

வாஸ்து சாஸ்திரத்தின்படி சில படங்கள் அல்லது சிலைகளை வீட்டில் வைத்திருப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. அதனால் பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டின் கட்டுமானத்தையும் வீட்டில் உள்ள பொருட்களையும் வாஸ்துவின்படி குறிப்பிட்ட திசையில் வைத்து வளம் பெறுகிறார்கள். அந்த வகையில் அன்னப்பறவை வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை குறித்தும் அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
கிழக்கு திசையில் அன்னப் பறவைகளின் படம்: வீடு மங்கலகரமானதாக இருக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் ஒரு ஜோடி அன்னப்பறவைகள் இருக்கும் படங்களை வைக்க வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. அன்னப்பறவைகளின் படத்தை மண்டபத்திலோ அல்லது வரவேற்பு அறையிலோ எங்கு வைத்தாலும் அந்த அறையின் கிழக்கு திசையில் வைக்க வேண்டும். மேலும், அவரவர் விரும்பும் இடங்களில் ஒரு ஜோடி அன்னங்கள் அல்லது ஒரு அன்னத்தின் படத்தை வைத்திருப்பது மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது.
வருமானம் அதிகரிக்க இதைச் செய்யுங்கள்: வருமானம் அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்தி நிதி ஆதாயம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டு அன்னங்கள் அல்லது ஒரு அன்னத்தின் படத்தை வரவேற்பறை அல்லது விருந்தினர் அறையில் கிழக்கு திசையில் இருக்கும் சுவரில் மாட்ட நல்ல பலன் கிடைக்கும்.
எதிர்மறை ஆற்றல் நீங்கும்: நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி பெறவும், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கவும், மேலும் நீங்கள் மேற்கொண்டு வரும் தொழில் அல்லது வேலையில் முன்னேற்றம் காணவும் வீட்டில் ஒரு ஜோடி அன்னப் பறவைகளின் படத்தை வைத்திருக்க வேண்டுமென வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
திருமண வாழ்க்கையில் காதல்: ஒரு ஜோடி அன்னப் பறவைகளின் புகைப்படத்தை படுக்கையறையில் வைத்திருப்பதால் பல அதிசயங்கள் நிகழ்கின்றன. இது திருமண வாழ்க்கையில் நேர்மறையான விளைவைக் கொடுப்பதோடு ,கணவன் - மனைவி இடையே பதற்றம் மற்றும் மோதலை குறைத்து அன்பை அதிகரிக்கச் செய்கிறது.
படிப்பு ஞானம்: கல்வி மற்றும் அறிவின் வடிவமாக இருக்கும் சரஸ்வதி தேவியின் வாகனம் அன்னம். ஆகவே, வீட்டின் படிப்பறையில் சரஸ்வதி தேவியின் ஆசிகளை பெற அன்னத்தின் படத்தை வைக்க வேண்டும். இதனால் கலைமகள் குடும்பத்தில் அறிவை வழங்குவதால் அன்னம் இருக்கும் வீட்டில் கல்விக்கு ஒருபோதும் குறை இருக்காது. படிக்கும் குழந்தைகளின் மேசையில் அன்னம் சிலையை வைப்பதால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள்.
வாஸ்து சாஸ்திரம் கூறியுள்ளதுபடி அன்னப்பறவை சிலைகளையோ படங்களையோ அவரவர் வீடுகளில் வாங்கி வைத்து கல்வி, செல்வம் மற்றும் மனநிறைவான வாழ்வைப் பெறுங்கள்.