தற்காலத்தில் சொந்தமாகக் கார் வைத்திருப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நகரங்களில் வசிப்போருக்கு கார் மிகவும் இன்றியமையாத ஒரு விஷயமாக ஆகி விட்டது. சமீப காலத்தில் ஆப் மூலம் ஆன் லைனில் புக் செய்தால் ஐந்தே நிமிடங்களில் வாடகை கார் நம் இல்லத்தின் முன்னால் வந்து நிற்கிறது. நகரப் பகுதிகளில் வசிப்போருக்கு சொந்தமாக கார் வைத்துக்கொள்ளுவது சிறந்ததா இல்லை தேவைப்படும்போது வாடகைக் காரை உபயோகிப்பது சிறந்ததா என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தற்காலத்தில் பல வசதிகள் கொண்ட ஒரு காரின் விலை சுமார் ஐந்து லட்சங்கள் முதல் எட்டு லட்சங்கள் வரை கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பெட்ரோலுக்கு ஒரு கணிசமான தொகை செலவாகிறது. வருடத்திற்கொரு முறை வாகனக் காப்பீடு செலவு இருக்கிறது. மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழைப் (PUCC – Polution Under Control Certificate) பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் வாகனத்தை பராமரிக்க ஒரு கணிசமான தொகை செலவழிக்க வேண்டியுள்ளது. மேலும், நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணமும் செலுத்தியாக வேண்டும்.
இதை எல்லாவற்றையும் விட சென்னை போன்ற நகரங்களில் வாகனத்தை நிறுத்துவது (Parking) பெரும் சிரமமான, சிக்கலான ஒரு விஷயமாக உள்ளது. பார்க்கிங் விஷயத்தில் பல சிக்கல்களும் சச்சரவுகளும் எழுகின்றன. சொந்தமாகக் காரை ஓட்டத் தெரிந்தால் பரவாயில்லை. இல்லையென்றால் ஆக்டிங் டிரைவருக்கு ஒவ்வொரு முறையும் ஒரு கணிசமான தொகையை சம்பளமாகத் தர வேண்டியுள்ளது. தற்காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் சம்பளமாகும். இப்படியாக ஒரு காரை நாம் வாங்கினால் ஒவ்வொரு மாதமும் ஒரு கணிசமான தொகையை நாம் செலவழிக்க வேண்டியுள்ளது. பல சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தற்காலத்தில் பல தனியார் நிறுவனங்கள் ஆப்பின் மூலம் வாடகைக் காரை இயக்கி வருகின்றன. ஆப்பின் (App) மூலம் புக் செய்தால் நமது தேவைக்கேற்ப கார் நியாயமான தொகையில் வாடகைக்குக் கிடைக்கிறது. இத்தகைய வாடகைக் கார்களை உபயோகிப்பதில் பல நன்மைகள் உள்ளன. உதாரணத்திற்கு, ஷாப்பிங் செல்லும்போது சொந்த காரில் சென்றால் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பார்க்கிங் செய்வதற்குள் படாதபாடு பட வேண்டியிருக்கும்.
வாடகைக் காரில் சென்றால் நாம் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக் கொண்டு தொகையைக் கொடுத்து காரை அனுப்பி விடலாம். மீண்டும் வீட்டிற்குத் திரும்பும்போது வேறொரு காரை புக் செய்து வீட்டிற்குத் திரும்பலாம். இப்படியாக வாடகைக் காரை பயன்படுத்துவதன் மூலம் கணிசமான பணத்தை நாம் மிச்சப்படுத்த முடிகிறது. பல சிக்கல்களையும் தவிர்க்க முடிகிறது.
குடும்பத்தோடு ஷாப்பிங் அல்லது சினிமாவிற்குச் செல்லும்போது நமது காரை நாம் ஓட்டிச் சென்றால் நமது கவனம் முழுவதும் காரை ஓட்டுவதிலேயே இருக்கும். குடும்பத்தினருடன் அளவளாவிக் கொண்டு செல்ல முடியாது. காரை நாமே ஓட்டும்போது ஒருவித பய உணர்வு நம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், வாடகைக் காரில் செல்லும்போது நம் மனைவி பிள்ளைகளுடன் பேசிக்கொண்டு செல்லலாம். வாடகைக் காரை ஓட்டுபவர் அனுபவமிக்கவராக இருப்பதால் பயமின்றியும் பயணிக்கலாம்.
தற்காலத்தில் ஆப்பின் முலம் புக் செய்து ஆட்டோக்களையும் பயன்படுத்த முடிகிறது. காரை விட ஆட்டோ கட்டணம் இன்னும் குறைவாகவே உள்ளது. சிறிய தொலைவு பயணிக்க ஆட்டோ சிறந்தது. மூன்று முதல் நான்கு பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்தினர் பயணிக்கும்போது மிகவும் சிக்கனமாக அமைகிறது.
சமீப காலமாக சில நிறுவனங்கள் நாம் நீண்ட தொலைவிற்கு பயணிக்கும்போது அதற்கு ஒருவழிக் கட்டணம் மட்டுமே வசூலிக்கின்றன. உதாரணமாக, சென்னையிலிருந்து பெங்களுரூவுக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி திரும்ப வேண்டியிருக்கலாம். அத்தகை சமயங்களில் வழக்கமான டாக்சிகளில் பயணித்தால் போக 350 கிலோ மீட்டர் மற்றும் திரும்பி வர 350 கிலோ மீட்டர் என நாம் 700 கிலோ மீட்டருக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ஒருவழிக் கட்டண டாக்சி நிறுவனங்கள் நாம் சென்ற 350 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டுமே கட்டணத்தை வசூலிக்கின்றன. இது மிகவும் பயனுள்ள சிக்கனமான வழியாகும்.
இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்களை வைத்து உங்களுக்கு சொந்த கார் சிறந்ததா அல்லது வாடகைக் கார் சிறந்ததா என்பதை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.