ஸ்கிசோஃப்ரினியா என்பது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் தீவிரமான மன நோயாகும். இதற்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படுகிறது. பல்வேறு மரபணு காரணிகள் மற்றும் குடும்ப வரலாறு இந்நோயை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்: ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு நரம்பியல் கோளாறாகும். இது பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஸ்கிசோஃப்ரினியா என்னும் மனச்சிதைவு இன்றுள்ள அவசர உலகத்தில் வேகமாக மாறிவரும் நமது கலாசாரம், உணவு, மனோநிலை மற்றும் அணுகுமுறைகள் காரணமாக பல நோய்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அதில் இந்த மனச்சிதைவு நோயும் ஒன்று. மன நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் இந்த மனச்சிதைவு நோய்.
இந்த நோய் கண்டறியப்பட்ட ஒருவர் மருட்சி, ஒலி கேட்பது போன்ற மன பிரமைகள், அசாதாரண பேச்சு மற்றும் ஒழுங்கற்ற சிந்தனை ஆகியவற்றை வெளிப்படுத்தலாம். இல்லாத ஒலிகளைக் கேட்பதும், இல்லாத பொருட்களைப் பார்க்கவும் உணரவும் செய்கிறார்கள். மாயத் தோற்றம் மற்றும் பிரமைகள், தூக்கம் வராமலும், எதிலும் கவனம் செலுத்த முடியாமலும் அவதிப்படுதல், காரணமில்லாமல் சந்தேகப்படுதல், பயப்படுதல் அல்லது கோபப்படுதல், குழப்பமான பேச்சு, சிந்தனைகளில் தெளிவின்மை போன்ற அறிகுறிகள் தென்படும்.
காரணங்கள்: இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் அறியப்படவில்லை. இருப்பினும், இவை சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்படுவது என்பது போன்ற பல்வேறு காரணங்களினால் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. பல்வேறு மரபணு காரணிகள் மற்றும் குடும்ப வரலாறு போன்றவை ஸ்கிசோஃப்ரினியாவை ஏற்படுத்துகிறது. இது பொதுவாக மரபு வழியாக வரக்கூடிய ஒரு நோயாக இருந்தாலும் சுற்றுச்சூழல்களின் அழுத்தத்தின் காரணமாகவும் இந்நோய் உண்டாகலாம் என்று நம்பப்படுகிறது. குளுட்டமேட் மற்றும் டோபமைன் எனப்படும் நரம்பியக் கடத்திகள் போன்ற இயற்கையாக நிகழும் சில மூளை ரசாயனங்கள் தொடர்பான பிரச்னைகள் இந்நோய்க்குக் காரணமாகிறது என்று கூறப்படுகிறது. இல்லாத காட்சிகளைக் காண்பதும், குரல்களைக் கேட்பதும் முதற்கட்ட அறிகுறியாகும். ஒழுங்கற்ற சிந்தனை, அசாதாரண நடத்தைகள், தூக்கமின்மையும் நாள்பட உண்டாகும்.
சிகிச்சை: ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படுகிறது. உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நோயாளிகள் நிலைமையை நிர்வகிக்க உதவலாம். சரியான நேரத்தில் தரப்படும் மருத்துவ கவனிப்பு இவர்களை இந்த மன நோயின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும், அன்பும் அவர்களுடைய மன உறுதியை அதிகரிக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும் உதவும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மனச்சோர்வு, தற்கொலை முயற்சிகள், மனக்கவலை கோளாறுகள் போன்றவை உண்டாகும்.
தடுப்பு முறை நடவடிக்கைகள்: இது ஒரு நாள்பட்ட மனநோய். இதை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும் சிகிச்சை மற்றும் மருந்துகளின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். இந்நோயை தடுப்பதற்கு வழியில்லை. இருப்பினும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டால் கட்டுப்படுத்த முடியும்.