள் மற்றும் பணம் கொடுத்துதவும் மற்றும் ஆன்மிகத்தில் உதவும் நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து உண்பதே maoi முறை ஆகும். சிறு வயது முதல் வயதான வரை இந்தப் பழக்கத்தைத் தொடர்கிறார்கள். ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது, பாடுவது போன்றவற்றை இவர்கள் பாரம்பரிய வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் தனிமை போக்கப்படுகிறது. இதுவும் அவர்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணமாகிறது.
இயற்கையோடு இணைதல்: பச்சை பசேலென்ற இடங்களில் தினமும் நடப்பது, தோட்ட வேலைகளைப் பார்ப்பது மற்றும் ஆன்மிகம் இவற்றை மேற்கொள்கிறார்கள். இயற்கை தங்களுக்கு வழிகாட்டுவதாக இவர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் ஜிம்மிற்கு போவதில்லை. படி ஏறுதல், தோட்ட வேலையில் ஈடுபடுதல் என்று கைகள் மண்ணிலும் கண்கள் கடல் முன்னுமாக வைக்கிறார்கள். 100 வயதிற்கு மேற்பட்டவர்களும் தோட்ட வேலையில் ஈடுபடுவது இந்த கிராமத்தில் சகஜமானது.
ஒஜிமி பழக்கத்தைக் கைக்கொள்ள ஜப்பான்தான் செல்ல வேண்டும் என்பது அல்ல. இந்த அவசர யுகத்தில் மெதுவாக உண்ணுதல், நெருக்கமானவர்களுடன் சேர்ந்து உண்ணுதல் மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்தல் போன்றவற்றை பின்பற்றினாலே நாமும் நம் மனதையும் உடலையும் சரி சமநிலையில் வைத்திருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.