
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது உலகமெங்கும் முக்கியமான இடம் பிடித்துள்ளது. இதில் இடம், மொழி, இனம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் செல்லப்பிராணிகளை நேசிப்பவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே மதித்து தங்கள் அன்பை அவற்றின் மீது காட்டுவதை அறிவோம்.
அன்று கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஆடு, மாடு, கோழி, நாய்கள் வளர்க்கப்பட்டன. இன்று நகரங்கள் பெருகிவிட்ட நிலையில், செல்லப்பிராணிகளின் வரிசையில் நாய்களும் பூனைகளும் மிக அதிக அளவில் இடம்பெறுகின்றன. அடுத்து, ‘லவ் பேர்ட்ஸ்’ எனப்படும் பறவைகளும், வாஸ்துவில் குறிப்பிடப்படும் மீன்களும் தற்போது அதிகப் பிரபலமாகியுள்ளது. சரி இவற்றை வீட்டில் வளர்ப்பதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
பல்வேறு கலாசாரங்களில், சில செல்லப்பிராணிகள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டம் அல்லது நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. பெரும்பாலும் நல்ல அதிர்ஷ்டம் அல்லது செழிப்புடன் தொடர்புடைய சில செல்லப்பிராணிகளாக உலகளவில் அதிக கவனம் பெற்றவை எவை தெரியுமா?
நாம் சாதாரணமாக நினைக்கும் பூனைகள் பல கலாசாரங்களில், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. உதாரணமாக, ஜப்பானிய கலாசாரத்தில் பூனை நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக நம்பப்படுகிறது. நமது நாட்டிலும் பூனைகள் ஐஸ்வர்யத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. பூனைகளுக்கு பால் ஊற்றி பராமரிப்பது செல்வம் தரும் என்ற கருத்தும் உண்டு.
அடுத்து, மீன்கள். தொட்டியில் வண்ணமயமான மீன்களை வைத்திருப்பது ஃபெங் சுய் போன்ற சீன நடைமுறை கலாசாரங்களில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது. நம் ஊரிலும் மீன்கள் வளர்ப்பதில் ஆர்வம் பெருகியுள்ளது. நமது ஆலயங்களில் இருக்கும் குளங்களில் உள்ள மீன்களுக்கு உணவு வழங்கினால் நன்மை பெறலாம் என்ற கருத்தும் இதனடிப்படையில்தான்.
அடுத்து, சீன கலாசாரம் போன்றவற்றில் ஆமைகள் பெரும்பாலும் நீண்ட ஆயுள், நிம்மதி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையவையாக உள்ளன. வாஸ்து நிபுணர்கள் கூற்றின்படி தற்போது நிஜ ஆமைகள் இல்லை எனினும் ஆமை வடிவங்களை வீட்டில் வைத்திருப்பதை நம்மில் பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
இவை மட்டுமின்றி, நாய்கள் செல்லப்பிராணி வரிசையில் அதிக இடம்பிடித்துள்ளன. கலாசார நம்பிக்கைகளைப் பொறுத்து, செல்லப்பிராணிகள் செழிப்பு, பாதுகாப்பு அல்லது தோழமை போன்ற பல்வேறு அம்சங்களைக் குறிக்கின்றன. அவை பெரும்பாலும் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் தோழமையையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
ஆனால், அதிர்ஷ்டம் பற்றிய கலாசார நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதற்கு பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவை என்ற கருத்தும் உண்டு. அதிர்ஷ்டம் வேண்டும் என்ற நமது சுயநலத்திற்காக பிராணிகளை வாங்கி சரியாக பராமரிக்கவில்லை எனில், அதுவே நமக்கு பாதிப்பைத் தரும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
அக்கறையான பராமரிப்பு செல்லப்பிராணிகளுக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்வான மனநிலையை வழங்குகிறது. அன்பான பராமரிப்பு செல்லப்பிராணிகளுக்கும் உரிமையாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துகிறது. இதனால் மன அழுத்தங்கள் குறைந்து மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். செல்லப்பிராணிகளால் அதிர்ஷ்டம் தானே வரும்.