

இப்பொழுதெல்லாம் ஓய்வு பெற்ற தோழிகள் முதற்கொண்டு அந்தந்த வயதிற்குரிய பெண்மணிகள், அவரவர்களின் நட்பு மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பார்ட்டி, ஃபங்ஷன் என்று செல்லும்பொழுது ட்ரெண்டிங்காக இருக்கிறார்கள். அப்படி அவர்கள் எதில் எல்லாம் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை இப்பதிவில் காண்போம்.
ஆன்மிகப் பயணங்கள்: கருத்தொருமித்த சம வயது உடைய பெண்மணிகள் ஆன்மிகப் பயணமாக நீண்ட நெடிய பயணத்தையும் மேற்கொள்கிறார்கள். இன்னும் சிலர் பஞ்சபூத தலங்கள், வைணவத் தலங்கள், ராகு, கேது தலங்கள் என்று பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி தனி குரூப் டூர் செல்வது இப்போது அதிகரித்து வருகிறது. மேலும், இவர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் குளிர் பிரதேச பயணங்கள், கோடை வாசஸ்தலங்கள் என்று சக்கைப்போடு போடுகிறார்கள். குழுவோடு பயணிப்பதால் பயணச் செலவு சிக்கனமாக அமைவதுடன் நல்ல நட்புறவு மலர்வதால் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார்கள்.
ஆரோக்கியம்: பெண்மணிகள் இப்பொழுது நடை பயில, யோகாசனம் கற்றுக்கொள்ள, பள்ளி, கல்லூரிகளில் படித்து பாதியிலேயே விட்ட கலைகளை கற்றுக்கொள்ள, மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறி, மளிகை மற்றும் துணிமணி ஷாப்பிங் என்று செல்வது முதல் அனைத்திற்கும் ஒரு குழுவாக பயணிப்பதால் காய்கறி முதற்கொண்டு அனைத்தையும் அதிகமாக வாங்கி விட்டால் பங்கு பிரித்துக் கொள்வதிலும் ஈடுபடுகிறார்கள். தனியாக உடற்பயிற்சி செய்வது என்றால் சோம்பல் படுவோம். சமயத்தில் செய்ய மாட்டோம். இப்படிச் சேர்ந்து செல்வதும் செய்வதும் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்கள்.
விழாவில் உற்சாகம்: பார்ட்டி, ஃபங்ஷன், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும்பொழுது குடும்பத்தினர் ஒரே நிற ஆடை, அணிகலன் அணிந்து செல்வது ட்ரெண்டாகி வருகிறது. டிவியில் தெரிவதில் இருந்து போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுப்பது வரை எடுப்பாகத் தெரிகிறது. அது மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கிறது என்கிறார்கள்.
பிறந்த நாள்: தங்கள் வீட்டில் புது வரவு வந்தால் அவர்களுக்கு பெயர் வைக்கும் விழாவிலிருந்து பிறந்த நாள் விழா வரை அவர்களுக்குத் தேவையான பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பாத்ரூமுக்கு தேவையான பொருட்கள், நாப்கின், அந்தந்த மாதத்திற்கான உடைகள் என்று மொத்தமாக வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள்.
இதில் பெற்றவர்களுக்கு எப்படி வாங்குவது என்று தெரியவில்லை என்றால் பிள்ளைகளே ஆண் குழந்தை என்றால் நீல நிறத்திலும், பெண் குழந்தை என்றால் பிங்க் நிற ஆடை முதல் அனைத்து பொருட்களையும் அப்படியே வாங்குமாறு சொல்லித் தருகிறார்கள். இதனால் நாமும் எதை வாங்குவது என்று திண்டாடத் தேவையில்லை. அசத்தலாக வாங்கி அமர்க்களமாகக் கொண்டாட முடிகிறது.
கெட் டு கெதர்: வித்தியாசமான சமையல் முறை, ஏதேனும் ஒரு விளையாட்டு, பாடல் என்று ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஒரு வீட்டில் என்று தோழியர்கள் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதனால் வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு இவர்களுடன் சேர்ந்து அதைப் பார்த்து கொண்டாடி மகிழ ஒரு வாய்ப்பு கிடைப்பதாக சந்தோஷம் அடைகிறார்கள்.
இதில் குறிப்பாக, வேலைக்குச் சென்று ஓய்வு பெற்ற பெண்மணிகள் அப்பொழுதெல்லாம் ஓட்டமும் நடையுமாக இருந்தது வாழ்க்கை. கமிட்மெண்ட் வேறு அதிகமாக இருந்ததால் எதையும் அனுபவிக்க முடியவில்லை. இப்பொழுது எதையும் நிதானித்து செய்வதற்கு நேரமும், பொருளாதாரமும் வழி கொடுத்திருக்கிறது. அதை கொண்டாடி மகிழ்வதில் பேரின்பம் அடைய முடிகிறது என்று கூறுகிறார்கள்.