உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம். சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள். அதாவது, தை மாதம் முதல் நாள் உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும்.
தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி வரை இருக்கிறது. இந்த ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். இது முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதை தட்சிணாயனம் என்று அழைக்கிறார்கள்.
சூரியன் மிதுனத்திலிருந்து மகர ராசியில் நுழையும் நேரம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. உத்தராயணத்தின் ஆரம்ப தினம் ஜனவரி 14ம் தேதி. அதனால்தான் இந்த நாள் வடக்கு மாநிலங்களில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தென்னிந்தியாவில் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
உத்தராயணம் பிறக்கும் நாள் கடவுளின் நாள் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இதை உத்தராயண புண்ய காலம் என்று அழைக்கிறார்கள். எனவே, புதிய வேலை, திருமணம் போன்ற மங்கல காரியங்களை இம்மாதத்தில் தொடங்குவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
நமக்கு உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரண்டு காலங்கள் கூடிய ஓர் ஆண்டே தேவர்களின் ஒரு நாளாகக் கருதப்படுகிறது. இவற்றுள் உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுதாகவும், தட்சிணாயனம் என்பது தேவர்களின் இரவுப் பொழுதாகவும் கூறப்படுகிறது.
சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம். உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும்.
அதிகபட்ச ஒளியைக் கொண்ட ஆறு மாத உத்தராயண புண்ய காலத்தில் யாருக்காவது உயிர் பிரிந்தால் அவர் மோட்சத்தை அடைவார் என்றும் அவருக்கு மறுபிறப்பு இல்லை என்றும் பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். அதனால்தான் பீஷ்ம பிதாமகர் தன்னுடைய உயிர் பிரிவதற்கு உத்தராயண புண்ய காலத்திற்காக முள் படுக்கையில் படுத்து போர்க்களத்திலேயே காத்திருந்தார்.
உத்தராயண புண்ய காலத்தின் தொடக்க நாளான தை மாத முதல் நாளன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அன்று மகர சங்கராந்தி பண்டிகையும் கொண்டாடப்பட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வேளாண்மை செழிக்கவும் சகல உயிர்களின் நலனுக்கும் வேண்டி வழிபடுகிறோம்.