

புத்தாண்டு பிறக்கப்போகிறது என்றாலே பலரும் பல்வேறு உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் பிறக்கப்போகும் இந்தப் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கழிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய சில விதிகளை இந்தப் பதிவில் காண்போம்.
* உற்சாகமான மனநிலையில் அவசரப்பட்டு உங்களால் முடியாத எந்த வாக்குறுதிகளையும் எவருக்கும் தராதீர்கள்.
* சுற்றுலாக்களில் குடும்பமாகச் சென்று அங்கு பார்த்த அனுபவங்களை சேகரித்து வாருங்கள். புகைப்படங்கள் நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்.
* சின்னச் சின்ன வேலைகளை தள்ளிப்போடாதீர்கள். ஐந்து நிமிடங்களில் முடிகிற வேலை என்றால் அதை அன்றே, அப்போதே முடித்து விடுங்கள்.
* நீங்கள் பேசும் வார்த்தைகளில் எப்போதும் கவனமாக இருங்கள். உங்கள் உதடுகளைத் தாண்டி மோசமான வார்த்தைகள் வெளியில் வந்து விட்டால், ஒருவேளை அது மன்னிக்கப்படலாம். ஆனால், சிலர் அதை மறக்காமல் இருப்பர்.
* உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்தும்போது, நீங்கள் அதுவரை தொலைத்து இருந்த மகிழ்ச்சி உங்களிடமே திரும்ப வந்துவிடும்.
* நேர்மறை எண்ணங்களை மனதில் கொண்டுவர முடியவில்லை என்றால் கொஞ்சம் அமைதியாகவாவது இருக்கலாம். தியானம் செய்யலாம்.
* உங்கள் முதுகுக்குப் பின்னால் வம்பு பேசுகிறவர்களை நினைத்து வருந்தாதீர்கள். அவர்கள் உங்களுக்குப் பின்னாலேயே இருக்க ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்.
* காலையில் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் என்றால் அதுவரை செய்வதற்கு ஏதாவது ஒரு வேலைகளை வைத்துக் கொள்ளுங்கள். சும்மா இருந்தால் சோம்பலே உங்களைத் தாமதப்படுத்தி விடும்.
* எந்த இடத்துக்குக் கிளம்பும்போதும் குறித்த நேரத்துக்கு பத்து நிமிடங்கள் முன்பாக சென்று விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் பதற்றம், டென்ஷன், படபடப்பு எப்போதும் உங்களை நெருங்காது.
* காலை உணவை எப்போதும் தவிர்க்காதீர்கள். புரதமும் நல்ல கொழுப்பும் நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுங்கள். தினமும் எல்லா வேளை உணவையும் சரியான நேரத்தில் சாப்பிடப் பழகுங்கள்.
* ஒவ்வொரு வேளை உணவையும் இத்தனை நிமிடங்களில் சாப்பிடுவது என அளவு நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஓவராக சாப்பிடுவதை இது தடுக்கும். அதற்காக வேகமாகவும் சாப்பிடாதீர்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் டயட்டில் அதிகம் இருக்கட்டும்.
* சாப்பிடும்போது சாப்பிட மட்டும் செய்யுங்கள். டிவி பார்ப்பது, செல்போனில் நோண்டுவது, படிப்பது, புத்தகங்கள் படிப்பது வேண்டாம். உங்கள் கவனம் உணவிலேயே இருக்கட்டும்.
* இயன்றவரை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தாமல் பணமாகக் கடைகளில் கொடுங்கள். செலவாகும் பணம் எவ்வளவு என்பது அப்போதுதான் உங்கள் உணர்வுகளில் பதிவாகும். இதனால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம்.
* வீடுகளில் குப்பை எதுவும் சேராமல் இருக்க ஒரே வழி புதிய பொருள் எதை வாங்கும்போது பழையதை வெளியேற்றி விடுங்கள். சின்னதாக குக்கர் வாங்கினாலும் பழைய குக்கரை எக்ஸ்சேஞ் ஆஃபரில் அல்லது தேவைப்படும் வேறு யாருக்காவது கொடுத்து விடுங்கள். துணிகளும் நிறைய வாங்கினால், பழையன இருந்தால் அதனையும் வேறு யாருக்காவது கொடுத்து விடலாம்.
* ‘ஏன் இப்படி இருக்கே? என்ன இப்படி செய்துவிட்டே?’ என உங்களைப் பற்றி நீங்களே தப்பாக நினைக்கவும். உங்களை குற்ற உணர்வு கொள்ள வைக்கும்படி எவரையும் அனுமதிக்காதீர்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கவும் புத்தாண்டில் மேற்சொன்ன விதிகளைக் கடைப்பிடித்தால் குடும்பம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.