

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் தூக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, நாம் எப்படித் தூங்குகிறோம் என்பது மிகவும் முக்கியம். நாம் நன்றாகத் தூங்குவதற்கான சூழலும், மனநிலையும் எவ்வளவு முக்கியமோ, அதேபோலதான் தூங்க பயன்படுத்தும் தலையணையும் முக்கியமானது.
சரியான தலையணையை தேர்ந்தெடுக்கும்போது உங்களது தூக்கம் சிறப்பாக இருப்பது மட்டுமின்றி, உடல் உபாதைகளையும் நீக்குகிறது. ஆனால், தவறான தலைவணையை நீங்கள் பயன்படுத்தினால், பல பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். தலையணையை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கழுத்து வலி: சரியான தூக்கத்திற்கு நாம் சரியான தலையணையை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல் முதல் பாதிப்பாக கழுத்து வலிதான் ஏற்படும். குறிப்பாக, உயரமான தலையணை பயன்படுத்தும்போது, கழுத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, தசையில் பிடிப்பு ஏற்படலாம். இது உங்களின் தூக்க முறைகளை பாதித்து, அசௌகரித்தை ஏற்படுத்தும்.
செரிமான பாதிப்புகள்: தலையணைக்கும் செரிமானத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா? சில நேரங்களில் அதிக உயரம் கொண்ட தலையணையை பயன்படுத்துவது உங்களுக்கு சௌகரியமாக இருந்தாலும், கழுத்து மேலேயும் உடல் பகுதி கீழேயும் இருப்பதால் சரியான சீரமைப்பு இல்லாமல் போகிறது. இப்படி இருப்பது ஆசிட் ரிப்லெக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். இதனால் செரிமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
சரும பாதிப்புகள்: தலையணையை தவறாகப் பயன்படுத்தும்போது முகத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, சரும பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இது முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட வழிவகுக்கும். இதனால் முகத்திற்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால், காலப்போக்கில் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நிரந்தரமாக மாறும் வாய்ப்புள்ளது.
சுவாச பாதிப்புகள்: சரியான தலையணையைப் பயன்படுத்தாதபோது அது சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஆஸ்துமா அல்லது தூக்கத்தில் மூச்சுத் திணறல் பிரச்னை இருப்பவர்களுக்கு அதன் பாதிப்பு அதிகரிக்கலாம். உயரமான தலையணையைப் பயன்படுத்தும்போது சுவாசப் பாதையில் காற்று புகுவது கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பல்வேறு விதமான சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்.
உடல் அமைப்பில் மாற்றம்: நீண்ட காலத்திற்கு தவறான தலைவணையை நீங்கள் பயன்படுத்தும்போது அது உங்கள் ஒட்டுமொத்த தோரணையையே மாற்றிவிடும். இது உங்கள் முதுகுத்தண்டு மற்றும் கழுத்தில் அழுத்தம் கொடுப்பதால், முதுகின் தசைகளில் சிரமத்தை ஏற்படுத்தி, நாள்பட்ட முதுகுவலிக்கு வழிவகுக்கலாம்.
கிரி கணபதி