PCOS பிரச்சனையா? உடல் எடை அதிகமாகுதுனு கவலையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

PCOS பிரச்சனையா? உடல் எடை அதிகமாகுதுனு கவலையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!
Editor 1

PCOS என்பது கடந்த சில ஆண்டுகளாக இந்திய பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி இருக்கிறது. நாட்டில் சுமார் 9%-க்கும் அதிகமான இளம் பெண்களுக்கு PCOS பிரச்சனை காணப்படுகிறது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் குறுக்கிடும் ஒரு ஹார்மோன் நிலை ஆகும். இது ஒரு கருப்பை அல்லது இரண்டிலும் சிறிய நீர்க்கட்டிகள் உருவாக வழிவகுக்கும் கருவுறுதலில் சிக்கல் மற்றும் கர்ப்ப காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். PCOS கொண்ட பெண்களுக்கு சில தீவிர உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். டைப் 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம் மற்றும் ரத்த நாளங்களில் பிரச்சனைகள் மற்றும் கருப்பை புற்றுநோய் உள்ளிட்டவை அடங்கும். அதே போல PCOS உள்ள பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் திறனில் பிரச்சனைகள் இருக்கும்.

உடல் பருமன், எடை அதிகரிப்பு, முகப்பரு, சீரற்ற மாதவிடாய், உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, கருவுறுதலில் சிக்கல், தலைமுடி உதிர் ஆகியவையே PCOS உடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டியது அவசியமாகும்.

PCOS அல்லது இதன் அறிகுறிகளை கொண்ட பெண்கள் எப்போதுமே சுயமருத்துவம் செய்து கொள்ள கூடாது. உரிய மருத்துவ நிபுணர்களை அணுகி மருத்துவ உதவி பெற்று கொள்ள வேண்டும். இன்டர்நெட்டில் காணப்படும் எடை இழப்பு திட்டங்களை நிபுணர்களின் அறிவுரை இல்லாமல் மேற்கொள்ள கூடாது.

PCOS மற்றும் உடல் பருமன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழமான தொடர்புடையவை. PCOS சிக்கல் கொண்ட ஒரு பெண் உடல் எடையை குறைப்பதில் மிகவு சிக்கல் எதிர்கொள்ள நேரிடுகிறது. PCOS-ன் இனப்பெருக்க மற்றும் வளர்சிதை மாற்ற அறிகுறிகள் உடல் பருமன் காரணமாக மோசமடைகின்றன. எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை PCOS வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. PCOS உள்ள பெண்களில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான நிலை. இந்த நிலையில் உள்ள பெண்களில் 40-80% பேர் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே PCOS உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க பேரியாட்ரிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் அபர்ணா பாஸ்கர் சில டிப்ஸ்களை ஷேர் செய்து கொண்டுள்ளார்.

நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்க கூடாது. சீரான இடைவெளியில் சரியான நேரம் மற்றும் சரியான அளவு உணவு எடுத்த கொள்ள வேண்டும். அதே போல ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிடாமல், 5 முறை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளலாம். எப்போது சாப்பிட்டாலும் அரை வயிறு மட்டுமே நிரம்புமாறு சாப்பிட வேண்டும்.

தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தினமும் இரவில் 8 மணி நேரம் நிம்மதியான தூக்கத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தினமும் போதுமான அளவு புரோட்டின் எடுத்து கொள்ள வேண்டும்.

வாரம் முழுவதும் இல்லாவிட்டாலும் குறைந்தது 5 நாட்கள் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக வாக்கிங், ரன்னிங், ஜாகிங், நீச்சல், யோகாவில் ஈடுபடலாம்.

Editor 1

PCOS உள்ள பெண்கள் எடை விஷயத்தில் அதிக கவனமாக இருக்க எதை டயட்டில் சேர்க்க வேண்டும் மற்றும் சேர்க்க கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்காக உணவு நிபுணரின் உதவியை பெறலாம். நாள் தவறாமல் டயட்டில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து கலோரி நுகர்வை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஃபைபர் அதிகம், சர்க்கரை குறைவாக உள்ள உணவுகளை எடுக்க வேண்டும்.

PCOS கொண்டவர்கள் உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலானது, ஆனால் சாத்தியமற்றது அல்ல. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இல்லாத ஒருவரை விட உடல் எடையை குறைக்க அதிக நேரம் ஆகலாம். எனவே சோர்ந்து விடாமல் முயற்சிகளை செய்ய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com