சிலரைப் பார்த்தால் 65, 70 வயதில் கூட 40 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருப்பார்கள். அவர்களின் செயல்களை ஆராய்ந்தால் அவர்கள் அப்படி இருப்பதன் ரகசியத்தைப் புரிந்து கொள்ளலாம். அதற்கு அவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
சிறப்பான எண்ணம்: நேர்மறை எண்ணத்துடன் இருப்பது அவர்களின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. எல்லோரிடமும் அன்பாகப் பழகுவது, தேவையானவர்களுக்கு உதவுவது, தனக்குத் தேவையான உதவியை மற்றவர்களிடம் இருந்து தயங்காமல் பெறுவது, அடிக்கடி சிரித்துப் பேசி மகிழ்வது போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால் எப்பொழுதும் முகத்தில் ஒரு பொலிவு இருக்கும். அந்தப் பொலிவு இளமை தோற்றத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தும்.
சருமப் பாதுகாப்பு: உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சருமத்தை சுத்தப்படுத்துதல், காலத்துக்கு ஏற்ற கிரீம்கள் தடவுதல், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு அளித்தல், உடம்பை எப்பொழுதும் ஈரப்பசையுடன் மினுமினுப்பாக வைத்துக்கொள்ள முயற்சி எடுத்தல், எண்ணெய்க் குளியல் போன்ற ஆரோக்கிய அழகு குறிப்புகளை முறையாகப் பின்பற்றுதல்.
பயிற்சி முறைகள்: உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். அன்றாடம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம், பளு தூக்குவது, ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், அதை தினமும் தவறாமல் குறிப்பிட்ட நேரம் பின்பற்ற வேண்டும். அதற்கேற்ப உடல் நிலையில் மாற்றம் வரும். தசைகளை கட்டமைக்கவும், உடலை வலுவாக வைத்திருக்கவும் இந்தப் பயிற்சிகள் உதவி செய்து வயதான தோற்றத்தை குறைத்து விடும். அவ்வப்பொழுது உடல்நிலை பரிசோதனை செய்து கொண்டால் நோய் நொடி இன்றி வாழலாம் நோயில்லாத உடம்பே இளமையான தோற்றத்திற்கு வித்திடும்.
நீர் பருகுதல்: எல்லா பருவத்திலும் உடல் நிலையை நீரேற்றமாக வைத்திருப்பது இளமையான தோற்றத்தைத் தரும். கோடை, குளிர் என்று பருவ காலத்திற்கு ஏற்ற உடை அணிவது, நீராகாரங்களை எடுத்துக் கொள்வது, சூப், ஜூஸ், சாலட் மற்றும் நீர் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, கஞ்சி வகைகளை சாப்பிடுவது எல்லாவற்றுக்கும் மேலாக உடம்பின் உள்ளுறுப்புக்கள், நுண்ணுறுப்புகளை சுத்தம் செய்யும் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது போன்றவற்றால் உடம்பை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.
ஆழ்ந்த தூக்கம்: போதுமான தூக்கம் மிகவும் அவசியம். ஆழ்ந்த தூக்கம் அதிலும் அவசியம். உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு கொடுப்பதற்கு தூக்கத்தைப் போன்ற மாமருந்து எதுவும் இல்லை. போதுமான நேரம் தூங்குவது உடலை சரி செய்யவும், செல்களை மீள் உருவாக்கம் செய்யவும், வயதான அறிகுறிகளை குறைக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வித்திடும்.