
பண்டைய காலங்களில் வீடு வீடுகளுக்கு மூதாட்டி இருந்தார்கள் இதனால் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் எளிதாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட வயது வரை அவர்களே பார்த்து கொள்வார்கள். அதே போல் கூட்டு குடும்பம் அதிகமாக இருந்ததால் பல நபர்கள் ஒன்றாக சேர்ந்து பல குழந்தைகளை வளர்ப்பார்கள். ஆனால் தற்போது தனி குடும்பம் என்பதால், பலரும் ஒரு குழந்தை, இரு குழந்தையோடு நிறுத்திவிடுகிறார்கள். அதே போல் அந்த குழந்தையையும் தனியாக வளர்த்து ஆளாக்குவதற்குள் போதும் போதும் என்றே ஆகிவிடுகிறது.
அப்படி குழந்தைகள் இயற்கையாக செய்யும் ஒரு விஷயம் பற்றியும், அது ஏன் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாகவே குழந்தைகள் என்றாலே எதை எடுத்தாலும் வாயில் எடுத்து போடுவது தான். அப்படி தான் பல குழந்தைகள் மண்ணை ஆர்வமாக எடுத்து சாப்பிடுவார்கள். இன்று அபார்ட்மண்ட் உலகம் இயங்கி வருவதால், மண் இருக்கும் இடங்களுக்கு சென்றால் கூட குழந்தைகள் இவ்வாறு செய்வதை பார்க்கலாம். ஆனால் தற்போதைய பெற்றோர்களுக்கு, குழந்தைகள் மண்ணை உண்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தும்.
இப்படி கையில் கிடைக்கும் தூசு, மண் போன்ற பொருட்களை உண்பது பைகா (Pica) என அழைக்கப்படுகிறது. குழந்தைக்கு போதுமான இரும்புச்சத்து கிடைக்காவிட்டால் அதை பதிலீடு செய்ய மண் போன்ற பொருட்களை சாப்பிடத் தூண்டப்படுவார்கள். இரும்புச்சத்து மட்டுமல்ல, துத்தநாகம் (Zinc), கால்சியம் (Calcium) ஆகிய அத்தியாவசிய தாதுக் குறைபாடும் மண் சாப்பிடும் பழக்கத்தைத் தூண்டக் கூடும். இந்தக் குறைப்பாட்டை தவிர்த்தால் குழந்தைகள் மண் சாப்பிடுவதை விட்டுவிடுவார்கள்.
சில குழந்தைகளுக்கு மன அழுத்தம், விரக்தி, கவலை, சலிப்பும் இருக்கலாம். அதை தவிர்க்க மண் சாப்பிடுவார்கள். இது ஒருவிதமான ஆறுதலை வழங்கும். பெற்றோருடைய கவனத்தை ஈர்க்கவும் இப்படி செய்வார்கள். இதுதான் காரணம் என கண்டறிந்தால் அதை எளிதில் தீர்க்க முடியும். இதற்கு பெற்றோர் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் மண் சாப்பிடுவதை பெற்றோர் கவனித்தால் முதலில் மருத்துவரிடம் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு ரத்த பரிசோதனை மூலம் அவர்களுக்கு இரும்புச் சத்து, அல்லது துத்தநாக சத்துக் குறைபாடு இருப்பது கண்டறியப்படும். இதன் மூலம் விரைவில் அந்த பழக்கத்தை நிறுத்த முடியும்.