தற்போது ஒற்றைப் பிள்ளை இருக்கும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உடன் விளையாட ஆள் இல்லாமல் ஒற்றை ஆளாக இருப்பதால், டிவியைப் பார்த்துக்கொண்டு, செல்போனில் விளையாடிக்கொண்டு குழந்தைகள் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். மேலும், பிறரிடம் அனுசரித்துப்போகும் தன்மையும் அவர்களுக்கு இருப்பதில்லை.
குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிப்பது அவர்களின் உடல், உணர்ச்சி மற்றும் மனநலனுக்கு ஏராளமான நன்மைகளைத் தரும். வீட்டிற்குள்ளேயே அமர்ந்து கொண்டு செல்போனில் மூழ்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை தினமும் ஒரு மணி நேரமாவது தங்கள் நண்பர்களுடன் விளையாட அனுமதிக்க வேண்டும். இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தசைகள் மற்றும் எலும்புகள் பலப்படுதல்: ஓடியாடி விளையாடும்போது குழந்தைகளுக்கு தசைகள் வலுவாகி, எலும்புகள் உறுதியாகின்றன. வெயிலில் விளையாடும்போது அவர்களுக்கு சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி கிடைக்கிறது. இது அவர்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் அவசியமாகின்றது. உடல் பருமன் அபாயத்தையும் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுதல்: வியர்க்க விறுவிறுக்க விளையாடுவது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அவர்கள் பருவநிலை நோய்களால் அவ்வளவு எளிதில் பாதிக்கப்பட மாட்டார்கள்.
புத்துணர்ச்சி: ஓடுதல், குதித்தல், ஏறுதல் போன்ற உடல் ரீதியான செயல்பாடுகள் அவர்களது உடலின் செல்களுக்கு புத்துணர்ச்சியைத் தருகின்றன. அவை ஒரு உடற்பயிற்சி போல அமைகிறது. அதனால் அவர்களுக்கு எண்டார்ஃபின்கள் தூண்டப்பட்டு மனமகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
உணர்ச்சி நுண்ணறிவு: வெளியில் நண்பர்களுடன் விளையாடும்போது ஏற்படும் சின்னச் சின்ன மோதல்கள் அவர்களுக்கு சிக்கலை தீர்க்கும் திறனையும் பிறருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்கிற புரிதலையும் வளர்க்கிறது. பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்கள் மேல் கருணையும் பச்சாதாபமும் காட்ட உதவுகிறது.
ஒத்துழைப்பும், படைப்பாற்றலும்: வெளியில் விளையாடும்போது அவர்களது கவனம் சுற்றுப்புறத்தில் நிலைத்திருக்கும். பிறரிடம் தொடர்புகொள்ளும் திறனும் வளரும். நிறைய நண்பர்களை உருவாக்க உதவுகிறது. ஒத்துழைப்பு, குழுப் பணி போன்ற சமூகத்திறன்களையும் வளர்க்கிறது. மேலும், இயற்கையான சூழல் கற்பனையை தூண்டுகிறது. அவர்களது படைப்பாற்றல் நன்றாக மேம்படும்.
சுயமரியாதையும் தன்னம்பிக்கையும்: வெளியில் விளையாடும் குழந்தைகள் வளரும்போது சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வித்திடுகிறது. மேலும், அவர்களது சுயமரியாதையை வளர்க்கிறது. தங்கள் திறன்களில் நம்பிக்கை வைப்பதை ஊக்குவிக்கிறது. பெற்றோரின் கட்டுப்பாடு இன்றி அவர்கள் சுதந்திரமாக விளையாடும்போது அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மனநல நன்மைகள்: மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது. வெளியில் தனது வயதை ஒத்த அல்லது பிற குழந்தைகளுடன் விளையாடும்போது அவர்களது மன நிலையில் நல்ல மேம்பாடு ஏற்படுகிறது. மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசோல் என்கிற ஹார்மோனின் அளவு குறைகிறது. இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உடல் உறுப்புகளுக்கு நல்ல வேலை தருவதால் அவை நன்றாக செயல்படுகின்றன. அதனால் இரவில் நன்றாக தூங்குகிறார்கள். சிறந்த தூக்கம் குழந்தைகளில் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
எனவே, குழந்தைகளை வெளியில் விளையாட பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். அதேசமயம் அவர்கள் விளையாடும் சூழல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வாகனங்கள் இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் மாலையில் ஒரு மணி நேரமாவது வெளியில் குழந்தைகளை விளையாட விட வேண்டும். லீவு நாட்களில் அதிக நேரம் அவர்கள் வெளியில் விளையாடலாம். ஓடியாடி விளையாடும் விளையாட்டுகளான கோக்கோ, கபடி, ஓடிப்பிடித்து விளையாடுதல், ஒளிந்து விளையாடுதல், கிரிக்கெட். வாலிபால் போன்றவற்றை விளையாடலாம்.