.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நமது வீட்டிற்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென உறவினரோ அல்லது நண்பரோ வந்து காலிங்பெல்லை அழுத்தி விட்டு நிற்பார்கள். யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே நாம் கதவைத் திறந்தால் வெளியே நின்று கொண்டிருக்கும் உறவினரோ அல்லது நண்பரோ நம்மைப் பார்த்து. “சர்ப்ரைஸ் விசிட்” என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே வீட்டினுள் நுழைவார். நாமும் ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு “வாங்க வாங்க” என்று வரவேற்போம்.
யாரும் வரப்போவதில்லை என்று நினைத்து நாம் நமது வீட்டை சுத்தம் செய்யாமல் போட்டது போட்டபடி அப்படியே வைத்திருப்போம். துவைத்த துணிகள், நாளிதழ்கள், வார இதழ்கள், ஸ்கூல் பேக் முதலானவை ஆங்காங்கே கிடக்கும். நேரம் கிடைக்கும்போது கொஞ்ச கொஞ்சமாக மடித்து வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்போம். திடீரென்று வந்தவர் இதைப் பார்த்து ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார் என்று நினைத்து நாமும் அவரை உட்கார வைத்து வீட்டை மளமளவென சுத்தம் செய்ய ஆரம்பிப்போம். வந்தவரும், “கிடக்கட்டும் விடுங்க. எல்லார் வீடும் இப்படித்தான் கிடக்கும்” என்பார். ஆனால் வந்தவரோ, “என்ன வீடு இது. இப்படி போட்டது போட்டபடி கிடக்கே. வீட்டை சுத்தமா வெச்சிக்கத் தெரியலையே“ என்று மனதிற்குள் நினைத்துக் கொள்ளுவார். இதெல்லாம் இருவருக்குமே தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையை எப்படித் தவிர்ப்பது என்பதை நாம் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் திடீரென யார் வீட்டிற்கும் போய் நிற்காதீர்கள். நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் அவர்கள் வீட்டிற்குப் போய் நின்றால் நிச்சயம் அவர்களுக்கு அது தர்மசங்கடத்தைத்தான் ஏற்படுத்தக்கூடும். உறவினரோ அல்லது நண்பரோ யாருடைய வீட்டிற்காவது செல்ல முடிவு செய்தால் முன்கூட்டியே அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த நேரத்திற்கு உங்கள் வீட்டிற்கு வர இருக்கிறேன். வரலாமா? என்று முன் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள்.
முடிந்தால் எதற்காக அவர்கள் வீட்டிற்குச் செல்ல இருக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே அவர்களிடம் தெரிவித்துவிடுவது நல்லது. அவர்கள் அதற்கேற்றபடி தயார் நிலையில் இருக்க இது உதவக்கூடும். திடீரென்று ஒருவர் வீட்டிற்குச் சென்றால் வந்தவரை உபசரிக்க அவர் வீட்டில் ஏதும் இல்லாமல் இருக்கலாம். முன்கூட்டியே தெரிவித்தால் இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து வைப்பார்கள். இது அவர்களுடைய தர்மசங்கட சூழ்நிலையைத் தவிர்க்கும்.
பொதுவாக, இரவு நேரமாக இருந்தால் ஏழு மணிக்குச் சென்று எட்டு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விடுங்கள். எட்டு மணிக்கு மேல் யார் வீட்டிலும் உட்கார்ந்து கதை பேசாதீர்கள். அவர்கள் இரவு நேர உணவை தயார் செய்ய வேண்டியிருக்கும். உங்களை வைத்துக் கொண்டு இரவு நேர உணவை தயார் செய்வதில் அவர்களுக்கு தர்மசங்கடங்கள் ஏற்படலாம். அல்லது அவர்கள் வெளியே ஓட்டலுக்குச் சென்று உணவை சாப்பிட திட்டம் போட்டிருக்கலாம்.
நீங்கள் செல்ல விரும்பும் அந்த நேரத்தில் அவர்களுக்கு வேறு ஏதாவது தவிர்க்க இயலாத முக்கியமான வேலைகள் இருக்கலாம். அல்லது வேறு யாராவது அவர்கள் வீட்டிற்கு வர இருக்கலாம். அந்த சமயத்தில் உங்கள் வருகையை அவர் விரும்பாமல் இருக்கலாம். திடீரென நீங்கள் போய் நின்றால் அது அவருக்கு தர்மசங்கடத்தை விளைவிக்கும். உங்களை சரியாக வரவேற்க இயலாத சூழ்நிலை ஏற்படும்போது அது உங்களுக்கும் மனக்கசப்பை உண்டாக்கும். நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் எங்கேயாவது வெளியில் சென்றிருக்கலாம். வீட்டில் இல்லாத சமயத்தில் அவர் வீட்டிற்குச் சென்று நீங்கள் ஏமாற்றமடைந்து திரும்புவதை ஒரே ஒரு போன் கால் மூலம் தவிர்க்கலாம்.
பார்த்தீர்களா? ஒரு சாதாரண விஷயம். இதற்குப் பின்னால் எவ்வளவு தர்மசங்கடங்கள் இருக்கின்றன. ஆகையினால் நண்பர்களே, யார் வீட்டிற்காவது செல்ல முடிவு செய்தால் முன்னதாக ஒரு போன் கால் செய்து வரலாமா என்று கேட்டு, அவர்கள் வாருங்கள் என்றால் நிம்மதியாகச் செல்லுங்கள். இது இரு தரப்பு தர்மசங்கடங்களையும் நிச்சயம் தவிர்க்கும்.