

பொதுவாகவே நாம் நமது வாழ்க்கைப்பாதையில் சில விஷயங்களில் தவறு செய்வதும் உண்டு. அவை சின்னச் சின்ன விஷயங்களாகத்தான் இருக்கும், நாமும் அவற்றைக் கடந்து போவதுண்டு. ஆனால், சில விஷயங்களில் நாம் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்; சில விஷயங்களைப் பெரிதுபடுத்தாமல் கடந்து செல்ல வேண்டும்.
எந்த ஒரு எதிர்மறை விஷயத்தையும் தீர ஆராயாமல், 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று அணுக முடியாது. அதேநேரம், சில விஷயங்கள் தேவையற்றவையாக இருந்தால், அதற்கு அதிக முக்கியத்துவமும் தர வேண்டியதில்லை. நாம் அன்றாட வாழ்வில் கவனிக்க வேண்டிய அந்தச் சிறிய நற்பண்புகள் (Basic Courtesy) என்னவென்று கொஞ்சம் பார்க்கலாமே!
முழுமையாகக் கேளுங்கள்: மற்றவர்கள் பேசும்போது அவர்கள் பேசுவதை முழுமையாகக் கேளுங்கள். இடையில் மறித்து, குறுக்கே உங்கள் கருத்துகளைச் சொல்லாதீர்கள்; அது நாகரீகமான செயலல்ல. அவர்கள் சொன்ன கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், நிதானமாக உங்கள் பதிலைச் சொல்லலாம்.
காயப்படுத்தாதீகள்: நமக்குத் தேவையில்லாத, அடுத்தவர் மனதைச் சங்கடப்படுத்தும் வகையில் நமது கருத்துக்கள் அமையக் கூடாது. அதில் எப்போதும் கவனம் தேவை.
ஒருவர் உங்களுக்கு போன் செய்கிறார்; ஆனால், அந்த நேரத்தில் உங்களால் அந்த அழைப்பை ஏற்க முடியாத சூழல். அப்படிப்பட்ட நிலையில், உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அவர்களைத் திரும்ப அழைத்து (Call back), "எதற்காக போன் செய்தீர்கள்?" எனக் கேட்பதில் தவறேதும் கிடையாதே! அது அவர்களுக்கு நாம் தரும் மரியாதை.
சுத்தம் சோறு போடும்: பழமொழிக்கு ஏற்ப, நமது வீட்டையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருங்கள். அது மிகவும் உன்னதமான பண்பாகும்.
மெதுவாகப் பேசுங்கள்: பொதுவாக வெளியிடங்களிலோ அல்லது உறவினர் வீடுகளுக்கோ செல்லும்போது மெதுவாகப் பேசப் பழகிக்கொள்ளுங்கள். சத்தம் போட்டுப் பேசுவதைத் தவிர்க்கலாமே!
பொருட்களைத் திருப்புதல்: யாரிடமாவது ஏதாவது ஒரு பொருளை இரவலாக வாங்கினால், அதை ஒரு சில நாட்களிலேயே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் கேட்டு, அதற்குப் பிறகு கொடுக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
வாகனமும் எரிபொருளும்: நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கிச் சென்றால், அதைத் திருப்பிக் கொடுக்கும்போது ஓரளவு எரிபொருள் (Petrol) போட்டுக் கொடுப்பது நல்லது. வாகனம் தண்ணீரில் இயங்கவில்லையே, நினைவிருக்கட்டும்!
நன்றி கூற மறவாதீர்: எந்த உதவி யாரிடமிருந்து கிடைத்தாலும், அவர்களுக்கு "நன்றி" கூற மறக்க வேண்டாம். அதை மறப்பது நல்ல பண்பாடல்ல.
பளிச்சென்று பதில் சொல்லுங்கள்: ஒருவர் உங்களிடம் ஒரு உதவி கேட்டால், அந்தத் தருணத்திலேயே "முடியும்" அல்லது "முடியாது" எனப் பளிச்சென்று சொல்லிவிடுங்கள். "பார்க்கிறேன்", "கேட்கிறேன்", "இரண்டு மூன்று நாட்கள் போகட்டும்" எனச் சொல்லி அவர்களை அலையவிடாதீர்கள். அது நாகரீகமான செயல் அல்ல.
பூஜைப் பொருட்கள்: சிலர் வீட்டு வாசலில் துளசி மாடம் வைத்து, துளசிச் செடி வளர்த்துப் பூஜை செய்வார்கள். அவர்களின் அனுமதி இல்லாமல் துளசியை அதிலிருந்து பறிக்காதீர்கள். உரிமையாளரிடம் கேட்டு, அவரையே பறித்துத் தரச் சொல்லுங்கள்; ஏனெனில், அது பூஜைக்குரியது.
வெளித்தோற்றம் பார்த்து எடை போடாதீர்: ஒருவரது நடை, உடை, பாவனை போன்ற வெளித்தோற்றங்களை வைத்து அவர்களை ஏளனமாகப் பார்க்கவோ, உதாசீனம் செய்யவோ வேண்டாம். அவருக்குத் தெரிந்த பல நற்பண்புகளும் விஷயங்களும் நமக்குத் தெரியாமல் கூடப் போகலாம் அல்லவா!
ஆக, நாம் நமது வாழ்க்கைப் பாதையில் இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களைக் கவனமாகக் கையாள்வதே, நம்மை ஒரு பண்பட்ட மனிதராக சமூகத்தில் அடையாளப்படுத்தும்!