

இப்போது பலருக்கும் இருக்கும் ஒரு மோசமான பழக்கம் என்னவென்றால், வீட்டில் இருப்பவர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ நேரில் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென போனை எடுத்துப் பார்ப்பதுதான். ஆங்கிலத்தில் இதற்கு 'பப்பிங்' (Phubbing) என்று பெயர். அதாவது, நேரில் இருக்கும் மனிதரை மதிக்காமல் போன் திரைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும்.சாதாரணமாகத் தெரியும் இந்த ஒரு பழக்கம், உறவுகளுக்குள் இருக்கும் அன்பையும் நட்பையும் எப்படி மெல்ல மெல்ல அழிக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக, மனிதர்கள் எப்போதுமே கூட்டமாக வாழப்பழகிய சமூக விலங்குகள். பல லட்சம் ஆண்டு மனித வரலாற்றில், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதும், முகபாவனைகளைக் கவனிப்பதும்தான் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. ‘நாம் சக மனிதர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்கிற உணர்வை அது நமக்குத் தருகிறது.
ஆனால், நாம் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் நம் முகத்தைப் பார்க்காமல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் மூளையின் ஆதிப்பகுதியான 'அமிக்டலா' (Amygdala) அதை ஒரு ஆபத்தாக அல்லது புறக்கணிப்பாக எடுத்துக்கொள்ளும். ‘நான் பேசுவது உனக்கு முக்கியமாகப் படவில்லையா?’ என்ற கேள்வி எதிரே இருப்பவர் மனதில் தோன்றும். இது நமக்கே தெரியாமல், அடுத்தவர் மனதில் ஒரு கோபத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்கிவிடும்.
ஒரு நல்ல நட்பு மற்றும் உறவுக்கு அடிப்படையே பரஸ்பர நம்பிக்கையும், ‘நம்மைப் புரிந்து கொள்ள இவர் இருக்கிறார்’ என்கிற பாதுகாப்பு உணர்வும்தான். நாம் பேசும்போது நம் கணவரோ, மனைவியோ அல்லது நண்பரோ போனைப் பார்த்துக் கொண்டிருந்தால், அது வெறும் கவனச்சிதறல் என்பதாக மட்டும் கருத்தில் கொள்ளப்படாது; மாறாக, "உன்னை விட எனக்கு இந்த வாட்ஸ்அப் ஃபேஸ்புக் தான் முக்கியம்" என்ற தவறான செய்தியை அவர்களுக்குச் சொல்கிறது.
இந்தத் தொடர்ச்சியான அலட்சியம், பாசப் பிணைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துவிடும். இதனால், மனம் விட்டுப் பேசும் ஆர்வம் குறைந்து, நாளடைவில் ஒரே வீட்டில் இருந்தாலும் கணவன்-மனைவிக்குள் தனிமை என்ற உணர்வு குடியேறிவிடும்.
தம்பதியருக்குள் ஏற்படும் இந்த டிஜிட்டல் அலட்சியம், விவாகரத்து வரை கொண்டு செல்லும் அளவிற்குப் பெரிய சண்டைகளை உருவாக்குகிறது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
பிள்ளைகள் பேசிக்கொண்டிருக்கும்போது பெற்றோர் போனைப் பார்த்துக் கொண்டிருந்தால், அது குழந்தைகளின் சுயமரியாதையையும், சுயமாகச் சிந்திக்கும் திறனையும் கடுமையாகப் பாதிக்கும். ‘நம்மை விட பெற்றோருக்குப் போன்தான் முக்கியம்’ என்று அவர்களை உணரச் செய்துவிடும்.
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது போனைப் பார்த்தால், அந்த நட்பின் உண்மைத்தன்மை போய், அது ஏனோ தானோ என்ற கடமைக்கான சந்திப்பாக மாறிவிடும்.
'போன் இல்லாத நேரம்: தினமும் குறிப்பிட்ட சில நிமிடங்களைப் போன் இல்லாத நேரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தாருடன் அமர்ந்து உணவு உண்ணும் போதும், இரவு தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கண்ணைப் பார்த்துப் பேசுங்கள்: நம்மிடம் யாராவது பேசத் தொடங்கினால், உடனே மொபைல் போனை மேசையில் வையுங்கள். அது எதிரில் இருப்பவர்களுக்கு நாம் தரும் ஆகச்சிறந்த மரியாதையாகும்.
அனுமதி: ஏதாவது அவசர போன் அல்லது குறுஞ்செய்தி வர வேண்டியதிருந்தால், ‘மன்னிக்கவும், ஒரு முக்கியமான மெசேஜ் வர வேண்டியிருக்கிறது; அதை மட்டும் பார்த்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன்’ என்று முன்பே சொல்லி அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
தொழில்நுட்பம் என்பது நமது வாழ்க்கையை எளிதாக்க வந்த ஒரு கருவி மட்டும்தான்; அதுவே வாழ்க்கையாகி விடக்கூடாது. கைபேசியின் திரையில் ஒளிரும் மெசேஜ்களைவிட, நாம் எதிரே அமர்ந்திருக்கும் மனிதரின் கண்களும் அவர் பேசும் வார்த்தைகளும்தான் மிக முக்கியமானவை, மதிப்புமிக்கவை!