அளவுக்கு மிஞ்சிய பாசம் ஆபத்தா? புயலையும் தாங்கும் செடியின் ரகசியம்!

பிள்ளைகளின் வாழ்க்கையைச் சிதைக்கும் அதீத கவனிப்பும், அதிலிருந்து மீள்வதற்கான எளிய வழிமுறைகளும்.
வாழ்க்கைப் பாடம்
வாழ்க்கைப் பாடம்AI Image
Updated on

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. ஆனால், அது உணவுக்கு மட்டுமல்ல, நாம் காட்டும் அன்புக்கும் கவனிப்புக்கும் கூடப் பொருந்தும். நாம் அன்போடு செய்யும் சில விஷயங்கள், சில நேரங்களில் நமக்கு நெருக்கமானவர் களின் தனித்திறமையையும், போராடும் குணத்தையும் எப்படி அழித்துவிடுகிறது என்பதை விளக்கும் ஒரு சுவாரசியமான வாழ்வியல் கதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

இயற்கை கற்றுத்தரும் ஆகச்சிறந்த வாழ்க்கைப் பாடம்:

ஒரே தெருவில் ஓர் ஆசிரியரும் ஒரு வழக்கறிஞரும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில், அவரவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு செடியை நட்டு வைத்தனர். வழக்கறிஞர் தன் வீட்டுச் செடிக்கு நிறைய தண்ணீரும், தேவையைக் காட்டிலும் அதிகமான கவனிப்பும் கொடுத்து வளர்த்தார். ஆனால் ஆசிரியரோ, தன் செடிக்குத் தேவையான அளவு மட்டுமே தண்ணீர் தந்து, அளவோடு கவனித்துக் கொண்டார்.

இப்படி இருக்கையில், ஒரு நாள் பயங்கரமான புயல் ஒன்று வீசியது. அந்தப் புயலில், வழக்கறிஞர் பார்த்துப் பார்த்து ஆசையாக வளர்த்த செடி வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்தது. ஆனால், ஆசிரியரின் செடியோ புயலையும் தாங்கி கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வழக்கறிஞர் ஆச்சரியமடைந்து, "அது எப்படி உங்கள் செடி மட்டும் புயலைத் தாங்கி நிற்கிறது?" என்று கேட்டார்.

அதற்கு ஆசிரியர், "நான் என் செடிக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே தண்ணீர் ஊற்றினேன். அதனால், அது தண்ணீரைத் தேடித் தன் வேர்களை மண்ணின் ஆழத்திற்குச் செலுத்தியது. அப்படிச் செய்யும்போது அதன் வேர்கள் மண்ணை ஆழமாகப் பற்றிக் கொண்டன. ஆனால் நீங்களோ, உங்கள் செடிக்கு அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றி, அதன் தேவையை நீங்களே எளிதாகப் பூர்த்தி செய்துவிட்டீர்கள். எனவே, அதன் வேர்களை மண்ணுக்குள் ஆழமாகச் செலுத்த வேண்டிய தேவை அதற்கு இல்லாமலேயே போனது. அதனால்தான் புயல் வந்தபோது அதனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை," என்றார்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்றும் வாழ்க்கைப் பாடம்:

நாம் எப்போதும் சொகுசு வளையத்திற்குள்ளேயே (Comfort Zone) இருந்தால், வாழ்க்கையில் வரும் எதிர்ப்புகளைப் போராடி வெல்லும் குணம் நமக்குள்ளேயே அழிந்துவிடும்.

வாழ்க்கைப் பாடம்
வாழ்க்கைப் பாடம்AI Image

இந்தச் செடியின் கதை மனிதர்களாகிய நமக்கும் மிகச்சரியாகப் பொருந்தும். வாழ்க்கையில் எல்லாமே எளிதாகக் கிடைத்துவிட்டால், சவால்களை எதிர் கொள்ளும் மனவலிமை நமக்குக் கிடைக்காமல் போய்விடும். குறிப்பாக, இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாகக் கொண்டாடி, அவர்கள் கஷ்டப்படவே கூடாது என்று நினைத்து வளர்க்கிறார்கள். ஆனால், அது அவர்களை பலவீனமாக்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் ஜெயிக்கணுமா? இதெல்லாம் உங்களிடம் இருக்கான்னு செக் பண்ணுங்க!
வாழ்க்கைப் பாடம்

எனவே, செடிக்கு அளவோடு தண்ணீர் ஊற்றி வேர்களை ஆழமாக்குவது போல, நம் வாழ்க்கையிலும், நம் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு பெரிய புயல் (துன்பம்) வந்தாலும், நாம் வேரோடு சாய்ந்துவிடாமல் நிமிர்ந்து நிற்க முடியும். சவால்களே நம்மைச் செதுக்கும் உளிகள்!

logo
Kalki Online
kalkionline.com