

நாம் எல்லோரும் விடுமுறை நாட்களைக் கொண்டாடவோ அல்லது அலுவலக வேலைக்காகவோ வெளியூர் செல்கிறோம். களைப்புடன் ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும், நாம் செய்யும் முதல் காரியம் கையில் இருக்கும் பைகள் மற்றும் சூட்கேஸ்களைத் தொப்பென்று படுக்கையிலோ அல்லது தரையிலோ வீசிவிட்டு ஓய்வெடுப்பதுதான். ஆனால், இந்த ஒரு சின்ன பழக்கம் உங்கள் பயணத்தையே நரகமாக்கிவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அழைக்காத விருந்தாளிகள்!
நீங்கள் தங்கும் ஹோட்டல் 5 ஸ்டார் வசதி கொண்டதாகக் கூட இருக்கலாம். ஆனால், சுத்தம் என்பது வேறு, பூச்சிகள் இல்லாதது என்பது வேறு. ஆய்வுகளின்படி, ஹோட்டல் அறைகளில் இருக்கும் மெத்தைகள், கார்பெட் விரிக்கப்பட்ட தரைகள் மற்றும் மரச் சாமான்களில் மூட்டைப் பூச்சிகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் அதிகம் வசிக்கின்றன.
நீங்கள் உங்கள் துணிப்பையைத் தரையிலோ அல்லது கட்டிலிலோ வைக்கும்போது, இந்தப் பூச்சிகள் சத்தமில்லாமல் உங்கள் பைக்குள் ஊடுருவிவிடுகின்றன. உங்கள் விடுமுறை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, இந்தப் பூச்சிகளையும் இலவச இணைப்பாக நீங்களே பேக் செய்து கொண்டு செல்கிறீர்கள்.
இதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் மிகச் சிறந்த இடம் 'குளியலறை'. கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால், ஹோட்டல் அறையில் டைல்ஸ் ஒட்டப்பட்ட குளியலறை அல்லது பாத் டப் பகுதியில்தான் பூச்சிகள் மறைந்திருக்க முடியாது. பூச்சிகளுக்கு வழுவழுப்பான டைல்ஸ் மற்றும் குளிர்ந்த தரைகள் பிடிப்பதில்லை. எனவே, அறைக்குள் நுழைந்ததும் உங்கள் லக்கேஜை முதலில் பாத்ரூமில் வையுங்கள்.
பயணங்களின் போது துணிப்பைகளை விட, உறுதியான பெட்டிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில், துணிப்பைகளில் பூச்சிகள் எளிதாக முட்டையிடும். ஆனால் பிளாஸ்டிக் அல்லது கடினமான பரப்புகளில் அவற்றால் ஒட்ட முடியாது. அதேபோல, மெட்டல் லக்கேஜ் ரேக்குகளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம். மரத்தாலான ஸ்டாண்டுகளில் பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது.
வீடு திரும்பியதும் செய்ய வேண்டியவை!
பயணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும், அவசரமாகப் பையைத் திறந்து துணிகளைக் கொட்டாதீர்கள். வீட்டிற்கு வெளியிலேயே ஒரு நல்ல டார்ச் லைட் கொண்டு பையின் சக்கரங்கள், ஜிப் இடுக்குகள் மற்றும் கைப்பிடிகளை நன்கு சோதித்துப் பாருங்கள். முடிந்தவரை வெந்நீரில் துணிகளைத் துவைப்பது அல்லது அதிக வெப்பநிலையில் ஸ்டீம் செய்வது பூச்சிகளை அழிக்கும். ஒருவேளை உங்கள் பையில் பூச்சிகள் இருப்பது தெரிந்தால், பிரத்யேகமான பூச்சி விரட்டி ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துங்கள்.
ஹோட்டல் அறையில் லக்கேஜை எங்கே வைக்கிறோம் என்பதில் காட்டும் சிறு கவனம், பெரும் தலைவலியிலிருந்து உங்களைக் காப்பாற்றும். அடுத்த முறை பயணம் செல்லும்போது, உங்கள் சூட்கேஸை பாத்ரூமில் வைக்கும் தந்திரத்தைக் கடைப்பிடியுங்கள்.