
வாழ்க்கையில் எப்போதும் தோல்விகள் மட்டுமே வந்து கொண்டு இருக்காது. இருப்பதைக் கொண்டு முயற்சி செய்தால் சீக்கிரமாக வெற்றி கிடைக்கும்.
நாம் தான் நினைத்துக்கொண்டு இருப்போம். இந்த உலகத்தில் நாம் மட்டும்தான் கஷ்டப்பட்டிருக்கோம். மற்றவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவர்கள் நம்மை விட பெரிய அளவில் பிரச்னையில் துவண்டு இருப்பார்கள். அது நமக்கு தெரிவது இல்லை.
அதற்கு உதாரணம் இக்கதை.
விறகு வெட்டி ஒருவர் ஒரு ஊரில் இருந்தார். அன்றைய பொழுது வெட்டும் விறகுகளை விற்றால்தான் அவருடைய வீட்டில் சாப்பாடு. தான் விற்கும் பணத்தில் அன்றைய சாப்பாட்டுக்கு மட்டும்தான் உண்ண முடியும். எதையும் பணம் சேமிக்க முடியவில்லை. அந்த வேதனையில் அவர் நடந்து செல்லும் போது அவரது செருப்பு பிய்ந்துவிட்டது. அதை தைப்பதற்குக் கூட செருப்பில் இடமில்லை. அந்த அளவிற்கு அங்கே முள் குத்தி எல்லாமே பிஞ்சு போய் இருந்தது. இதற்கு மேலும் அதை பயன்படுத்த முடியாததால் விறகு வெட்டி தூக்கி எறிந்துவிட்டார்.
பிறகு வழக்கம்போல அவர் விறகு வெட்ட செல்லும்போது காலில் செருப்பு இல்லாததால் முட்கள் அவர் காலை பதம் பார்த்துவிட்டது. அவரும் வேறு வழி இல்லாமல் வெறுங்காலோடு விறகு வெட்டி சமாளித்து விற்று வந்தார்.
அடுத்த நாள் எப்படியாவது இன்றைய பணத்தில் செருப்பு வாங்கி விடவேண்டும் என நினைத்தார். ஆனால் விற்று கிடைக்கும் சொற்ப பணத்தில் அவருக்கு வீட்டு குழந்தைகளுக்கான சாப்பாட்டுக்கு மட்டும்தான் வாங்க முடிகிறது. இப்படியே மாதக்கணத்தை தாண்டி விடுகிறது. செருப்பு வாங்கவே முடியவில்லை.
ஒருநாள் அவருக்கு கடவுள் மீது கோபம் வந்து, 'உன்னிடம் என்ன கேட்டேன்? எனக்கு பெரிய ஆடம்பரம் தேவையில்லை. எப்போதும் இருக்கிற லெவலுக்கு ஒரு செருப்பு வாங்குற அளவுக்கு எனக்கு சிறிது வருமானத்தை கொடு! அப்படி என்றால்தான் என்னால் அடுத்த நாள் வேலை பார்க்க முடியும்.
நான் ஒரு நாள் வேலைக்கு போகவிட்டாலும் என் குழந்தைகள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேண்டும் என்றுதானே? நான் உன்னிடம் கேட்டேன் என்று கோபத்தில் புலம்பினார்.
ஒரு நாள் கோயிலுக்கு போய் கடவுளிடம் முறையிட நடந்து சென்றார். அப்போது அவருக்கு அங்கு ஒரு அதிர்ச்சியான நிகழ்வை பார்த்தார்.
இரண்டு நபர்கள் இரண்டு கால்களும் இல்லாமல் கோவிலின் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போதுதான் அவருடைய மனதில் தோன்றியது. நமக்கு காலில் செருப்பு இல்லை என்று இங்கே கடவுளிடம் சண்டைபோட வந்தேன்.
ஆனால் இங்கே இருக்கும் நபருக்கு இரண்டு கால்களுமே இல்லையே என யோசித்துப் பார்க்கிறார்.
அதற்கு பிறகுதான் புரிந்தது அவருக்கு, நம்மிடம் இருக்கும் பொருள் நமக்கு சிறியதாக இருந்தாலும், வேறு ஒருவருக்கு அதுவே பெரியதாக இருக்கிறது. என்பது!.
அடுத்த நாள் மீண்டும் வேலைக்கு விறகு வெட்டி வழக்கம்போல் சென்று, காலில் முள் குத்தியும் அவருக்கு வலிக்கவில்லை. எப்படியும் சில நாட்களில் இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வருவேன்.
அதற்கான முயற்சியில் வலியோடு இருந்தாலும் சரி தீவிரமாக முயற்சி செய்வேன், என்று அவர் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டே இருந்தார். இது போல்தான் நண்பர்களே! கஷ்டங்கள் வந்துவிட்டது என்று சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டால் அந்த கஷ்டங்கள் நம்முடைய தலையின் மேல் கூடுகட்டி கும்மாளம் போடும். ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை நோக்கி நாம் அடுத்து அடுத்து முயற்சி எடுத்து சமாளித்து வெற்றி காண்போம்!
தெளிவாக அடி எடுத்து வைப்போம்! வெற்றி நிச்சயம் கிடைக்கும்!