பொதுவாக, குழந்தைகள் என்றாலே செல்லம் அதிகமாகக் கொடுத்து வளர்ப்பது இயல்பு. எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும், என்ன பயிற்சிக்கெல்லாம் அனுப்ப வேண்டும், திருமணத்திற்கு தங்கம், வங்கியில் சேமிப்பு, உயர்கல்விக்கு ஒரு தொகை என அனைத்தும் சிந்திப்போம். இப்படிக் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் கடமைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அடம்பிடித்தால் அடிபணியக் கூடாது: குழந்தைகளுடன் ஷாப்பிங் செல்லும்போது, இருப்பதில் விலை உயர்ந்த பொம்மையை வாங்கித் தருமாறு அடம் பிடித்தால், போனால் போகட்டும் என்றோ, அழுவதாலோ பாவம் என்று வாங்கி கொடுத்து விட்டால், அந்த வழியையே அனைத்திற்கும் பின்பற்றுவார்கள். அதற்கு பதிலாக, அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். கேட்கவில்லை எனில், 'நீ இங்கேயே இரு. நாங்கள் போகிறோம்' என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டால், அவர்களாகவே ஓடிவந்து விடுவார்கள். அதன் பிறகு இதுபோல நடந்துகொள்ள மாட்டார்கள்.
பகிர்ந்து விளையாட பழக்க வேண்டும்: ஒரு பெட்டி நிறைய பொம்மைகள் இருந்தாலும், அவர்களது பொம்மையை தனஞ் தங்கை, தம்பிகளுக்குக் கூட தர மாட்டார்கள். பிறரின் பொம்மைகளை எப்போதும் பிடுங்கி விளையாடுவர். எத்தனை பொம்மைகள் இருந்தாலும் பத்தாது என்ற போக்கு காணப்படும். இந்தப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே மாற்றிவிடவேண்டும். பொம்மைகளை, தின்பண்டங்களை பகிர்ந்து விளையாட ஊக்குவிக்க வேண்டும். தவிர, விளையாட்டு பொம்மைகள், நோட்டு, பென்சில் போன்றவை தொலைத்து விட்டாலோ, உடைத்துவிட்டாலோ அழுகிறார்கள் என்று உடனடியாக புதியது வாங்கி தரக்கூடாது. பணத்தின் மதிப்பையும், பொருளின் அருமையையும் சொல்லித்தர வேண்டும்.
ஒப்பந்தம் போட அனுமதிக்க கூடாது: சில குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கவும், விரும்பிய பொருட்களை வாங்கவும், வெளியில் விளையாட செல்லவும் சில சூழ்ச்சிகள், பொய்களைச் சொல்வர். பொதுவாக, சூழ்ச்சி குணம் இருக்கும் குழந்தைகள், 'அதை கொடுக்கவில்லை என்றால் இதை பண்ண மாட்டேன்', 'இது வாங்கிக்கொடுத்தாதான் அங்கே போவேன்' என்று அதிகாரமாகப் பேசுவார்கள். இதுபோன்ற குழந்தைகளை அடிப்பதால், எந்தப் பலனும் இருக்காது. அவர்களின் போக்கில் சென்று சிரித்துக்கொண்டே தவறு என்பதைப் புரியவைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இதைக் கொடுத்தால் அதை செய்வேன் என்ற அதிகார ஒப்பந்தத்திற்குள், பெற்றோர் வளைந்து கொடுக்கக் கூடாது.
பெற்றோருக்கு உதவி: விளையாடி முடித்தவுடன் பொருட்களை அப்படியே போட்டுச் செல்வது, செருப்புகளை கண்ட இடத்தில் கழட்டி விடுவது, சாக்லேட் கவர்களை வீசுவது போன்ற செயல்களை சிறு வயது முதலே பயிற்சி அளித்து, பொறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேசமயம். வீட்டில் சுத்தம் செய்யும் வேலை நடக்கும்போது, வயதுக்கு ஏற்ப சின்னச் சின்ன வேலைகளைக் கொடுப்பது நாமும் வீட்டில் ஒருவர், முக்கியமானவர், மதிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் குழந்தைகளுக்குத் தோன்றும். வேலையையும் கற்றுக் கொள்வார்கள்.