ஒரு நாடு சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச பட்சினி விலங்குகளை வீட்டிற்குள் வைத்து வளர்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்தால்...?
முன்பு பல நாடுகளில் சர்க்கஸ் மற்றும் கண் காட்சிக்காக தனியார் அமைப்பினர் வன விலங்குகளை வளர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தினால் வன விலங்குகளை தனி நபர் வளர்ப்பது பல நாடுகளில் தடை செய்யப்பட்டது.
தற்போது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளை வீட்டில் வளர்த்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதித்துள்ளது. பாகிஸ்தான் அரசு சிங்கம், புலி, சிறுத்தைகளை செல்லப்பிராணிகளாக பட்டியலிட்டுள்ளது. இந்த விலங்குகளை வீட்டில் வளர்க்க அரசு அனுமதித்துள்ளது. இதற்காக ஒரு சில விதிகளை இந்த விலங்குகளை வளர்ப்பவர்கள் பின்பற்ற வேண்டும்.
இந்தியாவை சுற்றியுள்ள இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர், மாலத்தீவுகள் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளில் அடிக்கடி வன்முறைகளும், அரசுக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த நாடுகளில் பொருளாதாரம் சரிந்துள்ளதால் வறுமை மக்களையும் அரசையும் பிடித்து உலுக்குகிறது. இந்நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று எதையாவது ஒன்றை யோசிக்காமல் செய்து விடுகின்றனர்.
தற்போது பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், பணம் சம்பாதிக்க விசித்திரமான வழிகளை பாகிஸ்தான் அரசாங்கம் செய்து வருகிறது. பாகிஸ்தானில் தொழில் வளர்ச்சி இல்லாததால் சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானம் பெறுகிறது. இப்போது பாகிஸ்தான் மக்களை வன விலங்குகள் வளர்க்க வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை உருவாக்கியுள்ளது.
மனிதர்களை அடித்து சாப்பிடும் விலங்குகளை ஒருவர் வீட்டில் வளர்க்க அரசிற்கு இந்திய மதிப்பில் ₹50,000 செலுத்தினால் போதுமானது. பாகிஸ்தான் அரசு இந்த பணத்தை பெற்றுக் கொண்டதும் விலங்குகளை வளர்ப்பவர்களுக்கு அனுமதி தருகிறது.
அனுமதியை பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் சிங்கம் புலிகளை வீட்டில் வளர்க்கலாம். இதற்காக பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு விதிகளை மாற்றியுள்ளது.
விதிகளின்படி, வன விலங்குகளை வளர்ப்பவர்கள் நகர எல்லையில் இருந்து தூரமாக இருக்க வேண்டும்.
இந்த வன விலங்குகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட கூடாது.
இந்த புதிய சட்டப்படி பாகிஸ்தான் அரசு கணிசமான அளவில் பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளது. அவர்களுக்கு இந்த முறை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், பெரும் பணக்காரர்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக சிங்கம் மற்றும் சிறுத்தைகளை வளர்ப்பதை பார்த்து தோன்றியிருக்கலாம். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் சிங்கம், புலி, சிறுத்தைகளை வளர்ப்பவர்கள் உண்டு. ஆயினும் அவர்கள் முறையான பயிற்சியை பெற்று வளர்க்கின்றனர்.
அந்த நாடுகளில் அவர்கள் சொந்தமாக பல நூறு ஏக்கர் பரப்பில் காடு வளர்த்து அதில் விலங்குகளை பராமரிக்கின்றனர். அரேபியர்கள் பெரிய இடம் இல்லா விட்டாலும் பலத்த பாதுகாப்போடு வளர்க்கின்றனர். பாகிஸ்தானில் அந்த அளவிற்கு வசதிகள் இல்லை.
பாகிஸ்தானியராக இருந்தாலும் அமெரிக்கராக இருந்தாலும் விலங்குகள் தன் இயல்பு நிலைக்கு திரும்பினால் மற்றவர்களை அடித்து கொல்ல வாய்ப்பு உண்டுதானே!