
மழைக்காலங்களில் அங்கங்கே சில இடங்களில் சேறும் சகதியுமாக இருக்கும். அவற்றில் கால் வைத்து விட்டால் அருவருப்பாக உணர்வோம். ஆனால், சேற்றில் உள்ள பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்தக் கருத்தை வலியுறுத்தத்தான் ஜூன் 29ம் தேதி அன்று ஆண்டுதோறும் சர்வதேச சேறு தினம் கொண்டாடப்படுகிறது. சேற்றில் விளையாடுவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சர்வதேச சேறு தினம்: குழந்தைகள் இயற்கையுடன் இணைவதற்கும் தங்கள் இஷ்டம் போல விளையாடுவதற்கும் இது நல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நேபாளம் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு கல்வியாளர்களின் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக சர்வதேச சேறு தினம் 2009ல் தொடங்கப்பட்டது. சேற்றில் விளையாடும் இன்பத்தை உலகளாவிய அளவில் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகத்தான் இந்த நாளை அவர்கள் உருவாக்கினார்கள். வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் இந்த நாளைக் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
சேற்றில் விளையாடுவதன் நன்மைகள்: மென்மையான, குளிர்ச்சியான தன்மையில் இருக்கும் சேறு சிறு குழந்தைகளின் வெவ்வேறு புலன் அமைப்புகளுக்கு மிகவும் உகந்ததாகும். சேற்றில் விளையாடும்போது குழந்தைகளின் பல்வேறு புலன்கள் இதில் ஈடுபடுகின்றன. அவர்களின் மூளை வளர்ச்சிக்கு இந்த விளையாட்டு மிக முக்கியமானது. சேற்றில் குதித்தல், மிதித்தல் போன்ற செயல்கள் அவர்களது உடலின் பல்வேறு பாகங்களை ஈடுபடுத்தி, அவற்றின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகின்றன.
கற்பனைத் திறன்: குழந்தைகளின் கற்பனைத் திறன்கள் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். சேற்றில் விளையாடும்போது அவை நன்கு வெளிப்படும். அவர்கள் பல்வேறு உருவங்களை செய்யலாம், வீடு கட்டலாம், சிற்பங்களை உருவாக்கலாம், அவற்றுக்கு வண்ணம் தீட்டலாம். ஒவ்வொரு குழந்தைக்கு தனித்துவமான கற்பனை திறன் உண்டு. சேற்றில் விளையாடும்போது அவை இன்னும் அதிகரிக்கின்றன.
கூட்டு மனப்பான்மை: சேற்றில் விளையாடும்போது அதன் மண் வாசனையை அவர்களால் நுகர முடிகிறது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் அவர்கள் விளையாடும்போது அவர்களின் மன அழுத்தமும் பதற்றமும் வெகுவாகக் குறைகிறது. சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும்போது அது ஒரு கூட்டு மனப்பான்மையை உருவாக்குகிறது. அவர்களிடம் திறம்பட தொடர்பு கொள்ளவும் உதவியாக இருக்கிறது.
இயற்கையின் மீது நேசம்: இயற்கையுடன் நேரடித் தொடர்பில் ஈடுபடும்போது சுற்றுச்சூழலுக்கான பொறுப்புணர்வையும் குழந்தைகளிடத்தில் சிறு வயதில் இருந்தே வளர்க்கலாம். அவர்களுக்கு இயற்கையின் மீதான அன்பையும் நேசத்தையும் வளர்க்க சேற்றில் விளையாடுவது ஒரு சிறந்த வழியாகும்.
சேறு விளையாட்டு: சேற்றில் உள்ள இயற்கையான நுண்ணுயிரிகள்( பாக்டீரியக்கள்) குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும். குழந்தைகள் சேற்றில் விளையாடினால் அழுக்காகி விடுவார்களோ என்ற பயத்தை ஒதுக்கிவிட்டு அவர்களை அவ்வப்போது சேற்றில் விளையாட அனுமதிக்க வேண்டும்.
சேறு விளையாட்டுக்கு சிறந்த வகை மண் வண்டல் மற்றும் களிமண். வீட்டுத் தோட்டத்தில் அல்லது முற்றத்தில் மண்ணைப் பரப்பி அதன் மீது களி மண்ணையும் பரப்பி தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதில் பழைய ஆடைகளை அணிவித்து குழந்தைகளை விளையாட விட வேண்டும். அதிலே ஏதாவது கூர்மையான பொருள்கள், விலங்குகளின் கழிவுகள் இருந்தால் அவற்றை அகற்றி விட வேண்டும். சேற்றில் விளையாடி முடித்த பிறகு குழந்தைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவி விடவும். முடிந்தால் குளிக்க வைத்து விடலாம்.