சிற்றப்பா, பெரியப்பா போன்ற முக்கிய உறவுகளே தற்காலத்தில் அருகி வருகிறது.
‘நாம் இருவர்-நமக்கு இருவர் என்ற ‘கான்சப்ட்’ வந்த பிறகு பல உறவு நிலைகள் மெல்லக் குறைந்து வருகின்றன! ஒரு பையனும் ஒரு பெண்ணுமாக உள்ள குடும்பங்களில் கொழுந்தனுக்கும் வேலையில்லை! நாற்றனார் மட்டும் இருக்கலாம்!
ஆனால் இந்தக் ‘கொழுந்தன்’, ’நாற்றனார்’ போன்ற சொற்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றைப் பார்த்தால், நம் முன்னோர்களின் புத்திசாலித்தனம் மிளிர்வதை உணரலாம்!
பெண்களின் ஏழு பருவம் குறித்து நாம் அனைவரும் அறிவோம்!
பேதை (5-7 வயது)
பெதும்பை (8-11)
மங்கை (12-13)
மடந்தை (14-19)
அரிவை (20-25)
தெரிவை (26-31) மற்றும்
பேரிளம்பெண் (32-40)
அதைப்போல ஆண்களுக்கும் ஏழு பருவங்கள் சொல்லப்படுகின்றன. அவை:
பாலகன் (01-12)
விடலை (13-24)
காளை (25-36)
மீளி (37-48)
மறவோன் (49-60)
திறவோன் (61-72)மற்றும்
முதுமகன் (73க்கு மேல்)
சரி!கொழுந்தன் பெயருக்குப் போகலாமா?
மனித வாழ்க்கை, மரத்தோடு மிகுந்த தொடர்புடையது! தொட்டில் தொடங்கி சுடுகாடுவரை மனிதனோடு ஐக்கியமானவை மரங்கள்! அந்த மரங்களின் இலைகளுக்கும் பல பருவங்கள் உண்டு. அவையாவன:
கொழுந்து
தளிர்
இலை
பழுப்பு மற்றும்
சருகு
இலையின் முதல் நிலை கொழுந்தில்தான் ஆரம்பிக்கிறது. அந்தக் கொழுந்தை அடிப்படையாகக் கொண்டே ‘கொழுந்தன்’ என்ற வார்த்தை தோன்றியதாம்! அதாவது கணவனின் சிறிய தம்பியைக் குறிக்கும் விதமாகக் கொழுந்தன் என்றார்களாம். புருஷனின் அண்ணனாக இருந்தால் மூத்தார் என்ற வார்த்தைப் பிரயோகம் வழக்கிலுள்ளது. கொழுந்தன் எனும் பதத்தைக் கம்பன் தன் ராமாயணக் காவியத்திலும் பயன்படுத்தியுள்ளது ஈண்டு நினைவுகூரத்தக்கது.
கதைக்களம் இதுதான்! வஞ்சகமான முறையில் போர் முனையில் இலக்குவனை மயங்கச் செய்து, அசோக வனச் சீதையை அங்கு தருவித்து, ’என் ஆசைக்கு நீ இணங்க வில்லையென்றால் நாளை உன் கணவனுக்கும் இதே கதிதான் ஏற்படும்!’ என்று பயமுறுத்தும் விதமாக இராவணன் நடத்தும் நாடகம் இது! போர்முனைக்கு வந்த சீதை புலம்பித் தவிக்கிறாள்! இதோ கம்பன் பாட்டால்!
விழுந்தாள் எழுந்தாள் உடல்முழுதும் வியர்த்தாள்
அயர்த்தாள் வெதும்பினாள்-கொழுந்தா என்றாள் அயோத்தியர்தம்
கோவே என்றாள் எவ்வுலகும் தொழும்தாள் அரசே! ஓ! என்றாள்!
சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள்!
அடுத்து நாற்றனார்!
இது நமக்கு உணவளிக்கும் நெற்பயிருடன் தொடர்புடைய ஒரு சொல்! டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணை திறக்கும் முன்பாகவே நாற்றங்கால் தயார் செய்து அதில் விதையைத் தெளித்து விடுவார்கள். அது நன்கு வளர்ந்ததும் மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் அதனைப் பறித்து மெயின் வயலில் நடுவார்கள். அந்த நாற்றைப் போலவே, புதிதாகத் திருமணமாகிப் போகும் பெண்ணின் கணவனின் தங்கை வேறு வீட்டிற்கு வாழப் போகிறவள்! என்ற கருத்தில் நாற்றனார் என்ற சொல் வந்ததாம்!
அதில் உள்ளார்ந்த அர்த்தம் ஒன்றும் உண்டு! உனது நாற்றனார் உன்னோடு இருக்கப் போகிறவள் அல்லள்! விரைவில் வேறு வீடு செல்லப் போகிறவள்! அதனால் அவளை எதிரியாய்ப் பார்க்காதே!என்று புதுமணப் பெண்ணுக்கு உணர்த்தும் விதமாகவும் நாற்றனார் என்ற சொல் அமைந்ததாம்!
நமது மாண்புதான் என்னே!