வீட்டின் பின்புறம் அதிக இடமிருந்தால் அதில் பூஞ்செடிகள், கீரைகள், சில மரங்கள் வைத்து வளர்க்கலாம். ஆனால், சில வகையான செடிகளையும் மரங்களையும் வீட்டுக்கு அருகில் வைத்து வளர்க்கக் கூடாது. வீட்டுக்கு அருகில் வைத்து வளர்க்கப்படும் தாவரங்கள் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாகவும், வசிக்கும் வீட்டிற்கு நல்லிணக்கம் மற்றும் அமைதியை தருவதாகவும் இருக்க வேண்டும். அப்படி வீட்டுக்கு அருகில் வளர்க்கக் கூடாத சில தாவரங்களும் அதற்கான காரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.
புளிய மரம்: வீட்டின் பின்புறத்தில் நிறைய இடம் இருந்தாலும் புளிய மரத்தை வளர்க்கக் கூடாது. ஏனென்றால், இது எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் ஈர்க்கும் என்று கருதப்படுகிறது. வீட்டில் உள்ளவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை இது தடுக்கிறது. மேலும், புளிய மரங்கள் பெரிதாக வளரக்கூடியவை. இவற்றுக்கு நிறைய இடம் தேவை. வீட்டில் வைத்து வளர்க்கும்போது இது வீட்டின் காம்பவுண்ட் சுவர் மற்றும் வீட்டில் அமைப்பை பாதிக்கக்கூடும்.
பேரிச்சை மரம்: இந்த மரம் நிதி நெருக்கடிகளுடன் தொடர்புடையது. வாஸ்து கொள்கையின்படி சாதகமற்ற தேர்வாக இது இருக்கிறது. இந்த மரங்களுக்கு நிறைய வெளிச்சமும் இடமும் தேவை. அவை பெரும்பாலும் வீட்டிற்குள் கிடைக்காது.
பருத்திச் செடிகள்: பருத்திச் செடிகளில் முட்கள் இருக்கும். இவை வீட்டிற்கு துரதிர்ஷ்டம் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகளைக் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை, செல்வ வளத்தை பாதிக்கும் சூழ்நிலைகளை இது உருவாக்கும். மேலும், பருத்தி முழுதாக வெடிக்கும்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் ரீதியான பிரச்னைகளை உண்டாக்கும். காடு, தோட்டங்களில் வைத்து வளர்க்க ஏற்றது. வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றது அல்ல.
ஆலமரம்: ஆலமரம் வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு ஏற்றது அல்ல ஏனென்றால், அவற்றின் வேர் பூமியில் ஆழப் பதிந்து கட்டடத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும். இந்த மரத்திற்கு குறிப்பிடத்தக்க இடமும் வெளிச்சமும் தேவைப்படுகிறது. வீட்டில் வைத்து இதை வளர்க்க முடியாது.
போன்சாய் மரங்கள்: போன்சாய் மரங்கள் வளர்ச்சிக் குன்றி குட்டையாக இருக்கும். இதனால் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. செழிப்பு மற்றும் வெற்றியைத் தடுப்பதாக நம்பப்படுகிறது. தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வளர்ச்சியில் தடைகளை உருவாக்குகிறது. இதன் சிறிய அளவு உயிர்சக்திகளின் குறைபாட்டை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. வீட்டிற்குள் இருண்ட சூழ்நிலைக்கு வழிவகுக்கும். குடும்ப உறவுகளையும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதிக்கும். எனவே இது வீட்டில் வளர்க்க ஏற்றது அல்ல.
சப்பாத்திக்கள்ளி: இதில் முட்கள் நிறைந்திருப்பதால் அசுபமாக கருதப்படுகிறது. வீட்டுச் சூழலில் வளரும்போது மோதல்கள், மன அழுத்தம் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும். மேலும், இது எதிர்மறை ஆற்றல்களை வெளியிடுவதாகக் கருதப்படுகிறது.
இங்கிலீஷ் ஐ.வி: இதன் விரைவான வளர்ச்சி மற்றும் கொடி போன்ற அமைப்பின் காரணமாக பெரும்பாலும் ஆக்கிரமிப்பு தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. வீட்டிற்குள் வைத்து வளர்த்தால் இதனுடைய கட்டுப்பாடற்ற விரிவாக்கம் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலும், இது எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.