

பளபளக்கும் பசுமை நிறமுடைய இலைகளும் தூய வெண்மை நிற பூக்களும் உடைய பீஸ் லில்லி (peace lily) எனப்படும் தாவரம் ஃபெங் ஷுய் சாஸ்திரத்தில் மிகவும் போற்றுதலுக்குரிய செடியாகக் கருதப்படுகிறது. இந்த செடி வீட்டிற்குள் நிலவும் தீய சக்திகளை காற்றிலிருந்து வடிகட்டிப் பிரித்தெடுத்து வெளியேற்றவும், நேர்மறை சக்திகளின் அளவை அதிகரிக்கவும் செய்யும். 'ச்சி (Chi)' எனப்படும் தரமான வாழ்விற்குத் தேவைப்படும் சக்தியானது, தூய்மையான காற்றோட்டத்திற்கு இணையானது.
சம நிலைத்தன்மையுடன் வீட்டில் நேர்மறை அதிர்வலைகள் நிறைந்திருக்க பீஸ் லில்லி உதவி புரியும். புதிதாய்ப் பிறந்திருக்கும் புத்தாண்டில் நீங்கள் உங்கள் இலக்கை அடையவும், வளமான வாழ்வு பெறவும் பீஸ் லில்லி செடியை எங்கு வைப்பது, எப்படி வளர்ப்பது என்பதற்கு ஃபெங் ஷுய் கூறும் வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
வரவேற்பறையின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் பீஸ் லில்லி வைப்பது நன்று. கிழக்கு திசையில் வைக்கப்படும் பீஸ் லில்லி நேர்மறை சக்தி, குடும்ப உறவுகளுக்குள் நல்லிணக்கம் மற்றும் நல்ல ஆரோக்கியம் தரும். தென்கிழக்கு திசையில் வளரும் பீஸ் லில்லி நிறைந்த செல்வ வளம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும்.
படுக்கையறை ஜன்னல் ஓரம் வைத்து வளர்க்கப்படும் பீஸ் லில்லி, அமைதியும், உடலுக்கு ஓய்வும் தந்து நல்ல உறக்கம் பெற உதவும். அலுவலக அறை மற்றும் ஸ்டடி ரூமில் வளர்க்கப்படும் பீஸ் லில்லி, மன அழுத்தம் குறையவும், கூர்நோக்கு மற்றும் உற்பத்தியின் அளவு பெருகவும் உதவும். அந்த அறைகளில் உள்ள மின் சாதனங்களிலிருந்து வெளியேறும் எதிர்மறை சக்திகளை சமநிலைப்படுத்தவும் பீஸ் லில்லி உதவி புரியும்.
நுழைவு வாயில் அருகே, வழியை அடைக்காமல் ஓரமாக வைக்கப்படும் இந்தச் செடி நேர்மறை 'ச்சி' அளவை அதிகரிக்கச் செய்யும். கிச்சன், பாத் ரூம் மற்றும் தூசியடைந்த மூலை போன்ற இடங்களில் பீஸ் லில்லி செடியை வைப்பது நல்லதல்ல. காய்ந்த இலைகளை நீக்கி, எப்பொழுதும் இந்த செடியை பசுமை குன்றாமல் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரித்து வந்தால் வலுவான நேர்மறை சக்தி வீட்டில் நிறைந்திருக்கும்.
அமைதி, தூய்மை, உடலை குணப்படுத்தும் தன்மை மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றின் அடையாளமாகவும், மன அழுத்தம் மற்றும் எதிர்மறை சக்திகளை நீக்க உதவும் ஓர் அற்புத தாவரமாகவும் பீஸ் லில்லிக்கு பொருள் கூறுகிறது ஃபெங் ஷுய். எல்லா கால நிலைகளிலும் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கும் செடி ஒன்று வீட்டிற்குள் இருந்தால் அது நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும். நம்மிடமுள்ள நேர்மறை சக்திகளை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். நமது நேர்மையான நடத்தை நமக்கு எந்தவித கஷ்டங்களையும் தராமல், அதிசயிக்கத்தக்க வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.