
தற்போது கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனி குடித்தனங்கள் பெருகி விட்ட நிலையில், குழந்தை பிறப்பும் குறைந்து போய் வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற அளவில் மாறி வருகிறது. இன்றைய அவசர நெருக்கடியில் ஒரே குழந்தை போதும் என்ற மனப்பான்மையுடன் அந்த குழந்தைக்கு தேவைக்கு மேல் செல்லம் தந்து வளர்க்கும் பெற்றோர்களே அதிகம். காரணம் ஐடி துறையும் அதிக வருமானமும் எனலாம். ஆனால், இது எத்தகைய பின்விளைவுகளைத் தருகிறது என்று தெரியுமா?
அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தனக்குள் தனிமை உலகத்தை நிர்மாணித்து அதன் உரிமையாளராக தன்னை மட்டுமே நினைத்து யாரையும் அந்த உலகத்தில் அனுமதிப்பதில்லை என்பதுடன் தனியே வளரும் குழந்தைகள் எவருக்கும் முக்கியத்துவம் தராமல் காலப்போக்கில் பெற்றோரையும் அலட்சியப்படுத்தும் நிலை ஏற்படுகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
அன்று 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும், பெற்றோர் அன்புடன் அரவணைத்தும் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும் வளர்த்தனர். பள்ளிகளிலும் ஆசிரியர்கள் நல்ல செயலுக்கு பாராட்டுதலுடன் தவறுகளுக்கு சிறு சிறு தண்டனை தந்து புரிய வைத்தனர். ஆனால், இன்று தண்டனை என்பது சிறார் வன்கொடுமை கீழ் வந்து ஆசிரியர்களும் கண்டு கொள்ளாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு நாளின் அதிக நேரம் உடன் இருக்கும் பெற்றோருக்கே தங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் பொறுப்பு அதிகம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அப்படி என்றால் பிள்ளைகளுக்கு செல்லமே தரவேண்டாமா? முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அன்பு செலுத்துவதும் செல்லம் தருவதும் ஒன்றல்ல.
அரவணைத்தல், கற்றுத் தருதல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய பழக்கப்படுத்துதல், அவர்களின் சிறு உணர்வுகளையும் மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலின் அடையாளம். இவைகள் கட்டாயம் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்குத் தரவேண்டும்.
ஆனால், ஒரு வயதுக்குப் பின் பிள்ளையால் செய்ய முடிகிற வேலைகளையும் தாங்களே செய்து தருவது, கேட்டவுடன் விலை, பயன் எதையும் கவனிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு வாங்கித் தருவது, சாதாரண விஷயத்துக்கும் அவர்கள் எதிரிலேயே அதிகம் புகழ்வது, அடம் பிடிப்பதை ஆதரிப்பது, துன்ரிகத்தனத்தை துறுதுறு என தவறாக புரிந்து ரசிப்பது போன்ற அதீத செல்லத்தில் அடங்குபவைகளை நிச்சயம் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
குழந்தை தானாக நடக்கும் போது தூக்கிக் கொள்வதையும், சாப்பிடத் துவங்கும் போது ஊட்டி விடுவதையும், தனது வேலைகளைத் தானே செய்யும் போது தடுத்து தாங்களே செய்வதையும், எதையும் கேட்டு அடுத்த நிமிடமே வாங்கித் தருவதையும் பெற்றோர் அவசியம் தவிர்க்க வேண்டும்.
பிடிவாதம் பிடித்து முரண்டு பிடிப்பது குழந்தைகளின் இயல்பு. கண்டு கொள்ளாமல், கண்டிப்புடன் 'நோ' சொன்னால் சில நிமிடங்களில் குழந்தை மாறி விடும். அதுவே அவர்கள் குணம் என்கின்றனர் குழந்தை வளர்ப்பு நிபுணர்கள்.
ஆணோ, பெண்ணோ சமையல் முதல் வீட்டு வேலைகள் அனைத்தும் யாரையும் சாராமல் கற்றுத் தேர்வது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; அவர்களது வாழ்க்கையின் அவசியம். இதற்கு உதவுவது பெற்றோர் கடமை. பெற்றோர் சொல்லும் 'நோ' க்களும் கூட ஒரு குழந்தையின் எதிர்காலத்தை சிறக்க வைக்கும்.