
உடல் பருமனாக இருப்பது பொதுவாக ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என வயது வித்தியாசமின்றி உடல்பருமன் விஷயத்தில் அக்கறை கொள்வது ஆரோக்கியத்தின் முதல் படியாகும். சிறுவயது குழந்தைகளுக்கு உடல்பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு. அவ்வகையில் குழந்தைகளின் உடல் பருமனை நினைத்து கவலை கொள்ளும் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
1. உணவுப்பழக்கம்:
காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களின் ஆரோக்கியப் பயன்பாடுகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். திண்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. அதோடு சரியான எடை குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.
2. உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு:
தினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்களை குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதோடு உடல் செயல்பாடுகளை அதிகரிக்கும் விளையாட்டுகளை குழந்தைகள் விளையாட ஊக்குவிக்க வேண்டும். இன்றைய தலைமுறை குழந்தைகள் மொபைல் கேம்களில் ஆர்வம் காட்டுகின்றனர். இது தவறான பாதை என்பதை பெற்றோர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டியதும் அவசியம்.
3. பெற்றோர்களின் ஈடுபாடு:
குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை அறிவுறுத்தும் முன், பெற்றோர்களும் அதில் ஈடுபட வேண்டும். அப்போது தான் குழந்தைகள் நீங்கள் சொல்வதை முழுமையாக கேட்பார்கள். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகள் அனைத்தும் பெற்றோர்களாகிய உங்களைப் பார்த்து தான் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் என்பதை மறக்க வேண்டாம்.
4. நேர்மறையான உடல் எடை:
உடல் எடை மற்றும் உருவம் தொடர்பான எதிர்மறையான கருத்துக்களை குழந்தைகளிடம் சொல்ல வேண்டாம். 'உடல் எடையை விடவும் ஆரோக்கியம் தான் முக்கியம்' என்பது போன்ற நேர்மறையான கருத்துகளைக் கூறி குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
5. படிப்படியான முன்னேற்றம்:
ஆரோக்கியமான உணவுமுறையை எடுத்தவுடனேயே குழந்தைகளுக்குத் திணிக்கக் கூடாது. படிப்படியாக ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். இச்சமயங்களில் குழந்தைகள் நன்றாக சாப்பிடும் போது, அவர்களை பாராட்டுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
6. ஆதரவான சூழல்:
சமையலறையில் பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் போன்ற ஆரோக்கிய உணவுகளை எப்போதும் வைத்திருங்கள். இதனைப் பார்க்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுகளின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.
7. ஆரோக்கியமான நடைமுறை:
தினந்தோறும் உணவு சாப்பிடும் நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகள் உணவு வேண்டாம் எனச் சொல்லும் பழக்கத்தை குறைத்திட முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக காலை உணவைக் குழந்தைகள் தவிர்க்கவே கூடாது. குழந்தைகள் தினந்தோறும் எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். ஏனெனில் தூக்கமின்மை கூட உடல் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்து விடும். குறைந்தபட்சம் குழந்தைகளுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
8. மாற்றத்தைக் கண்காணியுங்கள்:
குழந்தைகளுக்கு ஆரோக்கியம் மற்றும் உடல் எடை குறித்த விழிப்புணர்வுகளை வழங்கிய பிறகு, சிறிது நாட்களுக்குப் பின் அவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்காணிக்க வேண்டும். நல்ல மாற்றங்கள் ஏற்பட்டால் ஊக்குவிக்க வேண்டும்; ஒருவேளை மாற்றங்கள் ஏதும் இல்லையெனில் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தாமல் பொறுமையாக கையாள வேண்டும்.