
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய நவீன உலகில், டிஜிட்டல் சேவைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. ஆன்லைனில் பெரும்பாலும் அனைத்தையும் செய்ய முடியும் என்பதால் பலருக்கும் நேரம் மிச்சமாகிறது. கார், ஆட்டோ புக்கிங் செய்வது முதல் மின் கட்டணம் செலுத்துவது வரை ஆன்லைன் வசதிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
ஆன்லைன் சேவைகள் எந்த அளவிற்கு நமக்கு வசதியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு அதில் ஆபத்துகளும் நிறைந்துள்ளன. ஏனெனில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு தான் மோசடிகளும் அதிகரித்துள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால் ஆன்லைனில் எந்தச் சேவையைப் பெறுவது என்றாலும் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
முன்பெல்லாம் மின் கட்டணத்தைச் செலுத்த மின்சார அலுவலகத்திற்குச் சென்று வரிசையில் நிற்போம். ஆனால் இப்போது வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி வந்த பிறகு, பலரும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். சிலர் தாங்களாகவே மின் கட்டணத்தை செலுத்தும் நிலையில், சிலர் இ-சேவை மையங்களில் மின் கட்டணத்தை செலுத்துகின்றனர்.
நாம் ஆன்லைன் சேவைகளைப் பாதுகாப்பாக உபயோகப்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சில மோசடியான குறுந்தகவல்கள் மற்றும் இணைய முகவரிகளின் மூலம் நாம் ஏமாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியமும் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. மின் கட்டணம் செலுத்துவது தொடர்பான போலியான குறுந்தகவல்கள் அண்மை காலங்களில் அதிகளவில் உலா வரத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலியின் வாயிலாக மட்டுமே மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். மொபைல் போனிற்கு வரும் அதிகாரப்பூர்வமற்ற லிங்க் வழியாக பொதுமக்கள் பலரும் மின்கட்டணத்தைச் செலுத்தி, தங்கள் பணத்தை இழந்துள்ளனர். தெரியாத லிங்க் மற்றும் எண்களைத் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே தற்காப்பின் மிகச் சிறந்த வழியாகும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான TNEB செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.
மேலும் புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் நபர்கள், தங்களுடைய மொபைல் எண்ணைத் தான் வழங்க வேண்டும். மாறாக முகவர்களின் எண் அல்லது கணிணி மையத்தின் எண்ணை வழங்குதல் கூடாது. உங்கள் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மின்சார பில் தொகையை மின்சார வாரியத்தின் வலைதள முகவரிக்குச் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
மின் கட்டணத்தை செலுத்திய பிறகு, சரியாக செலுத்தி விட்டீர்களா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். மோசடிகள் அதிகம் நடைபெறும் இன்றைய காலகட்டத்தில் நாம் தான் கவனமுடன் செயல்பட வேண்டும். ஆன்லைன் மின் கட்டணம் தொடர்பாக மேலும் சந்தேகங்கள் இருந்தால் 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.