சமீப காலமாகவே பிரபலங்கள் பலரின் குடும்பங்களிலும் விவாகரத்துகள் அதிகரித்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தோடு, அதிர்ச்சியையும் தருகிறது. அக்காலத்தில் தம்பதிகளிடையே ஏதேனும் பிரச்னை என்றால் உடனே ஓடோடி வந்து தீர்த்து வைக்க சுற்றிலும் உறவுக்காரர்கள் இருந்தனர். அதேபோல், சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் விட்டுத் தந்து போவது என்பது அன்றைய வளர்ப்பின் முக்கிய அம்சமாக இருந்தது. ஆனால், இன்றைய நிலைமை அப்படி இல்லை.
ஆண்களும் பெண்களும் சுயமாக தனித்து வாழும் திறமையையும் வசதிகளையும் பெருக்கிக் கொடுத்துள்ளது இன்றைய அறிவியல் நாகரிக உலகம். அத்துடன் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட சக மனிதர்களுடனான சமரசங்களுடன் இணைந்து போவதற்கான முக்கிய குணமான சகிப்புத்தன்மை அறவே ஒழிந்து வருவதுதான் இன்றைய விவாகரத்துக்கள் பெருகி வருவதற்கு ஒரு காரணம் என்கின்றனர் பெரியவர்கள்.
மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட திரைப்படங்கள் மூலம் நம் மனதில் இடம் பிடித்திருக்கும் மனிதர்களின் வாழ்க்கை முறையை எப்போதும் அனைவரும் உற்று நோக்கியபடி இருப்பதையே விரும்புகிறோம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ தொலைக்காட்சி முதல் அலைபேசி வரை நம் எண்ணத்தில் பதியும் வண்ணம் நிச்சயம் திரைப்படங்களின் தாக்கம் இருக்கிறது. அதிலும் தற்போது சோஷியல் மீடியாக்கள் ஒரு விஷயத்தை அலசி ஆராய்ந்து இது இப்படித்தான் என்று முடிவும் கட்டி விடுவதில் முன்னணியில் உள்ளது. பிரபலங்களுக்கே தெரியாத அவர்களைப் பற்றிய விஷயங்கள் இங்கு அலசி ஆராயப்படுகிறது. இதைப் படிக்கும் சாதாரணமானவர்கள் அதை உண்மை என்று நம்பி அதனால் ஈர்க்கப்படுகிறார்கள்.
மேலும், பெண்ணீயம் அல்லது ஆணின் சுதந்திரம் என்ற ரீதியில் கொட்டப்படும் கருத்துக்கள் பலவற்றிலும் தனித்து இயங்குதல் எனும் முற்போக்கான ஒரு சிந்தனையை தற்போது விதைத்து வருகின்றனர். இது பிற்காலத்தில் நமது சந்ததிகளிடையே தேவையற்ற கலாசார சீரழிவையும், எவருடனும் ஒத்துப்போக முடியாத தன்மையையும் உண்டுபண்ணும் என்பதை எவரும் அறிய மறுக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருந்தாலும் இணை பிரியாத தம்பதிகளாக வலம் வருபவர்கள் திடீரென அந்தப் பிணைப்பில் இருந்து விலகி மணமுறிவுக்கு ஆயத்தமாகும்போது அவர்களின் மனம் திருமணத்தின்போது எந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்ததோ அதே அளவுக்கு இப்போது வலியும் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
துணையின் செயல் பிடிக்கவில்லை அல்லது துணையை பிடிக்கவில்லை எனும் விரக்தியான மனநிலையில் இருந்து பிரிபவர்களுக்கும் அன்யோன்யமாக வாழ்ந்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிர்பந்தத்தின் காரணமாக அல்லது வெளியில் சொல்ல முடியாத ஏதோ ஒன்றின் காரணமாக பிரிய நேரும்போது அதன் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும் என்பதுதான் உண்மை.
இதில் ஒருபுறம் நியாயம் இருந்தாலும் அந்தத் தம்பதியினரின் குழந்தைகளின் நிலைதான் பெரும்பாலோர் கவலைக்கு உள்ளானதாக ஆகி உள்ளது. காரணம் கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக இயங்கினாலும் பிள்ளைகள் என்பது அந்த இருவரின் முழு பொறுப்பாக ஆகிறார்கள். அவர்களின் சந்தோஷமும் வலியும் அந்தக் குழந்தைகளுக்கும் கடத்தப்படுகிறது என்பதுதான் நிதர்சனம்.
வாழ்நாள் முழுவதும் தங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் மகிழ வேண்டிய பிள்ளைகள், திடீரென்று மனங்கள் முறிந்த நிலையில் அன்புக்காக ஏங்குவது பெற்றோர்கள் அவர்களுக்கு தங்கள் விவாகரத்து மூலம் தரும் தண்டனை என்றே பலரும் கருதுகின்றனர். ஆகவே, சகிப்புத்தன்மை என்னும் பேராயுதத்தை கையில் எடுத்து சரியான காரணங்கள் ஏதுமின்றி விவாகரத்துக்கள் மூலம் தம்பதிகள் பிரிவது இனிவரும் காலங்களிலாவது குறைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.