பெற்றோர்களே... இது உங்களுக்காக!

Parents...this one's for you
Parents...this one's for you
Published on

ரு குழந்தைக்கு தனது இளமைப் பருவத்தில், ‘டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும்’ என்ற லட்சியம் இருக்கும். குழந்தைப் பருவத்தில் அதனைப் பற்றி பெரிதாக என்ன தெரிந்துவிடப் போகிறது? பெற்றோர்கள் அதனிடம், ‘இப்படியாக வேண்டும், அப்படியாக வேண்டும்’ என்ற தங்களின் ஆசைகளை குழந்தைகளிடம் சொல்லி, அந்த சிறு வயதிலேயே அதற்கான எண்ணங்களை குழந்தைகள் மனதில் விதைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், உண்மை யாதெனில் அந்தக் குழந்தை வளர வளரத்தான் தனக்கு எந்தத் துறை மீது ஆர்வம் என்று கண்டறிந்து, பிறகு அதனை தனது லட்சியமாக எடுத்துக்கொள்ளும்.

இன்னும் சொல்லப்போனால், அந்தக் குழந்தை யாரிடம் பேச வேண்டும், யாரிடம் பேசக்கூடாது போன்ற முடிவுகளையும் பெற்றோர்களே எடுப்பார்கள். உதாரணத்திற்கு, உங்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் ஒரு சண்டை. அதனைப் பற்றி அறிந்தோ அறியாமலோ உங்கள் குழந்தை பக்கத்து வீட்டிற்கு சென்று அந்த வீட்டுக் குழந்தையுடன் விளையாட முற்படுகிறது. எத்தனை பெற்றோர் அதற்காக அந்தக் குழந்தையை திட்டிருக்கிறீர்கள்? எத்தனை பெற்றோர் இனி அங்கு செல்லக்கூடாது என்று கண்டித்து வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள்.

இதுதான் தவறு. பெரியவர்கள் சண்டை போட்டால் அந்தக் குழந்தைக்கு என்ன? ‘நாம் இருவரும் நண்பர்கள்தானே’ என்ற எண்ணம்தான் முதலில் தோன்றும். சிறு குழந்தைக்கு சின்ன பிரிவைக்கூட தாங்கிக்கொள்ள முடியாது என்பது உண்மை. அந்த நேரத்தில், அந்த நட்பினை பாழாக்கி, பிரிவை ஏற்படுத்திக்கொடுப்பது பெற்றோரே ஆயினும் தவறுதான். இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது வெறுப்புதான் உண்டாக ஆரம்பிக்கும்.

சில பெற்றோர்கள், செய்திகளைப் படித்தோ அல்லது அக்கம் பக்கத்தில் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னை வருகிறது என்று கேள்விப்பட்டாலோ போதும், தங்கள் பெண் குழந்தையை வீட்டை விட்டு அனுப்புவதே இல்லை. வெளியூரில் கிடைக்கும் வேலைகளுக்குச் செல்லவும் அனுமதிப்பது இல்லை. இன்னும் சொல்லப்போனால், பயத்தில் அவர்களுக்கு சீக்கிரம் கல்யாணமே செய்து வைத்துவிடுவார்கள்.

பெற்றோர்களே! நீங்கள் ஏன் வேறு விதத்தில் இதனை கையாள்வதில்லை? என்னதான் பொத்தி பொத்தி வைத்து வளர்த்தாலும் பெண்கள், வாழ்நாளில் ஒருமுறையாவது பிரச்னையை எதிர்கொண்டாக வேண்டும்தானே? அப்படி பிரச்னைகளை சந்திக்கும்போது, அதனை எப்படி சமாளிப்பது? அதிலிருந்து எப்படி வெளியே வருவது போன்றவற்றை கற்றுத் தரலாம் அல்லவா? அதை விடுத்து வெளியே போவதற்கு தடா போட்டு விடுகிறீர்களே?

இதையும் படியுங்கள்:
உங்கள் நண்பரோ பார்ட்னரோ அவர்களை எப்படிப் புரிந்துகொள்வது?
Parents...this one's for you

இன்னும் சில பெற்றோர்கள் இந்தத் துறைத்தான் எடுக்க வேண்டும் என்று பிள்ளைகளுக்கு பிடிக்காத துறையை தேர்ந்தெடுக்கச் சொல்வார்கள். வேறு வழியில்லாமல் என்னதான் பிரபல துறையாயினும் அதை ஆர்வமில்லாமல் படித்துத் தேர்ச்சி பெறாமல் வாழ்வில் தோல்விகளை சந்திப்பார்கள் குழந்தைகள்! ஆனால், அவர்களுக்குப் பிடித்த துறை எளிமையானது என்றாலும், நன்றாகப் படித்து அதில் ராஜாவாக இருப்பார்கள். பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகள் மேல் இருக்கும் அக்கறை, அந்தப் பிள்ளைகளுக்கு தங்கள் மேல் இருக்காதா என்ன?

ஒவ்வொரு பெற்றோர்களும் எங்கே தனது பிள்ளை விழுந்துவிடுவானோ என்று அவனைத் தாங்கிப்பிடித்து பாதுகாக்கிறார்களே தவிர, ஒருமுறை நம்பிக்கை வைத்து கையை விட்டு பார்ப்பதில்லை. விட்டுப் பாருங்கள்! அவன் விழுந்து விழுந்தாவது வாழ்க்கையை கற்றுக்கொண்டு முன்னேறி வருவான். உங்கள் பிள்ளைகளின் லட்சியம் பெரிதோ சிறிதோ துணை நில்லுங்கள். வாழ்க்கை என்ற ஒரு வழிச்சாலையில் நீங்கள் அவனுக்கு அறிவுரை மட்டுமே வழங்காமல், அவன் போக்கில் சென்று அவனோடு ஒன்றாகப் பயணியுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com